About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 24 December 2023

லீலை கண்ணன் கதைகள் - 79

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணருக்கு வந்த தகவல்|

பாண்டவர்கள் திரௌபதியை மணந்து அஸ்தினாபுரம் சென்றனர். அவர்களுடன் கிருஷ்ணரும் சென்றார். ராஜ்யம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு காண்டவ வனப்பகுதி பண்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. கிருஷ்ணரும் அர்ஜுனனும் காண்டவ வனத்தை அழித்து இந்திரப் பிரஸ்தம் என்ற அற்புதமான நகரை உருவாக்கினர். பாண்டவர்களிடம் விடைப்பெற்று கிருஷ்ணர் துவாரகை திரும்பினார். பாண்டவர்கள் இந்திரப் பிரஸ்தத்தை தர்ம நெறி தவறாது அரசாட்சி செய்து வந்தனர்.


ஒரு நாள் கிருஷ்ணர் தமது அரச சபையில் வீற்றிருந்த போது, வாயில் காப்போன் உள்ளே நுழைந்து, முன் பின் தெரியாத யாரோ அவரைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னான். அவரை உள்ளே அனுமதிக்கும்படி கிருஷ்ணர் உத்தரவிட்டார். வந்தவர் கிருஷ்ணர் காலில் விழுந்து வணங்கித் தாம் வந்த விஷயத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

"நான் ஜராசந்தனின் தலைநகரான கிரிவிரஜத்திலிருந்து வருகிறேன், தன்னுடைய மலைக் கோட்டையில் ஜராசந்தன் சிறைப் பிடித்து வைத்திருக்கும் பல அரசர்களின் பிரதிநிதியாக நான் இப்பொழுது உங்களிடம் வந்து இருக்கிறேன். ஜராசந்தன் சிவ பக்தன். நூறு அரசர்களின் தலைகளைக் கொண்ட மாலையைச் சிவபெருமானுக்கு அணிவிப்பதாக அவன் சத்தியம் செய்துள்ளான். இந்த நோக்கத்துடன் அவன் பல அரசர்களை வென்று அவர்களைச் சிறை வைத்திருக்கிறான். அந்த அரசர்களின் எண்ணிக்கை இன்னும் நூறு ஆகாததனால் சிறை வைக்கப்பட்டுள்ள அரசர்கள் இன்னும் உயிரோடு உள்ளனர். இந்த அரசர்கள் உங்களிடம் அடைக்கலம் புகுந்து, என் மூலம் ஒரு செய்தி சொல்லி அனுப்பி இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு அனுப்பிய செய்தி இது தான், "கிருஷ்ணா! தங்களுடைய பலம் நிகரற்றது என்றும், தங்களிடம் அடைக்கலாம் புகுந்தவர்களைத் தாங்கள் எப்பொழுதும் காப்பாற்றி இருகிறீர்கள் என்றும் கேள்வியுற்று இருக்கிறோம். நாங்கள் தங்களிடம் பரிபூரணமாகச் சரணடைகிறோம். எங்களைக் காப்பாற்றுங்கள், தங்களைத் தவிர யாரும் இல்லை" இது தான் காவலில் இருக்கும் அரசர்கள் என் மூலம் ரகசியமாகச் சொல்லி அனுப்பிய செய்தி. தங்கள் விருப்பம் போல செய்யுங்கள்' என்று வந்தவர் சொல்லி முடித்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment