||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
041 மண் பூவை இட்டேனோ குரவநம்பியைப் போலே|
மன்னன் தொண்டைமான் ஆட்சி காலத்தில், திருமலையின் அருகில் குரவபுரம் என்னும் சிற்றூர் இருந்தது. அவ்வூரில், குரவநம்பி என்னும் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பெருமாள் பக்தன் அவன் துணைவியுடன் வாழ்ந்து வந்தான். இருவரும் சிறந்த பெருமாள் பக்தர்களாக இருந்து வந்ததால், அனுதினமும், திருமலைவாசனுக்கு நிவேதனம் பண்ணுவதற்கான மண்பாண்டங்களை கோவிலுக்கு வழங்குவதை தொண்டாக செய்து வந்தனர். தினமும் மீதி இருக்கும் மண்ணில், அனுதினமும் காலையும் இரவும் தன் கைகளால் களிமண்ணால் செய்த பூக்களை தான் செய்த ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சமர்ப்பித்து பூஜை செய்வார். திருமலையப்பனும் அவர் அளிக்கும் புஷ்பத்தை ஏற்று தலையில் சூடிக் கொண்டார்.
ஸ்ரீனிவாச பெருமாள் நிரந்தரமாக இவ்வுலகில் தங்க, திருமலையில் “ஆனந்த நிலையம்” என்னும் கோவில் கட்டிக் கொடுத்த மன்னன் தொண்டைமான், அனுதினமும், தங்கத்தினால் செய்யப்பட்ட தாமரை மலர்கள் கொண்டு பூஜை செய்வார்!! ஒரு நாள், திருமலை கோவிலுக்கும் தன் அரண்மனைக்கும் இடையில் உள்ள இரகசிய பாதை வழியாக கோவில் வந்து சேர்ந்த மன்னன், தான் காலையில் ஸ்ரீநிவாசனுக்கு பூஜித்த தங்க தாமரை மலர்களுக்கு பதில் களிமண்ணால் செய்யப்பட்ட பூக்கள் இருப்பதைக் கண்டார். எதனால் தங்க மலர்கள் மண் மலராக மாறியது என்று ற குழப்பத்துடன் இது பற்றி பெருமாளிடம் மீண்டும் மீண்டும் வினவ,
"அதுவா, அது ஒரு அன்பன் எனக்கு ஆசையாக கொடுத்தான். ஆனால் அவன் சூட்டும் போது என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளான்." என்றார்.
"அப்படி என்ன சுவாமி நிபத்தனை விடுத்துள்ளான், என்னிடம் கூறக் கூடாதா?" என்று அரசர் வினவ
"அவன் அனுமதி இல்லாமல் யாருக்கும் அவனைப் பற்றி சொல்ல கூடாது. எதற்கும் நாளை அவனிடம் அனுமதி கேட்டு உனக்குச் சொல்கிறேன்" என்றார் திருமலைவாசன்.
மறுநாள் தொண்டைமான் சக்ரவர்த்தி வந்து கேட்டு விடுவானே என்று, திருமலையப்பனும் குயவன், எப்போதும் போல மண் புஷ்பத்தைக் கொடுக்கும் போது, "குயவா, ஒரு நிமிஷம் இரு, உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்." என்றார்.
"ஸ்வாமி, என்னிடமா?" என்று குயவன் ஆச்சர்யத்துடன் கேட்க,
"ஆமாம், தொண்டமான் சக்ரவர்த்தி இந்த புஷ்பம் யார் கொடுக்கிறார்கள் என்று கேட்கிறான். நீ தான் சூட்டுகிறாய் என அவனிடம் தெரிவிக்கலாமா?" என்று கேட்டார் ஸ்ரீனிவாச பெருமாள்.
"வேண்டாம் ஸ்வாமி. நான் தான் புஷ்பம் சூடுகிறேன் என்பது யாருக்கும் தெரிய வேண்டாம். நான் செய்வது சாதாரண தொண்டு, அதை உலகம் அறியச் செய்ய வேண்டுமா? வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூடத் தெரியக் கூடாது என்று இருக்கும் போது, சாதாரண ஒரு புஷ்பம் கைங்கர்யம் யாருக்கும் தெரியப்படுத்தாதிர்கள் ஸ்வாமி. அப்படி தெரியப் படுத்தணும் என்றால் எனக்கு உடனே நீங்கள் முக்தி கொடுக்க வேணும்" என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டான் நம்பி.
தர்மசங்கடத்தில் ஆழ்ந்தார் திருமலையப்பன். காலையில் எப்போதும் போல தொண்டமான் சக்ரவர்த்தி வந்தார்.
திருமலையப்பன் நேற்று நடந்த விஷயத்தைக் கூறி, தான் அவனுக்கு முக்தி கொடுக்க தீர்மானித்து விட்டு, மன்னரிடம் புஷ்பம் யார் சமர்ப்பிக்கிறார்கள் என்று கூறினார்.
தங்கமோ மண்ணால் செய்த மலரோ, இறைவனுக்கு இரண்டும் ஒன்று தான். இறைவன் பக்தியையும் மனிதனின் மனதையும் மட்டும் தான் கருத்தில் கொள்வார் என்பதையும் உலகிற்கு உணர்த்தினார்! மன்னன் தொண்டைமான் குரவபுரம் சென்று, குரவநம்பியின் குடிலை அடைந்தார். நடந்தவை அனைத்தையும் கூறினார்! அங்கே ஸ்ரீனிவாச பெருமாளும் வந்தார் குயவனுக்கும் அவன் மனைவிக்கும் முக்தியை அளிக்க. குயவனின் பக்தியை எண்ணி வியந்தார் தொண்டைமான்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "குரவநம்பி போல், எதையும் எதிர் பார்க்காமல், மண் மலர்கள் கொண்டு பூஜித்தேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment