About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 17 July 2023

10. தொண்டரடிப்பொடி ஆழ்வார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

  • அம்சம் - வைஜயந்தி (வநமாலை)
  • அவதார ஸ்தலம் - திருமண்டங்குடி
  • காலம் - கி.பி. 9ம் நூற்றாண்டு
  • வருடம் - பராபவ - கலி பிறந்து 284 ம் வருஷம்
  • மாதம் - மார்கழி
  • திரு நக்ஷத்திரம் - கேட்டை
  • திதி - தேய்பிறை சதுர்த்தசி
  • கிழமை - செவ்வாய்
  • ஆசார்யன் - ஸேனை முதலியார்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்
  • அருளிச் செய்தவை -                                                                                                    1. திருமாலை - முதலாம் ஆயிரம் - 872-916 (45 பாசுரங்கள்),                            2. திருப்பள்ளியெழுச்சி - முதலாம் ஆயிரம் - 917-926 (10 பாசுரங்கள்)
  • பாசுரங்கள் - 55

----------
மங்களாஸாஸநம் செய்த திவ்ய தேச 
ஸ்தலங்கள் - 4; பாசுரங்கள் - 58

  • திருவரங்கம் 55 பாசுரங்கள்
  • திரு அயோத்தி 1 பாசுரம்
  • திரு வடமதுரா 1 பாசுரம்
  • திருப்பாற்கடல் 1 பாசுரம்

----------
பிற பெயர்கள்
விப்ரநாராயணர், திருமண்டங்குடியார், பக்தாங்க்ரி ரேணு, பள்ளியுணர்த்திய பிரான்
----------
“திருமாலை அறியாதார் திருமாலையே அறியாதார்” என்று சொல்லக் கூடிய அளவிற்கு திருமாலை என்கிற ப்ரபந்தத்தைத் தெரிந்து கொள்ளாதவர்கள் திருமாலாகிய ஸ்ரீமந் நாராயணனைத் தெரிந்து கொள்ள முடியாது என்பது கூற்றாகும். எம்பெருமானுக்கு திருப்பள்ளி ழுச்சி பாடியவர்கள் வெகு சிலர். விஸ்வாமித்ர முனிவர் ஸ்ரீராம பிரானுக்கு திருப்பள்ளி ழுச்சி பாடினார் என்று அறிவோம். அதன் பின் தொண்டரடிப் பொடி ழ்வார் ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்குப் பாடியுள்ளார் என்று அறிகிறோம்.

இவர் ஸ்ரீரங்கநாதனைத் தவிர வேறு யாரையும் பாடாதவர். ஸ்ரீரங்கநாதன் ஒருவனையே அர்ச்சாவதாரத்தில் அனுபவித்தவர். இவருடைய ப்ரபந்தங்களில் முக்கியமாக திருமாலையில் நாம சங்கீர்த்தனத்தினுடைய ஏற்றம், அதாவது பெருமாளின் திவ்ய நாமங்களை எப்பொழுதும் நாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்ற வைபவம், மற்றும் எம்பெருமானிடம் எவ்வாறு சரணாகதி செய்வது என்ற விஷயம் தெளிவாக காட்டப்பட்டு உள்ளது.மேலும் அடியார்களை குலத்தைக் கொண்டோ, தனத்தைக் கொண்டோ, அவர்களுடைய ஞானத்தைக் கொண்டோ ஏற்றத் தாழ்வு பார்க்கக் கூடாது என்பதை தெளிவாக எடுத்துக் காட்டியவர்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் தன் திருமாலை பிரபந்தத்தில் பிரளய காலத்தில் சகல லோகங்களையும் தன் உதரத்தில் வைத்து காத்து, ஸ்ருஷ்டி காலத்தில் வெளிப்படுத்திய ஜகத் காரணமான பகவானிடம் ஆசாரியரின் உபதேசம் மூலம் தான் கற்ற அவனது திருநாம பிரபாவத்தால் அடைந்த பேற்றை தெரிவிக்கிறார். உயர்ந்த திருநாம வைபவத்தை அறியாது மக்கள் யமனுக்கு ஆட்படுவதை நினைத்து தவிக்கிறார். பரவாசுதேவனை அன்றி வேறு எந்த தெய்வமும் தஞ்சம் இல்லை என்பதை அறிவுறுத்துகிறார். 'கிழங்கு எடுத்தால் அல்லது விடேன்' (கடைசி ஜீவனையும் கரை சேர்ப்பேன்) என்று மன்னிக் கிடந்திருக்கும் திருவரங்கனின் மேன்மைகளையும் அவனது பக்தர்களின் பெருமைகளையும் அனுபவிக்கிறார். ஸம்சாரம் என்னும் ஸர்ப்பத்தால் தீண்டப்பட்ட ஜீவனுக்கு ஆயுளையும், ஆனந்தத்தையும் கொடுக்கும் அருமருந்தாக இருப்பது எம்பெருமானின் திருநாமமே என்று அறுதியிட்டுக் கூறுகிறார். வாக்கினால் கைங்கரியம் புரிந்து 'புன் கவிதையேலும் எம்பிரார்க்கு இனியவாறே' என்று பகவானை ஏற்கும்படி பிரார்த்திக்கிறார்.

திருப்பள்ளி எழுச்சியில் விடியலின் சிறப்பையும் பகவானுடைய லீலைகளையும் அனுபவித்து தான் சரீரத்தால் செய்யும் புஷ்ப கைங்கர்யத்தை உகந்து அருளும்படி வேண்டி, தன்னை அடியவர்களுக்கு ஆட்படுத்தும்படி பிரார்த்திக்கிறார்.
----------
தனியன் 1
கோதண்டே ஜ்யேஷ்ட நக்ஷத்ரே 
மண்டங்குடி புரோத் பவம்| 
சோளோர் வ்யாம் வநமாலாம்ஸம் 
பக்த பத்ரேணு மாஸ்ரயே||

தனியன் 2
தமேவ மத்வா பரவாஸு தேவம் 
ரங்கே ஸ²யம் ராஜவதர் ஹணியம்|
ப்ராபோதிகீம் யோக்ருத ஸூக்தி மாலாம் 
பக்தாங்க்ரி ரேணும் பகவந்த மீடே||

தனியனின் விளக்கம்
ஸ்ரீ ரங்கநாதனைப் பரவாசு தேவனாகவே பாவித்து அவனை ஓர் அரசனை போல் மிகவும் நளினமாகத் துயிலெழுப்பிய தொண்டரரடிப் பொடி ஆழ்வாரைப் போற்றுகிறேன்.

வாழி திருநாமம்
மண்டங்குடி அதனில் வாழ வந்தோன் வாழியே|
மார்கழியில் கேட்டை நாள் வந்து உதித்தோன் வாழியே|
தெண்டிரை சூழ் அரங்கரையே தெய்வம் என்றான் வாழியே|
திருமாலை ஒன்பதஞ்சும் செப்பினான் வாழியே|
பண்டு திருப்பள்ளியெழுச்சி பத்து உரைத்தான் வாழியே|
பாவையர்கள் கலவிதனைப் பழித்த செல்வன் வாழியே|
தொண்டு செய்து துளபத்தால் துலங்கினான் வாழியே|
தொண்டரடிப்பொடியாழ்வார் துணைப் பதங்கள் வாழியே||

திருநாள் பாட்டு
மன்னிய சீர் மார்கழியில்* கேட்டை இன்று மாநிலத்தீர்*
என்னிதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன்* 
துன்னு புகழ் மாமறையோன்* 
தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால்*
நான்மறையோர் கொண்டாடும் நாள்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment