About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 15 September 2023

லீலை கண்ணன் கதைகள் - 35

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கோவர்த்தன விழா|

வருடந்தோறும் ஐப்பசி கார்த்திகை மாதங்களில் ஆயர்கள் இந்திரனுக்கு விழாக் கொண்டாடுவது வழக்கமாக இருந்தது. இந்திரன் தேவர்களுக்கு அரசன். ஆகமங்களுக்குத் தலைவன். அதனால் மேகங்கள் நல்ல மழையை பெய்ய வேண்டும் என்று இந்திரனை வேண்டுவதற்காக அந்த விழா கொண்டாடப்பட்டது. அந்த வருடமும் விழா கொண்டாடப் படுவதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆயர்குலத் தலைவர் நந்தகோபர் விழா ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். இந்திரன் தானே மூவுலகங்களுக்கும் இறைவன் என்று எண்ணிக் கர்வம் அடைந்தான். மும்மூர்த்திகளை வழிபட மறந்தான். அவனது கர்வத்தை உணர்ந்து கொண்ட கிருஷ்ணர் அவனுக்கு நல்ல அறிவு புகட்ட முனைந்தார்.


விழா ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்த தந்தையிடம் சென்றார். “தந்தையே இந்திரனுக்காக இந்த விழாவைக் கொண்டாட வேண்டாம்” என்று கூறினார். நந்தகோபர் வியப்படைந்தார். ஏன் அப்படிச் சொல்கிறாய் கிருஷ்ணா?.. என்று கேட்டார். “தந்தையே இந்திரனுக்கு மேலானவர்களே மும்மூர்த்திகள். அவர்களே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களைச் செய்து உலகங்களையும் உயிர்களையும் வாழ வைக்கிறார்கள். அவர்கள் இல்லாத இடமேயில்லை. இதோ இந்தக் கோவர்த்தன மலையினுள்ளும் அவர்கள் இருந்து நம்மையெல்லாம் வாழவைக்கிறார்கள். மேலும் ஆயர்களான நமது வாழ்க்கையில் கோவர்த்தன மலை முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அதுவே நமக்குச் சுத்தமான தண்ணீரைத் தருகின்றது. நமது பசுக்கள் உண்பதற்குப் பசுமையான புல்லைத் தருகின்றது. ஆதலால் நாம் இந்தக் கோவர்த்தன மலைக்கே பூஜை செய்து விழா எடுக்க வேண்டும் என்று கிருஷ்ணர் கூறினார். கிருஷ்ணர் சொல்லுக்கு மறுப்பு ஏது? நந்தகோபர் சம்மதித்தார். மறுநாள் காலை கோவர்த்தன மலைக்கே பூஜைகள் செய்து விழாக் கொண்டாடுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யும்படி கட்டளையிட்டார்.

மக்கள் யாவரும் ஒன்று சேர்ந்தார்கள். கோவர்த்தன மலையைச் சுத்தம் செய்தார்கள். வாழை மரங்களை நட்டார்கள். மாவிலைத் தோரணங்களைக் கட்டினார்கள். பல வண்ணக் கோலங்களை இட்டார்கள். நெய் விளக்குகளை ஏற்றி வைத்தார்கள். கோவர்த்தன மலை சொர்க்கலோகம் போல் அழகுடன் விளங்கியது. மறுநாட்காலை கோவர்த்தன விழா தொடங்கியது. பிருந்தாவனத்து ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் புது ஆடைகள் அணிந்து அந்த மலையின் அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

பெண்கள் புது அரிசி கொண்டு பொங்கல் சமைத்தார்கள். காய் கறிகள் பழங்கள் கொண்டு விருந்து படைத்தார்கள். ஆண்கள் தமது பசுக்களை வரிசையாக நிற்க வைத்துக் குளிப்பாட்டி அலங்கரித்து நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்துப் பூஜை செய்தார்கள். அந்தணர்கள் மலை அடிவாரத்தில் யாகசாலைகளை ஏற்படுத்தி அவற்றிலே நெய் ஊற்றி நெருப்பு வளர்த்து அகில், சந்தனம் முதலிய வாசனைப் பொருட்களை அந்த நெருப்பிலே இட்டு மந்திரங்கள் ஓதி யாகம் செய்தார்கள். சமைக்கப்பட்ட பொங்கல் மற்றும் சுவையான உணவுப் பொருட்களை மக்கள் அந்த மலையின் அடிவாரத்திலே குவித்தார்கள். அந்த உணவுக்குவியல் மற்றொரு சிறிய மலை போன்று தோற்றமளித்தது.

நந்தகோபர் கிருஷ்ணரை அழைத்தார். மகனே கிருஷ்ணா... நீ சொன்னபடியே உணவுப்பொருட்களை மலையாகக் குவித்துவிட்டோம். இப்போது நமது கோவர்த்தன மலையில் வாழும் தெய்வம் நாம் படைத்த உணவுப் பொருட்களை ஏற்றுக் கொள்ளுமா என்று கேட்டார். கிருஷ்ணர் புன்னகைத்தார். நிச்சயமாக ஏற்றுக் கொள்ளும் என்று பதில் கூறினார். இவ்வாறு கூறிய பின்னர் கிருஷ்ணர் தாமே அந்த மலையின் தெய்வமாக உருவெடுத்தார். மலையின் உச்சியிலே அழகிய பிரமாண்டமான உருவத்துடன் தோன்றினார். அந்த உணவு மலை முழுவதையும் ஒரு நொடிப்பொழுதில் உண்டு முடித்தார். அங்கு சூழ்ந்து நின்று வணங்கிய ஆயர்குல மக்கள் அனைவருக்கும் அருள் வழங்கி மறைந்தார். தங்கள் காணிக்கையைக் கோவர்த்தன மலைத் தெய்வமே நேரில் வந்து ஏற்றுக் கொண்டதைக்கண்டு மக்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்து ஆடிப்பாடினார்கள். அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக உணவருந்திய பின்னர் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்கள். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment