About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 15 September 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - நாற்பத்தி இரண்டாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

042 மூலம் என்று அழைத்தேனோ கஜராஜனைப் போலே|

கஜேந்திர மோட்சம் பாகவத புராணத்தின் எட்டாவது நூலில் பகவான் விஷ்ணு, முதலை பிடியில் சிக்கிய கஜேந்திரன் எனும் யானையின் அபயக் குரலைக் கேட்டவுடன் நேரில் தோன்றி யானைக்கு மோட்சம் அளித்ததை விளக்குகிறது. இக்கதையை வியாசரின் மகனான சுகப் பிரம்மம், மன்னர் பரிக்க்ஷித்துவிற்கு கூறியதாக அமைகிறது. 


கஜேந்திர மோட்ச வரலாறானது வைணவ சமயத்தின் சரணாகதி தத்துவத்திற்கு உதாரணமாக உள்ளது. இங்கு கஜேந்திரன் மனிதனையும், முதலை அவன் பாவங்களும், சேற்றுக்குளமாக சம்சாரமும், என்றும் போல் ஆபத்தில் இருந்து காக்கும் கடவுளாக ஸ்ரீமன் நாராயணனையும் குறிக்கிறது!


முதலையின் பிடியில் இருந்த கஜேந்திரன், விஷ்ணுவை நோக்கி துதித்த பாடல், கஜேந்திர ஸ்துதியாக போற்றப்படுகிறது. இது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் முதல் சுலோகம் ஆகும்.

தேவேந்திரனுக்கு உரிய திரிகூட மலையில் கஜேந்திரன் என்னும் பெயர் கொண்ட யானை, யானை கூட்டத்தின் தலைவனாக வாழ்ந்து வந்தது. ஒரு நாள், தாகம் தணிக்க தனது யானை கூட்டத்துடன் நீர்நிலையை நோக்கிச் சென்றது. குட்டி யானைகள் விளையாடிக் கொண்டு இருக்க, கஜேந்திரன் நீருக்குள் இறங்க முற்பட்ட பொழுது, அந்த குளத்தில் வாழும் ஒரு முதலை கஜேந்திரனின் கால்களை பற்றியது. 


முதலையின் வாயில் அகப்பட்ட கால்களுடன் உயிருக்கு போராடிய கஜேந்திரனை மற்ற யானைகள் காப்பாற்ற முயன்று தோல்வியுற்றன. தம் வலிமை எல்லாம் திரட்டி அவை கஜேந்திரனை மீட்க முயற்சித்தும் ஒரு பலனும் அளிக்கவில்லை. பின்னர் கஜேந்திரனின் காலம் நெருங்கி விட்டது, இனி உயிர் பிழைக்க வழியில்லை என்று உணர்ந்து, அவை ஒவ்வொன்றாக விலகிச் சென்றன.


நாட்கள் சென்று கொண்டிருந்தன, ஆயினும், முதலையின் பிடி விட்டபாடில்லை! இரண்டும் சக்தியை இழந்து ஓய்ந்தன. தனது இறுதி காலம் நெருங்குவதை உணர்ந்த யானை, ஒரு தாமரை மலரை தனது தும்பிக்கையால் பற்றி வான் நோக்கி “ஆதிமூலமே” என பெருமாளை நோக்கிச் சரணாகதி செய்தது. தனது பக்தனின் துயர் துடைக்க விரைந்து வந்த பெருமாள் கருட வாகனத்தில் விரைந்து வந்த பெருமாள், யானையின் காலுக்கு ஊறு விளையாமல், முதலையின் தலையைத் தன் சக்ராயுதத்தால் துண்டித்து யானையை விடுவித்து மோட்சம் அளித்தார்.. முதலை கந்தர்வ உருவம் பெற்றது. கந்தர்வன் பெருமாளைத் துதித்துச் சென்றான். இறுதியில் யானையும் மோட்சம் அடைந்தது.


கஜேந்திரன் தனது முற்பிறவில் இந்திரதுய்மன் என்னும் மன்னன். இவர் ஒரு சிறந்த விஷ்ணு பக்தனாக விளங்கினார். அகத்திய முனிவரைக் குலகுருவாகக் கொண்டிருந்தான். ஒருநாள் அவன் அகந்தை கண்களை மறைக்க, அங்கு வந்த அகத்தியரை வரவேற்று உபசரிக்காமல் அலட்சியம் செய்தான். அதனால் வெகுண்ட அகத்தியர், இந்திரத்துய்மனை யானையாகப் பிறக்கும்படி சபித்து விட்டார். இந்திரத்துய்மன் திரிகூடாசலம் என்ற மலையை அடுத்திருந்த காட்டில் யானையாகப் பிறந்தான். யானையாகப் பிறந்தபோதும் திருமால் பக்தி தொடர்ந்தது. அன்றாடம், யானை ஆற்றில் நீராடி, அருகில் இருந்த தாமரைத் தடாகத்திற்குச் செல்லும். அங்கிருந்து பெரிய தாமரை மலர் ஒன்றைத் தன் துதிக்கையில் எடுத்து வந்து, திருமாலின் அர்ச்சாமூர்த்தத்தின் திருவடியில் சமர்ப்பிக்கும். அந்த கஜேந்திரன் தான் முதலையின் வாயில் கட்டுண்டான். 

ஒரு முறை முனிவர் தேவலாவுடன் கந்தர்வ மன்னனும் சேர்ந்து நீராடிக் கொண்டிருக்கும் பொழுது, முனிவர் சூரிய நமஸ்காரம் செய்கையில் விளையாட்டாக கந்தர்வ மன்னன், அவரது கால்களை இழுத்தார். இதில் கோபமடைந்த முனிவர், முதலையாக பிறப்பாய் என சாபமிட்டார். தன் தவறை உணர்ந்த கந்தர்வன் சாப விமோசனம் வேண்டினான். பிறவியின் முடிவில் கஜேந்திரன் கால்களை பிடிக்க, விஷ்ணுவால் சாப விமோசனம் பெறுவாய் என கூறினார்.

அதன்படி கந்தர்வனும் அரசனும் முறையே முதலையாகவும், யானையாகவும் பிறவி எடுத்து தங்களது சாப விமோசனத்தை பெற்றனர்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " கஜேந்திரன் போல், ஸ்ரீமன் நாராயணனே அனைத்திற்கும் ஆதிமூலம் என்பதை உணர்ந்து, அவரை அழைத்து, அவரின் கருணையில் திளைத்தேனோ? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment