About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 24 December 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 88

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 58

மஹா வராஹோ கோ³விந்த³:
ஸுஷேண: கநகாங் க³தீ³|
கு³ஹ்யோ க³பீ⁴ரோ க³ஹநோ
கு³ப்தஸ்² சக்ர க³தா³த⁴ர:||

  • 542. மஹா வராஹோ - பகவான் மகா வராஹா என்ற பெரும் பன்றியாக அவதரித்து பூமியைக் காப்பாற்றினார்.
  • 543. கோ³விந்த³ஸ் - தேவர்களால் போற்றப்படுபவர். கடலின் ஆழத்திலிருந்து பூமியை தோண்டி எடுத்தவர். பசுக்களைப் பாதுகாப்பவர். வேதங்களை வழங்குபவர். பூமியை மீட்டவர். உபநிடதங்கள் போன்ற வேத மந்திரங்களால் அறியப்பட்டவர். நகரும் அனைத்து விஷயங்களுக்கும் பொறுப்பானவர். உலகைக் காக்கும் கோவிந்தன். பூமியை உடையவர்.  
  • 544. ஸுஷேணஹ் - சதுரங்க பலமுடையவர். புகழ்பெற்ற படையைக் கொண்டிருக்கிறார். அவருடைய படைத் தளபதியாக விஷ்வக்சேனன் செயல்படுகிறார். 
  • 545. கநகாங் க³தீ³ - அவர் தங்கக் கவசங்கள் மற்றும் அவரது பிரகாசத்தை வெளிப்படுத்தும் மற்ற திரு ஆபரணங்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளார். 
  • 546. கு³ஹ்யோ - மறைக்கப்பட்டவர். அவர் நம் இதயத்தில் மறைந்திருக்கிறார். அறிவு மற்றும் சிந்தனை மூலம் மட்டுமே உணர முடியும். 
  • 547. க³பீ⁴ரோ - கம்பீரமான வடிவமுடையவர். பகவான் ஆழமானவர். வார்த்தைகளாலும் மனதாலும் அளவிட முடியாதவர். அவரது கம்பீரமான ஆளுமையை தோராயமாக மட்டுமே குறிப்பிட முடியும்.
  • 548. க³ஹநோ - அறிய முடியாத ஆழமானவர். அவரை அடைவது அல்லது அவரை அணுகுவது மிகவும் கடினம். ஊடுருவ முடியாதவர். அவர் விழிப்பு, உறக்கம் மற்றும் கனவு நிலை ஆகிய மூன்று நிலைகளிலும் சாட்சியாக இருக்கிறார்.
  • 549. கு³ப்தஸ்² - விசுவாமித்திரர். அநந்தன். கருடன் போன்றவர்களால் பாதுகாக்கப்பட்டவர். மறைந்திருப்பவர். 
  • 550. சக்ர க³தா³த⁴ரஹ - உலகப் பாதுகாப்பிற்காக சக்ரம். கதை முதலான பல திவ்ய ஆயுதங்களை உடையவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.25

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.25 

அவ்யக்தோ யம சிந்த்யோ யம் 
அவிகார் யோய முச்யதே|
தஸ்மா தே³வம் விதி³த்வை நம் 
நாநுஸோ² சிது மர்ஹஸி||

  • அவ்யக்தோ - பார்வைக்கு எட்டாதவன் 
  • அயம் - இந்த ஆத்மா 
  • அசிந்தயோ - சிந்தனைக்கு அப்பாற்பட்டவன் 
  • அயம் - இந்த அத்மா 
  • அவிகார்யோ - மாற்றமில்லாதவன் 
  • அயம் - இந்த ஆத்மா 
  • உச்யதே - கூறப்படுகின்றது 
  • தஸ்மாத்³ - எனவே 
  • ஏவம் - இது போல 
  • விதி³த்வா - அதை நன்கறிந்து 
  • ஏநம் - இந்த ஆத்மா 
  • ந - இல்லை 
  • அநுஸோ² சிதும் - கவலைப்பட 
  • அர்ஹஸி - தகாது

இந்த ஆத்மா பார்வைக்கு எட்டாதவன், இந்த ஆத்மா சிந்தனைக்கு அப்பாற்பட்டவன். இந்த ஆத்மா மாற்றமில்லாவன். எனவே, அதை நன்கறிந்து, உடலுக்காக நீ கவலைப்பட தேவையில்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.23

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.23

ஏக் ஒந விம்ஸே² விம்ஸ²திமே 
வ்ருஷ்ணிஷு ப்ராப்ய ஜந்மநீ|
ராம க்ருஷ்ணெள இதி பு⁴வோ 
ப⁴க³வாந் அஹரத்³ ப⁴ரம்||

  • ஏக் ஒந விம்ஸே² - பத்தொன்பதாவதும் 
  • விம்ஸ²திமே - இருபதாவதுமான அவதாரத்தில் 
  • ப⁴க³வாந் - ஸாக்ஷாத் பகவான் 
  • வ்ருஷ்ணிஷு - விருஷ்ணி வம்சத்தில் 
  • ராம க்ருஷ்ணெள இதி - ராமன் கிருஷ்ணன் என்ற 
  • ஜந்மநீ ப்ராப்ய - இரு பிறவிகளை அடைந்து 
  • பு⁴வோ ப⁴ரம் - பூ பாரத்தை 
  • அஹரத்³ - குறைத்தார்

பத்தொன்பது, இருபதாவது அவதாரங்களில், பகவான், விருஷ்ணி வம்சத்தில் யது குலத்தில் 'பலராமன்', 'கிருஷ்ணன்' என்ற பெயர்களில் திருவவதாரம் செய்து, பூபாரத்தைத் போக்கினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.23

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.23

ஸ ஸத்ய வசநாத்³ ராஜா 
த⁴ர்ம பாஸே²ந ஸம்யத:|
விவாஸயா மாஸ ஸுதம் 
ராமம் த³ஸ²ரத²: ப்ரியம்||

  • ஸ - அந்த
  • ராஜா - ராஜாவான
  • த³ஸ²ரத²ஃ - தசரதன்
  • ஸத்ய வசநாத்³ - ஸத்ய வசனத்தின் காரணத்தால்
  • த⁴ர்ம பாஸே²ந - தர்மமாகிற பாசத்தால்
  • ஸம்யதஹ - கட்டுண்டவராய்
  • ப்ரியம் - அன்புள்ள
  • ஸுதம் - புத்திரரான
  • ராமம் - ஸ்ரீராமரை
  • விவாஸயா மாஸ - ஸ்வதேசத்தில் இருந்து அகற்றினார்

அறக்கயிற்றில் {தர்ம பாசத்தில்} கட்டுண்ட ராஜா தசரதன், தன் சொல்லை மெய்ப்பிப்பதற்காகத் தன் அன்புக்குரிய மகனான ராமனை நாடு கடத்தினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 69 - பெரியாழ்வார் திருமொழி - 1.5.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 69 - காளியன் உச்சியில் நடம் பயின்றவனே! 
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஆறாம் பாசுரம்

காய மலர் நிறவா! கருமுகில் போலுருவா!* 
கானக மா மடுவில் காளியன் உச்சியிலே* 
தூய நடம் பயிலும் சுந்தர என் சிறுவா!* 
துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே!* 
ஆயமறிந்து பொருவான் எதிர் வந்த மல்லை* 
அந்தரமின்றி அழித்தாடிய தாளிணையாய்!* 
ஆய! எனக்கொரு கால் ஆடுக செங்கீரை* 
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே|

  • காய மலர் - காயாம் பூப் போன்ற
  • நிறவா - நிறத்தை உடையவனே!
  • கரு முகில் போல் - காள மேகம் போன்ற
  • உருவா - உருவத்தை உடையவனே
  • கானகம் - காட்டில்
  • மா மடுவில் - ஒரு பெரிய குன்றின் ள்ளே கிடந்த
  • காளியன் - காளியன் என்ற கொடிய பாம்பின்
  • உச்சியிலே - தலையின் மீது
  • தூய - ரம்மியமான
  • நடம் - நர்த்தநத்தை
  • பயிலும் - செய்தருளின
  • சுந்தர - அழகை உடையவனே!
  • என் சிறுவா - எனக்குப் பிள்ளையானவனே!
  • துங்கம் - உயரமான
  • மதம் - மதம் பிடித்த
  • கரியின் - குவலயாபீடமென்னும் யானையினது
  • கொம்பு - தந்தங்களை
  • பறித்தவனே - முறித்து அருளியவனே!  
  • ஆயம் அறிந்து - மல் யுத்தம் செய்யும் வகையறிந்து
  • பொருவான் - யுத்தம் செய்வதற்காக
  • எதிர் வந்த - எதிர்த்து வந்த
  • மல்லை - மல்லர்களை
  • அந்தரம் இன்றி - உனக்கு ஒரு அபாயமுமில்லாதபடி
  • அழித்து - த்வம்ஸம் செய்து
  • ஆடிய - இன்னம் வருவாருண்டோ என்று கம்பீரமாய் ஸஞ்சரித்த
  • தாள் இணையாய் - திருவடிகளை உடையவனே!
  • ஆய - ஆயனே!
  • எனக்கு - எனக்காக
  • ஒருகால் - ஒரு முறை
  • செங்கீரை ஆடுக - செங்கீரை ஆடியருள வேணும்
  • ஆயர்கள் - இடையர்களுக்காக 
  • போர் ஏறே - போர் செய்ய, ரிஷபம் போலே நின்ற கண்ணனே! 
  • ஆடுக ஆடுகவே - ஆடிக் காட்டுவாயாக

காயாம் பூ நிறத்தை உடையவனே! கருத்த மேகம் போல் உள்ளவனே! காட்டில் ஒரு பெரிய குன்றின் மேல் இருந்த காளியன் என்ற கொடிய பாம்பின் தலை உச்சியில் நின்று நடனமாடிய அழகனே! என்னுடைய அருமைப் புதல்வனே! குவலயாபீடம் என்னும் மத யானையின் தந்தங்களை முறித்தவனே! மல்யுத்தம் அறிந்த மல்லர்களை அழித்து சாகசம் பண்ணிய திருவடிகளை உடையவனே! ஆயர்களின் காளையே! பசுக்களின் ரக்ஷகனே! ஒரு செங்கீரை ஆடி விடு என்கிறாள் யசோதை! 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 018 - திருக்கண்ணங்குடி 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

018. திருக்கண்ணங்குடி
க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் - நாகப்பட்டினம் 
பதினெட்டாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

திருமங்கையாழ்வார்

001. திவ்ய ப்ரபந்தம் - 1748 - சியாமள மேனியன் திருக்கண்ணங்குடியில் உள்ளான்
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - முதலாம் திருமொழி - முதலாம் பாசுரம்
வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய* வாள் அரவின் அணை மேவி*
சங்கம் ஆர் அம் கைத் தட மலர் உந்தித்* சாம மா மேனி என் தலைவன்*
அங்கம் ஆறு ஐந்து வேள்வி நால் வேதம்* அருங் கலை பயின்று* 
எரி மூன்றும் செங் கையால் வளர்க்கும் துளக்கம் இல் மனத்தோர்*
திருக்கண்ணங்குடியுள் நின்றானே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1749 - கஜேந்திரஜனுக்கு அருளியவன் இடம் இது
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - முதலாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
கவள மா கதத்த கரி உய்யப்* பொய்கைக் கராம் கொளக் கலங்கி* 
உள் நினைந்து துவள* மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபடச்* 
சுடு படை துரந்தோன் குவளை நீள் முளரி குமுதம் ஒண் கழுநீர்*
கொய்ம் மலர் நெய்தல் ஒண் கழனி*
திவளும் மாளிகை சூழ் செழு மணிப் புரிசைத்* 
திருக்கண்ணங்குடியுள் நின்றானே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1750 - மச்ச வதாரம் எடுத்தவன் இடம் இது
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - முதலாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
வாதை வந்து அடர வானமும் நிலனும்* மலைகளும் அலை கடல் குளிப்ப*
மீது கொண்டு உகளும் மீன் உரு ஆகி* விரி புனல் வரி அகட்டு ஒளித்தோன்*
போது அலர் புன்னை மல்லிகை மௌவல்* புது விரை மது மலர் அணைந்து*
சீத ஒண் தென்றல் திசைதொறும் கமழும்* 
திருக்கண்ணங்குடியுள் நின்றானே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1751 - வராக வதாரம் எடுத்தவன் வாழுமிடம் இது
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - முதலாம் திருமொழி - நான்காம் பாசுரம் 
வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி*
வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்*
பன்றி ஆய் அன்று பார் மகள் பயலை* தீர்த்தவன் பஞ்சவர் பாகன்*
ஒன்று அலா உருவத்து உலப்பு இல் பல் காலத்து*
உயர் கொடி ஒளி வளர் மதியம்*
சென்று சேர் சென்னிச் சிகர நல் மாடத்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1752 - வாமன வதாரம் எடுத்தவன் வாழுமிடம் இது
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - முதலாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
மன்னவன் பெரிய வேள்வியில் குறள் ஆய்* மூவடி நீரொடும் கொண்டு*
பின்னும் ஏழ் உலகும் ஈர் அடி ஆக* பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்*
அன்னம் மென் கமலத்து அணி மலர்ப் பீடத்து* 
அலை புனல் இலைக் குடை நீழல்*
செந்நெல் ஒண் கவரி அசைய வீற்றிருக்கும்* 
திருக்கண்ணங்குடியுள் நின்றானே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1753 - பரசுராம வதாரம் எடுத்தவன் இடம் இது
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
மழுவினால் அவனி அரசை மூவெழுகால்* மணி முடி பொடிபடுத்து* 
உதிரக் குழுவு வார் புனலுள் குளித்து* 
வெம் கோபம் தவிர்ந்தவன் குலை மலி கதலி*
குழுவும் வார் கமுகும் குரவும் நல் பலவும்* குளிர் தரு சூத மாதவியும்*
செழுமை ஆர் பொழில்கள் தழுவும் நல் மாடத்*
திருக்கண்ணங்குடியுள் நின்றானே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1754 - இராம வதாரம் எடுத்தவன் இடம் இது
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - முதலாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
வான் உளார் அவரை வலிமையால் நலியும்* மறி கடல் இலங்கையார் கோனை*
பானு நேர் சரத்தால் பனங்கனி போலப்* பரு முடி உதிர வில் வளைத்தோன்*
கான் உலாம் மயிலின் கணங்கள் நின்று ஆடக்* 
கண முகில் முரசம் நின்று அதிர*
தேன் உலா வரி வண்டு இன் இசை முரலும்* 
திருக்கண்ணங்குடியுள் நின்றானே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1755 - கிருஷ்ண வதாரம் எடுத்தவன் இடம் இது
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - முதலாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை* அஞ்சிடாதே இட* 
அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுருவப்*
பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்*
வரையின் மா மணியும் மரதகத் திரளும்* வயிரமும் வெதிர் உதிர் முத்தும்*
திரை கொணர்ந்து உந்தி வயல்தொறும் குவிக்கும்*
திருக்கண்ணங்குடியுள் நின்றானே|

009.  திவ்ய ப்ரபந்தம் - 1756 - பார்த்தசாரதி நிற்கும் இடம் இது
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - முதலாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
பன்னிய பாரம் பார் மகட்கு ஒழியப்* பாரத மா பெரும் போரில்*
மன்னர்கள் மடிய மணி நெடுந் திண் தேர்* மைத்துனற்கு உய்த்த மா மாயன்*
துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும்* சூழ்ந்து எழு செண்பக மலர்வாய்*
தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும்* 
திருக்கண்ணங்குடியுள் நின்றானே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1757 - இவற்றைப் படித்தால் வறுமையே வராது
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - முதலாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
கலை உலா அல்குல் காரிகைதிறத்துக்* கடல் பெரும் படையொடும் சென்று*
சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற* திருக்கண்ணங்குடியுள் நின்றானை*
மலை குலாம் மாட மங்கையர் தலைவன்* மான வேல் கலியன் வாய் ஒலிகள்*
உலவு சொல் மாலை ஒன்பதோடு ஒன்றும்* வல்லவர்க்கு இல்லை நல்குரவே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 79

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணருக்கு வந்த தகவல்|

பாண்டவர்கள் திரௌபதியை மணந்து அஸ்தினாபுரம் சென்றனர். அவர்களுடன் கிருஷ்ணரும் சென்றார். ராஜ்யம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு காண்டவ வனப்பகுதி பண்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. கிருஷ்ணரும் அர்ஜுனனும் காண்டவ வனத்தை அழித்து இந்திரப் பிரஸ்தம் என்ற அற்புதமான நகரை உருவாக்கினர். பாண்டவர்களிடம் விடைப்பெற்று கிருஷ்ணர் துவாரகை திரும்பினார். பாண்டவர்கள் இந்திரப் பிரஸ்தத்தை தர்ம நெறி தவறாது அரசாட்சி செய்து வந்தனர்.


ஒரு நாள் கிருஷ்ணர் தமது அரச சபையில் வீற்றிருந்த போது, வாயில் காப்போன் உள்ளே நுழைந்து, முன் பின் தெரியாத யாரோ அவரைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னான். அவரை உள்ளே அனுமதிக்கும்படி கிருஷ்ணர் உத்தரவிட்டார். வந்தவர் கிருஷ்ணர் காலில் விழுந்து வணங்கித் தாம் வந்த விஷயத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

"நான் ஜராசந்தனின் தலைநகரான கிரிவிரஜத்திலிருந்து வருகிறேன், தன்னுடைய மலைக் கோட்டையில் ஜராசந்தன் சிறைப் பிடித்து வைத்திருக்கும் பல அரசர்களின் பிரதிநிதியாக நான் இப்பொழுது உங்களிடம் வந்து இருக்கிறேன். ஜராசந்தன் சிவ பக்தன். நூறு அரசர்களின் தலைகளைக் கொண்ட மாலையைச் சிவபெருமானுக்கு அணிவிப்பதாக அவன் சத்தியம் செய்துள்ளான். இந்த நோக்கத்துடன் அவன் பல அரசர்களை வென்று அவர்களைச் சிறை வைத்திருக்கிறான். அந்த அரசர்களின் எண்ணிக்கை இன்னும் நூறு ஆகாததனால் சிறை வைக்கப்பட்டுள்ள அரசர்கள் இன்னும் உயிரோடு உள்ளனர். இந்த அரசர்கள் உங்களிடம் அடைக்கலம் புகுந்து, என் மூலம் ஒரு செய்தி சொல்லி அனுப்பி இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு அனுப்பிய செய்தி இது தான், "கிருஷ்ணா! தங்களுடைய பலம் நிகரற்றது என்றும், தங்களிடம் அடைக்கலாம் புகுந்தவர்களைத் தாங்கள் எப்பொழுதும் காப்பாற்றி இருகிறீர்கள் என்றும் கேள்வியுற்று இருக்கிறோம். நாங்கள் தங்களிடம் பரிபூரணமாகச் சரணடைகிறோம். எங்களைக் காப்பாற்றுங்கள், தங்களைத் தவிர யாரும் இல்லை" இது தான் காவலில் இருக்கும் அரசர்கள் என் மூலம் ரகசியமாகச் சொல்லி அனுப்பிய செய்தி. தங்கள் விருப்பம் போல செய்யுங்கள்' என்று வந்தவர் சொல்லி முடித்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 32

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

மஹான்களின் கருணை

ஸ்கந்தம் 01

வயதோ பதினாறு. மென்மையான பாதங்கள், மென்மையான கைகள், மென்மையான உடல், கன்னங்களும் மென்மையானவை. மனோஹரமான உருவம், அகன்ற கண்கள், வளைந்த மூக்கு, சமமான காதுகள், அழகான புருவங்கள், சங்கு போன்ற கழுத்து, பரந்துயர்ந்த திருமார்பு, நீர்ச் சுழல் போன்ற தொப்புள் கொடி, மூன்று மடிப்புடைய வயிறு, எண்டிசைகளே ஆடை, திகமபரர், பரந்து விரிந்த சுருள் சுருளான கேசம், நாராயணன் போல் காந்தி, நீலமேக வர்ணம், நீண்ட கைகள், அழகான புன்சிரிப்பு, பெண்கள் அனைவரும் விரும்பும் அழகு, தன் ஒளியை மறைத்து உலா வருபவர் ஸ்ரீ சுகர். அவரைக் கண்டதும், முனிவர்கள் அனைவரும் சட்டென்று ஆசனத்திலிருந்து எழுந்தனர்.


இவ்வாறு எதேர்ச்சையாக அதிதியாக வந்த ஸ்ரீ சுகரை பரீக்ஷித் வணங்கி வரவேற்றான்.

எதேர்ச்சையாக என்பதற்கு பகவத் க்ருபையால் என்று பொருள் சொல்லப் படுகிறது. எனவே, ஸ்ரீ சுகர் அங்கு வந்தது இறைவனின் ஸங்கல்பமே. தானாக யாரும் குரு என்று கிளம்ப முடியாது. குரு என்பவர் நம்மை ஆட்கொள்ள இறைவனால் அனுப்பப்படுபவர் ஆவார்.

அனைவரும் கொண்டாட அமர்ந்தார் குருதேவர்.

சான்றோர்களுக்கெல்லாம் சான்றோராக விளங்கும் ஸ்ரீ சுகர் நக்ஷத்திரங்களால் சூழப்பட்டு சந்திரன் ஒளி வீசுவது போல், மஹரிஷிகளாலும், ராஜ ரிஷிகளாலும், ப்ரும்ம ரிஷிகளாலும் சூழப்பட்டு, ஒளிப் பிழம்பாகக் காட்சியளித்தார்.

பரீக்ஷித் பேசினான்.

“ப்ரும்மரிஷித் திலகமே! தங்கள் கருணையோடு இங்கு வந்து என்னைப் புனிதனாக்கினீர்கள். என் முன்னோர்களான பாண்டவர்களிடம் அன்பு கொண்ட ஸ்ரீ க்ருஷ்ணன் அவர்களது பேரனான என்னிடமும் அன்பு கொண்டார் போலும். இல்லையெனில் வெகு விரைவில் மரணிக்கப் போகும் எனக்கு, எவராலும் அறிய வொண்ணா நடையுடைய சித்த புருஷரான தங்களின் தரிசனம் எப்படிக் கிடைக்கும்? உங்களால் தான் மற்றவர்களுக்கு அநுஷ்டானங்களில் சித்தி ஏற்படுகிறது. மரணத் தருவாயில் இருக்கும் ஒருவன் எதைக் கேட்கவேண்டும்? எதை ஜபம் செய்ய வேண்டும்? என்ன செயல் செய்ய வேண்டும்? எதை நினைக்க வேண்டும்? என்ன பஜனை செய்ய வேண்டும்? எதையெல்லாம் செய்யக் கூடாது? என்பதைக் கூறுங்கள். ங்களைப் போன்ற சான்றோர் இல்லறத்தாரின் வீட்டு வாயிலில் மாடு கறக்கும் நேரம் கூடத் தாமதிப்பதில்லையே.”

ஸ்ரீ சுகர் மிகவும் இனிமையான குரலில் பதிலிறுக்கத் துவங்கினார்.

“மஹான்களுக்குக் கருணை செய்வது என்பது ஒரு அவஸ்தை. அவர்களிடமிருந்து எப்போதும் கருணை வழிந்து கொண்டே இருக்கும். அதை அவர்கள் யார் மீதாவது பொழிந்து கொண்டே இருப்பார்கள். கருணை செய்யாமல் அவர்களால் ஒரு கணம் கூட இருக்க இயலாது. 

பசு மாட்டை தினமும் ஒரு நேரத்தில் பால் கறப்பார்கள். ஒரு நாள் கோனாருக்கு ஏதோ வேலை வந்ததால் வர முடியாமல் போனால், மாடு பாலைக் கறந்து விட வேண்டும் என்று தவிக்கும். வருவோர் போவோரை அழைத்துப் பார்க்கும். நேரம் ஆக ஆக யாரும் வரவில்லையெனில், தானே மடி மீது கால்களைப் போட்டு பீய்ச்சி அடித்து விடும். 

அது போலத் தான் மஹான்களும். கருணை அவர்களது இயல்பு. எதிரில் இருப்பவரின் தகுதி முக்கியமில்லை. உத்தவனும் கண்ணனின் கண்களில் இருந்து வழியும் கருணை வீணாகக் கூடாதென்று அவனைத் தனியே விடாமல் எப்போதும் அவனுடனேயே இருந்து அதை வாங்கிக் கொள்வதாய்ச் சொல்கிறான்.”

ஸ்ரீ மத் பாகவதத்தை ஸ்ரீ சுகாசாரியார் தந்தையான வியாஸ பகவானிடமிருந்து பெற்றதிலிருந்து அவரது நிலைமை மாறி விட்டது. எப்போதும் நிர்விகல்பமான ப்ரும்மத்தில் லயித்திருந்த அவர் மனத்தில் ப்ரேமை பொங்கி வழிய ஆரம்பித்தது.

தான் பெற்ற ஆனந்தத்தை யாருக்கேனும் பகிர்ந்து கொடுக்கத் தவித்துக் கொண்டிருந்தார். மனிதர்களை வெறுத்து ஏகாந்தத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவர் ஸ்ரீ மத் பாகவதம் கிடைத்ததும் அதை உலகோர்க்குப் பகிர விழைந்து தகுந்த பாத்திரத்தைத் தேடினார்.

ஒவ்வொரு வீடாகச் சென்று வாயிலில் நின்றனர். கலியுகம் துவங்கி விட்டிருந்ததால், சில வீடுகளில் சண்டைச் சத்தம் கேட்டது. சில வீடுகளில் மக்கள் ஏதோ விளையாட்டில் மூழ்கி இருந்தனர். சில வீடுகளில் பிக்ஷைக்கு வந்திருக்கிறார் என்று நினைத்து ஏதும் சொல்லாமல் உள்ளே சென்றனர்.

இவர்களுக்கெல்லாம் பாகவதம் கேட்கத் தகுதியில்லை என்று நினைத்தவர், ஒரு கடாக்ஷம் செய்து விட்டுப் போனார். 

ஒருக்கால் அப்படி அவர் கண்களிலிருந்து விழுந்த ஒரு துளிக் கடாக்ஷம் நம் மீது பட்டிருக்குமோ என்னவோ. அதனால் தான் நமக்கும் ஸ்ரீ மத் பாகவதம் கிடைத்திருக்கிறது.

சீடன் குருவைத் தேடுவது போல், குருவும் தகுந்த சீடனை எதிர் நோக்குகிறார். அப்படி அவருக்குக் கிடைத்த பாகவத ரத்தினம் தான் பரீக்ஷித்.

முதல் ஸ்கந்தம் முற்றிற்று.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்