About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 23 February 2024

திவ்ய ப்ரபந்தம் - 93 - பெரியாழ்வார் திருமொழி - 1.7.8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 93 - மணிவண்ணன் வாசுதேவன்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி - எட்டாம் பாசுரம்

பக்கம் கருஞ் சிறுப்பாறை மீதே* 
அருவிகள் பகர்ந்தனைய* 
அக்கு வடம் இழிந்தேறித் தாழ* 
அணி அல்குல் புடை பெயர* 
மக்கள் உலகினிற் பெய்தறியா* 
மணிக் குழவி உருவின்*
தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்* 
தளர் நடை நடவானோ!

  • கரு - கரு நிறமான
  • சிறு - சிறிய
  • பாறை - மலையினுடைய
  • பக்கம் மீது - பக்கத்திலே மேடு பள்ளமுள்ள இடங்களில் பாய்கிற
  • அருவிகள் - நீரருவிகள்
  • பகர்ந்து அனைய - ப்ரகாசிப்பதை போலே 
  • அக்கு வடம் - திரு வரையில் சாத்திய சங்கு மணி வடமானது
  • இழிந்து - தளர்ந்து
  • ஏறித் தாழ - உயர்ந்தும் தாழ்ந்தும் ப்ரகாசிக்கவும்
  • அணி - அழகிய
  • அல்குல் - இடுப்பு (நிதம்பம்)
  • புடை - பக்கங்களிலே
  • பெயர - அசையவும்
  • உலகினில் - உலகத்திலுள்ள
  • மக்கள் - மனிதர்கள்
  • பெய்து அறியா - பெற்றறியாத
  • மணி குழலி - அழகிய குழந்தை 
  • உருவி்ன் - வழவத்தை உடையவனும்
  • தக்க மா மணிவண்ணன் - தகுதியான நீல மணி போன்ற நிறத்தை உடையவனும்
  • வாசுதேவன் - வஸுதேவ புத்திரனுமான தேவ பிரான்
  • தளர் நடை - அழகிய இளம் நடையை
  • நடவானோ - நடக்க மாட்டானோ? நடக்க வேணும்

கண்ணனின் கருநிற இடையில் அணிந்திருந்த சங்கு மணி வடமானது தொடையில் பிரகாசித்து அங்குமிங்குமாக அசைந்தது எப்படியிருந்தது என்றால், கரும் பாறையிலிருந்து பிரகாசமான நீரருவிகள் மேடு பள்ளங்களில் விழுந்து ஓடி வருவது போல் இருந்ததாம். கண்ணனின் திருமேனியழகு இதுவரை மானிடம் கண்டிராதபடி இருந்ததாம். உயர்ந்த நீல ரத்தினம் போன்ற நிறத்தை உடையவனும், வசு தேவரின் புதல்வனுமான கண்ணன் தளர் நடையாக நடந்து வர காத்து நிற்கிறார் ஆழ்வார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 027 - திருக்காவளம்பாடி 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

027. திருக்காவளம்பாடி (திருநாங்கூர்)
இருபத்தி ஏழாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் – 1298 - 1307 - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி 

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

செப்பென் மனிதருக்கு என் செஞ்சொல் தமிழ் மாலை
கைப்பேன் பிற தெய்வம் காண்பாரை எப்போதும்
காவளம் பாடித் திருமால் கால் தாமரை தொழுது
நா வளம் பாடித் திரிவேன் நான்

  • எப்போதும் – நான் எக்காலத்திலும் 
  • என் நெஞ் சொல் தமிழ் மாலை – இன்சொற்கள் நிறைந்த எனது தமிழ்ப் பாமாலையை
  • மனிதருக்கு – மனிதரைப் பற்றி
  • செப்பேன் – ஒரு போதும் பாட மாட்டேன்
  • பிற தெய்வம் காண்பாரை – தேவதாந்தரங்களைத் தரிசிக்கின்ற அவைஷ்ணவரை
  • கைப்பேன் – வெறுப்பேன்
  • காவளம்பாடி திருமால் – திருக்காவளம்பாடி என்னும் திவ்ய ஸ்தலத்தில் எழுந்தருளி உள்ள திருமாலினது
  • கால் தாமரை – திருவடித் தாமரைகளை
  • தொழுது – வணங்கி
  • நா – எனது நாவினால்
  • வளம் பாடி – வளமாகக் கவி பாடிக் கொண்டு 
  • திரிவேன் – யாதொரு கவலையுமின்றி இனிது காலம் கழிப்பேன்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 105

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

தேவர்களின் விஜயம்| 

ஒரு நாள் பிரம்மா தம் பிள்ளைகளையும் மற்ற தேவர்களையும் அழைத்துக் கொண்டு துவாரகைக்கு வந்தார். ஒரு சாதாரண மனிதனைப் போல வாழும் கிருஷ்ணரைப் பார்க்க அவர்கள் வந்தார்கள். கிருஷ்ணரின் அழகைப் பார்த்து அவர்கள் மோகித்து நின்றார்கள். மாலைகளால் அவரை மறைத்து, மிகுந்த பக்தியுடன் அவரைப் பூஜித்தார்கள். மிகச் சிறந்த பிரார்த்தனையான புருஷ சூக்தத்தைச் சொல்லி, பிரம்மா அவரை வணங்கினார்.


பிரம்மா பிறகு தம் கைகளைக் கூப்பிக்கொண்டு, கிருஷ்ணரைப் பார்த்து, "பகவானே! நாங்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் தாங்கள் துஷ்டர்களை அழிப்பதற்காகப் பூலோகம் வந்தீர்கள். தாங்கள் அதைச் செய்து முடித்து, இப்பொழுது எங்கும் தர்மத்தை நிலைநிறுத்திவிட்டீர்கள். விரைவில் பிறக்கப் போகும் கலியுகத்தில் மக்கள் தங்கள் லீலைகளான கதைகளைக் கேட்பதனாலேயே மோட்சம் அடைந்துவிடுவார்கள். எவன் தங்களைத் தியானிக்கிறானோ, அவனுடைய துக்கங்கள் எல்லாம் நீங்கப்பெற்று அவன் சுபிட்சத்துடன் வாழ்வான். தங்கள் பூலோகத்துக்கு வந்த காரியம் முடிந்துவிட்டது. இனி உலகில் உங்களுக்கு ஒரு காரியமும் இல்லை, ஆகவே தயவுகூர்ந்து இந்த உடலை விடுத்து, வைகுண்டம் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

கிருஷ்ணர் "பிரம்மாவே! தாங்கள் இப்பொழுது என்ன கூறினீர்களோ, அதற்கு நான் முன்னமே ஏற்பாடு செய்து விட்டேன். யாதவர்களின் அழிவுக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அது முடிந்ததும் நான் வைகுண்டம் திரும்பிவிடுவேன்" என்றார். 

இதைக் கேட்ட பிரம்மாவும் மற்றவர்களும் அவரை நமஸ்கரித்து விட்டுத் தங்கள் இருப்பிடம் திரும்பினார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 58

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 3

ஸ்கந்தம் 03

“புகழுக்குப் புகழ் சேர்க்கும் பகவானின் திருவிளையாடல்களின் பெருமையைப் பற்றித் திரும்ப திரும்பப் பேசுவதே இறைவன் நமக்கு நாக்கு அளித்ததன் பெரும் பயன். படித்தறிந்த சான்றோர்கள் திருவாய் மலர்ந்து அருளும் இறைவனது திருப்புகழ் அமுதத்தைச் செவியாரப் பருகுவதே செவி படைத்ததன் பயன் என்பதும் சான்றோர்களின் திருவுளம். அவரது மாயை மாயாவிகளையும் மயக்குவது. அந்த பகவானை வணங்குகிறேன்” என்றார் மைத்ரேயர்.


இவற்றைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த வியாசரின் மகனான விதுரர், மேலும் கேட்டார். “மஹரிஷியே! பகவான் அறிவே வடிவானவர், மாறுதலற்றவர், குறைவற்ற நிறைகுணமுள்ளவர். ஆனாலும் நிர்குணமுள்ளவர். அவ்வாறான பகவானுக்கு திருவிளையாடல்களை முன்னிட்டு என்று சொன்னாலும் கூட செயல்களும் குணங்களும் எப்படிப் பொருந்துகின்றன? குழந்தை ஆசையினால் விளையாடுகிறது. ஆனால், இறைவனோ சுபாவத்திலேயே மனநிறைவு பெற்றவர். ஆத்மாராமரானவர். எதிலும் ஒட்டாதவர். அவர் ஏன் திருவிளையாடல்கள் புரிகிறார்? இடம், காலம், சூழல், தன்னியல்பு வேறு எந்த காரணங்களாலும் பாதிக்கப்படாத ஞானமே வடிவான பகவான் எவ்வாறு மாயையுடன் ஒன்றுபடுவார்? அனைத்துயிர்களின் சாட்சியான இறைவனுக்குக் கர்மங்களினால் ஏற்படும் துன்பமோ, ஆனந்தக் குறைவோ எப்படி ஏற்படும்? அறியாமைக் கோட்டைக்குள் மாட்டிக்கொண்டு திண்டாடுகிறேன். தயை கூர்ந்து என் ஐயத்தைத் தெளிவுபடுத்துங்கள்.”

யான் எனது என்ற செருக்கற்ற மைத்ரேயர், புன்னகை மலர்ந்த திருமுகத்தோடு பேசத் துவங்கினார். “ஆன்மா எதிலும் ஒட்டாது. தனிப்பட்டது. கனவில் ஒருவன் தான் வெட்டப்பட்டதாகக் காண்கிறான். ஆனால், உண்மை அதுவல்ல அல்லவா? கனவு கலைந்ததும் உண்மை புலப்படுகிறது. ஆனால், கனவு நீடிக்கும்வரை அது உண்மையென்றே நினைக்கிறான். கனவில் அவன் ஆழ்ந்திருந்த போதும் அவனது உண்மை நிலை இருந்தது. ஆனால் சலனமற்று உறக்கத்தில் இருந்தது. நீரில் நிலவின் பிம்பம் தெரிகிறது. நீரில் அலை ஏற்படும் போது, நிலவு அசைவதுபோல் இருக்கிறது. மேலே நிமிர்ந்து பார்த்தால் நிலவு அசையவில்லை. அசைவது நீர். ஆனால் நிலவு அசைவது போல் தோன்றச் செய்வது மாயை. அது போல் ஆன்மாவுக்கு எந்த குணமும் இல்லை. ஆனால் உடலைக் கொண்டே அறியப்படுவதால் கர்ம வாசனைகளின் பாதிப்புகளான குணங்கள் உள்ளுறையும் ஆன்மாவின் குணங்களாகத் தெரிகின்றன.

உலகின் பற்றுக்களைத் துறந்து அறநெறியைக் கடைப்பிடித்து ஒழுகுபவனுக்கு பகவானின் அருளால் பெற்ற பக்தி யோகத்தினால் மாயையின் தோற்றம் சிறிது சிறிதாக இப்பிறவியிலேயே விலகும். நீருக்கு வடிவம் இல்லை. அது வைக்கப்படும் பாத்திரத்தின் வடிவை எடுத்துக் கொள்கிறது. ஆனால் அதைக் காண இயலும். அதைக் குளிர வைத்தால் பனிக்கட்டியாகிறது. பனிக்கட்டிக்கு ஸ்திரத் தன்மை உண்டு. எனவே வடிவம் கொள்கிறது. காணவும் இயலும். அதே நீரை காய்ச்சினால் ஆவியாகிறது. அப்போது வடிவமும் இல்லை. காணவும் இயலாது. ஒரே நீர் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு குணம் கொண்டதாக விளங்குகிறது. அந்ததந்த திருவிளையாடல்களுக்கு ஏற்ப ஒரே இறைவன் பல்வேறு ரூபங்களையும் ஸ்வபாவங்களையும் ஏற்கிறான். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவனின் கண்கள் பார்ப்பதில்லை. காதுகள் கேட்பதில்லை. அது போல் அந்தர்யாமியான இறைவனிடத்தில் ஈடுபடுட்டதும் பொறிகள் நிலைபெற்று விடுகின்றன. அவனுக்கு விருப்பு, வெறுப்பு முதலிய தோஷங்கள் அழிந்து விடுகின்றன. பகவான் சர்வ சாட்சியாகையால் எதனாலும் பாதிக்கப்படுவது இல்லை. அவனிடம் மனத்தை ஒருமுகப் படுத்திய ஜீவனுக்கும் எந்த பாதிப்பும் இல்லை” என்றார் மைத்ரேயர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்