About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 24 December 2023

திவ்ய ப்ரபந்தம் - 69 - பெரியாழ்வார் திருமொழி - 1.5.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 69 - காளியன் உச்சியில் நடம் பயின்றவனே! 
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஆறாம் பாசுரம்

காய மலர் நிறவா! கருமுகில் போலுருவா!* 
கானக மா மடுவில் காளியன் உச்சியிலே* 
தூய நடம் பயிலும் சுந்தர என் சிறுவா!* 
துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே!* 
ஆயமறிந்து பொருவான் எதிர் வந்த மல்லை* 
அந்தரமின்றி அழித்தாடிய தாளிணையாய்!* 
ஆய! எனக்கொரு கால் ஆடுக செங்கீரை* 
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே|

  • காய மலர் - காயாம் பூப் போன்ற
  • நிறவா - நிறத்தை உடையவனே!
  • கரு முகில் போல் - காள மேகம் போன்ற
  • உருவா - உருவத்தை உடையவனே
  • கானகம் - காட்டில்
  • மா மடுவில் - ஒரு பெரிய குன்றின் ள்ளே கிடந்த
  • காளியன் - காளியன் என்ற கொடிய பாம்பின்
  • உச்சியிலே - தலையின் மீது
  • தூய - ரம்மியமான
  • நடம் - நர்த்தநத்தை
  • பயிலும் - செய்தருளின
  • சுந்தர - அழகை உடையவனே!
  • என் சிறுவா - எனக்குப் பிள்ளையானவனே!
  • துங்கம் - உயரமான
  • மதம் - மதம் பிடித்த
  • கரியின் - குவலயாபீடமென்னும் யானையினது
  • கொம்பு - தந்தங்களை
  • பறித்தவனே - முறித்து அருளியவனே!  
  • ஆயம் அறிந்து - மல் யுத்தம் செய்யும் வகையறிந்து
  • பொருவான் - யுத்தம் செய்வதற்காக
  • எதிர் வந்த - எதிர்த்து வந்த
  • மல்லை - மல்லர்களை
  • அந்தரம் இன்றி - உனக்கு ஒரு அபாயமுமில்லாதபடி
  • அழித்து - த்வம்ஸம் செய்து
  • ஆடிய - இன்னம் வருவாருண்டோ என்று கம்பீரமாய் ஸஞ்சரித்த
  • தாள் இணையாய் - திருவடிகளை உடையவனே!
  • ஆய - ஆயனே!
  • எனக்கு - எனக்காக
  • ஒருகால் - ஒரு முறை
  • செங்கீரை ஆடுக - செங்கீரை ஆடியருள வேணும்
  • ஆயர்கள் - இடையர்களுக்காக 
  • போர் ஏறே - போர் செய்ய, ரிஷபம் போலே நின்ற கண்ணனே! 
  • ஆடுக ஆடுகவே - ஆடிக் காட்டுவாயாக

காயாம் பூ நிறத்தை உடையவனே! கருத்த மேகம் போல் உள்ளவனே! காட்டில் ஒரு பெரிய குன்றின் மேல் இருந்த காளியன் என்ற கொடிய பாம்பின் தலை உச்சியில் நின்று நடனமாடிய அழகனே! என்னுடைய அருமைப் புதல்வனே! குவலயாபீடம் என்னும் மத யானையின் தந்தங்களை முறித்தவனே! மல்யுத்தம் அறிந்த மல்லர்களை அழித்து சாகசம் பண்ணிய திருவடிகளை உடையவனே! ஆயர்களின் காளையே! பசுக்களின் ரக்ஷகனே! ஒரு செங்கீரை ஆடி விடு என்கிறாள் யசோதை! 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment