About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 11 February 2024

திவ்ய ப்ரபந்தம் - 90 - பெரியாழ்வார் திருமொழி - 1.7.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 90 - கரு மலைக் குட்டன்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்

முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன்* 
மொடு மொடு விரைந்தோடப்* 
பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக் குட்டன்* 
பெயர்ந்தடியிடுவது போல்* 
பன்னி உலகம் பரவியோவாப்* 
புகழ்ப் பல தேவனென்னும்* 
தன் நம்பியோடப் பின் கூடச் செல்வான்* 
தளர் நடை நடவானோ!

  • முன் - முன்னே
  • நல் - அழகிய
  • ஓர் - ஒப்பற்ற
  • வெள்ளி பெரு மலை - பெரிய வெள்ளி மலை பெற்ற (ஈன்ற)
  • குட்டன் - குட்டி
  • மொடு மொடு - திடு திடு என்று
  • விரைந்து - வேகமாக
  • ஓட - ஓடிக் கொண்டிருக்க
  • பின்னை - அந்தப் பிள்ளையின் பின்னே தன் செருக்காலே அப் பிள்ளையைப் பிடிப்பதற்காக
  • தொடர்ந்தது - தொடர்ந்து ஓடிய 
  • ஓர் - ஓர் ஒப்பற்ற
  • கரு மலை - கரு நிறமான மலை பெற்ற (ஈன்ற)
  • குட்டன் - குட்டி போல்
  • பெயர்ந்து - தானிருக்கு ம் இடத்தை விட்டுப் புறப்பட்டு
  • அடி இடுவது போல் - அடியிட்டு நகர்ந்து ஓடுவது போல
  • உலகம் - உலகம் அனைத்தும் சேர்ந்து
  • பன்னி - தங்களாலான வரையிலும் ஆராய்ந்து
  • பரவி - ஸ்தோத்ரம் செய்தும் (துதித்தும்)
  • ஓவா - முடிவு காண முடியாத
  • புகழ் - கீர்த்தியை உடைய
  • பலதேவன் என்னும் - பலராமன் என்கிற
  • தன் நம்பி ஓட - தன்னுடைய தமையன் முன்னே ஓடிக் கொண்டிருக்க
  • பின் கூட செல்வான்- அவனைப் பிடிக்க வேணுமென்ற எண்ணத்தினால் அவன் பின்னே உடன் செல்பவனான இக் கண்ணபிரான் 
  • தளர் நடை - அழகிய இளம் நடையை
  • நடவானோ - நடக்க மாட்டானோ? நடக்க வேணும்

உலகங்களெல்லாம் அளவிட முடியாதபடி கீர்த்தியுள்ள தன்னுடைய அண்ணனான பலராமன் தட தட வென்ற சப்தத்துடன் மிக விரைவாக ஓட, அவனைப் பிடிக்க கண்ணன் ஓடுகிறான். இது எப்படியிருக்கிறதென்றால் ஒரு அழகான பெரிய வெள்ளி நிறமுடைய மலையின் குட்டி பாறை முன்னால் இடம் பெயர்ந்து உருண்டு ஓட அதைத் தொடர்ந்து பின்னால் ஒரு நிகரில்லா கரு மலையின் குட்டி பாறை உருண்டு ஓடுவதைப் போலுள்ளதாம்! இப்படியாக ஓடும் கண்ணன் தளர் நடையாக நடந்து வருவானோ என ஏக்கத்துடன் இருக்கிறார் ஆழ்வார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment