About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 15 September 2023

திவ்ய ப்ரபந்தம் - 29 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 29 - பரமனின் இடை
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்

இருங்கை மத களிறு* 
ஈர்க்கின்வனைப்* 
பருங்கிப் பறித்துக்* 
கொண்டோடும் பரமன் தன்* 
நெருங்கு பவளமும்* 
நேர் நாணும் முத்தும்* 
மருங்கும் இருந்தவா காணீரே* 
வாணுதலீர் வந்து காணீரே|

  • இரு கை - பெரிய துதிக்கையை உடைய
  • மத களிறு - மத்த கஜமான குவலயா பீடத்தை
  • ஈர்க்கின்றவனை – தன் வசமாக ஈர்க்கின்ற பாகனை
  • பருங்கி - கொன்று
  • பறித்துக் கொண்டு - யானையின் கொம்புகளை முறித்துக் கொண்டு
  • ஓடு - கம்ஸனிருக்கும் இடத்தைத் தேடிக் கொண்டு ஓடின 
  • பரமன் தன் – பரம புருஷனான கண்ணனுடைய
  • நெருங்கு – அடர்த்தியாகக் கோர்த்த
  • பவளமும் - பவழ வடமும்
  • நேர் நாணும் - அழகிய அரை நாணும்
  • முத்தும் – முத்து வடமும் இவற்றோடே சேர்ந்த
  • மருங்கும் இருந்த வா காணீரே - திருவரையும் இருந்த படியை வந்து பாருங்கள் 
  • வாள் நுதலீர் வந்து காணீரே – ஒளி பொருந்திய நெற்றியை உடைய பெண்களே! வந்து பாருங்கள்

நீண்ட, கரிய துதிக்கையை உடைய குவலயாபீடம் என்ற பெரிய மதங்கொண்ட யானை, கம்சனால் ஏவப்பட்டு கண்ணனைப் பார்த்து சீறி வர அதனுடைய தந்தங்களை சுலபமாக கைகளினால் முறித்து அவைகளாலேயே யானையையும், அதைக் கட்டுபடுத்தி செலுத்தும் பாகனையும் சேர்த்துக் கொன்ற பரமபுருஷனான கண்ணனின் இடையில், பவளமும் முத்தும் பொன் மருங்கும் சேர்த்து நெருக்கமாய் கோர்க்கப்பட்ட நீண்ட அழகிய அரைஞான் கயிறு இருக்கின்ற அழகினை வந்து பாருங்கள்! அவற்றில் எது சிறப்பாய் பொலிகிறது என்பதனையும் வந்து பாருங்கள். பரமனின் பவளக்கொடி அணிந்த இடையினை வந்து பாருங்கள்! என்று ஒளி பொருந்திய நெற்றியினை உடைய பெண்களை அழைக்கிறாள் யசோதை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment