||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 14 - ஆயர்களின் கொண்டாட்டம்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - முதலாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
ஓடுவார் விழுவார்* உகந்தாலிப்பார்*
நாடுவார் நம்பிரான்* எங்குற்றான் என்பார்*
பாடுவார்களும்* பல்பறை கொட்ட நின்று*
ஆடுவார்களும்* ஆயிற்று ஆய்ப்பாடியே|
- ஆய்ப்பாடி - திருவாய்பாடியானது
- ஓடுவார் - ஓடுவார்களும்
- விழுவார் - சேற்றிலே வழுக்கி விழுபவர்களும்
- உகந்து ஆலிப்பார் - மகிழ்ந்து கோஷிப்பார்களும்
- நாடுவார் - பிள்ளையைத் தேடுவார்களும்
- நம்பிரான் - நம்முடைய கண்ணன்
- எங்குத்தான் - எங்கே தான்
- என்பார் - இருக்கிறான் என்பாரும்
- பாடுவார்களும் - பாடுபவர்களும்
- பல்பறை - பல வித வாத்தியங்கள்
- கொட்ட - முழங்க
- நின்று - அதற்கு ஏற்ப
- ஆடுவார்களும் - கூத்தாடுவாருமாக
- ஆயிற்று - ஆயிற்று
கண்ணன் பிறந்ததும், ஆயர்பாடியில் இருந்த அனைவரும் தலை கால் புரியாமல், அவனைக் காண்பதற்காக விரைந்து, நந்தகோபருடைய மாளிகைக்கு ஓடி வந்தனர். அப்பொழுது அவர்கள், மாளிகை முற்றத்தில் இருந்த எண்ணெயும் சுண்ணமும் கலந்த சேற்றில் வழுக்கி விழுந்தனர்; அதையும் அவர்கள் பொருட்படுத்தாது விரைந்து எழுந்து, அவர்களின் தலைவன் எங்கு இருக்கின்றான் என்று மனம் தவிக்க "எங்கே எங்கள் கண்ணன்" என்று ஆரவாரம் செய்து, கண்ணன் பிறந்திருந்த இடத்தைத் தேடிச் சென்றனர்; குழந்தை கண்ணனைக் கண்ட ஆயர்கள் அனைவரும் சிலர் ஆனந்தத்துடன் பாடினார்கள், சிலரோ வாத்தியங்கள் முழங்க மேளம் கொட்ட அதற்கு ஏற்றாற்போல் நடனம் ஆடியும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment