||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
கோவர்த்தன மலையை தூக்குதல்|
பிருந்தாவன மக்கள் இவ்வாறு மகிழ்ச்சியில் திளைத்திருக்க இந்திரலோகத்தில் இந்திரன் கடும் கோபத்துடன் இருந்தான். தன்னை அலட்சியம் செய்து ஆயர்குல மக்கள் ஒரு மலைக்குப் பூஜை செய்ததைக் கண்ட அவனது மனம் ஆத்திரத்தில் துடித்தது.
ஆயர்குலத்து மக்களையும் அவர்களுக்கு ஆலோசனை கூறிய கிருஷ்ணரையும் பழி வாங்க நினைத்தான். கடும் கோபம் அவனது புத்தியை மறைத்து விட்டது. பகவான் கிருஷ்ணர், மகாவிஷ்ணுவின் அவதாரமே என்பதையும் மறந்தான்.
தேவர்களின் அரசனான இந்திரன், நீருக்கு தேவனான வர்ண தேவனை அழைத்து தனது மேகங்களை திரட்டி கடும் மழையைப் பொழிந்து பிருந்தாவனத்தை அழித்து விடும் படி கட்டளை இட்டான். இந்திரன் மேலும் வாயு தேவனை அழைத்தான். கடும் சூறாவளிக் காற்றாக வீசி பிருந்தாவனத்து மக்களின் வீடு வாசல்களையும் மரங்களையும் அழிக்கும் படி கட்டளை இட்டான். பிருந்தாவனத்தில் பெரும் புயல் உண்டாகியது. கடும் மழை பெய்தது. சூறாவளிக் காற்று சுழன்று அடித்தது. வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மரங்களும் குடிசைகளும் கடும் காற்றில் சரிந்து வீழ்ந்தன. ஆயர்குலத்து ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஒதுங்குவதற்கு இடமின்றி அங்கும் இங்கும் ஓடினார்கள். பசுக்களும் வளர்ப்புப் பிராணிகளும் பரிதாபமாக அலறின. எங்களைக் காப்பதற்கு யாரும் இல்லையா என்ற மக்கள் ஓலமிட்டு அழுதார்கள்.
அனைவரும் கிருஷ்ணரிடம் தஞ்சம் அடைந்தார்கள். கிருஷ்ணர் புன்னகையுடன் அவர்களைத் தேற்றினார். என் அருமைத் தந்தையே! தாயே! ஆயர்குலத்து மக்களே! நீங்கள் யாரும் கலங்க வேண்டாம். இது இந்திரன் நடத்தும் விபரீத விளையாட்டு. ஆனால் நமது பூஜையை ஏற்றுக் கொண்ட கோவர்த்தன மலை இப்போதும் நம்மைக் காக்கும். வாருங்கள். உங்கள் பசுக்களையும் மற்றும் வளர்ப்புப் பிராணிகளையும் அழைத்துக் கொண்டு வாருங்கள். எல்லோரும் கோவர்த்தன மலைக்கே போவோம் என்று கூறினார். கிருஷ்ணர் முன்னே நடக்க நந்தகோபர் யசோதை மற்றும் ஆயர்குலத்து மக்கள் அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து நடந்தார்கள். பசுக்களும் ஆடுகள் கோழிகள் நாய்கள் பூனைகள் முதலிய வளர்ப்புப்பிராணிகளும் அவர்களுடன் நடந்து சென்றன. அந்தக் கூட்டத்தின் முன்னே நடந்து கோவர்த்தன மலையை அடைந்த கிருஷ்ணர் ஒரு கணங்கூடத் தாமதிக்காமல் அந்த மலையைத் தம் இரு கைகளாலும் தூக்கினார்.
ஒரு குழந்தை தனது பொம்மையைத் தூக்குவது போல் அவ்வளவு எளிதாக கிருஷ்ணர் அந்தப் பெரிய மலையைத் தூக்கினார். தலைக்கு மேலே அதை உயர்த்திய கிருஷ்ணர் தமது இடது கரத்தின் சிறு விரல் நுனியில் அந்தப் பெரிய மலையை நிலையாக நிறுத்திக் கொண்டார். பின்னர் தம் மக்களை அன்புடன் அழைத்தார். பிருந்தாவனத்து மக்கள் அனைவரும் தமது வளர்ப்புப் பிராணிகளுடன் அந்த மலையின் கீழே அமர்ந்தார்கள். ஆயிரக்கணக்கான அந்த மக்கள் கூட்டத்திற்கு கோவர்த்தன மலை ஒரு குடை போன்று விளங்கியது. வெளியே கடும் மழை பெய்தது. காற்று ஓ என்று வீசியது. ஆனால் பிருந்தாவனத்து மக்கள் அனைவரும் எவ்வித கஷ்டமும் இன்றி பகவான் கிருஷ்ணரின் பாதுகாப்பில் மலைக்குடையின் நிழலில் ஆனந்தமாக இருந்தார்கள். இவ்வாறு ஏழு நாட்கள் மழை தொடர்ந்து பெய்தது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்