||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
யசோதைக்கு விஸ்வரூப தரிசனம்|
ஒரு நாள் கிருஷ்ணன் தன் நண்பர்களோடு வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டு இருந்தான். திடீரென்று பலராமன் யசோதையிடம் சென்று, "அம்மா, அம்மா! கிருஷ்ணன் மண்ணைத் தின்று விட்டான்" என்று சொன்னான்.
யசோதை இதை நம்பவில்லை. ஆனால் மற்றச் சிறுவர்களும், "ஆமாம், அம்மா! நாங்கள் தடுத்தும் கேளாமல் அவன் எங்கள் எல்லோருக்கும் எதிரில் மண்ணை தின்றான்" என்று சொன்னார்கள். இதை கேட்டு யசோதை கோபம் கொண்டாள். வீட்டில் எத்தனையோ தின் பண்டங்கள் இருக்க, அவன் எதற்காக மண்ணை தின்ன வேண்டும்? அவள் ஓடிப் போய், இடக்கையினால் கிருஷ்ணனை பிடித்துக் கொண்டு வல கையினால் அவனை அடிக்கப் போனாள். "குறும்புக்காரப் பயலே! எதற்காக மண்ணை தின்றாய்! உன் நண்பர்களும் பலராமனும் நீ மண் தின்னதாகச் சொல்லுகிறார்களே!" என்று கேட்டாள்.
"இல்லை, அம்மா நான் மண் தின்னவில்லை. நீ வேண்டுமானால் என் வாயைப் பார்" அவர்கள், எல்லோரும் பொய் சொல்லுகிறார்கள். என்றான் கிருஷ்ணன். ஆனால் அன்னை யசோதை அவன் வாயில் என்ன பார்த்தாள்! அவனுடைய சிறு வாயுக்குள் அவள் அண்டம் முழுவதையும் பார்த்தாள். பூமி, ஆகாயம், சூரியன், சந்திரன், நட்சத்திரம், எல்லாம் அங்கு இருந்தன! எல்லாத் தேவர்களும் தேவதைகளும் அங்கே காணப்பட்டார்கள். ஓர் அபூர்வமான ஒளி வாயில் இருந்தது. உள்ளே கோகுலத்தைக் கண்டாள். கோகுலத்தில் தான் கிருஷ்ணன் வாயைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். தன் மகனின் சிறு வாய்க்குள் இத்தனை பொருள்கள் இருப்பதை அவளால் நம்பவே முடியவில்லை! ஆனால் எல்லாம் அங்கு இருக்கின்றனவே! அவள் ஆச்சரியமும் பயமும் அடைந்தாள். "இது என்ன கனவா? அல்லது ஆண்டவனின் செய்கையா! அல்லது என்னுடைய கற்பனை தானா? அல்லது இந்தச் சிறுவனுக்குத் தான் ஏதோ அதிசிய சக்தி இருக்கிறதா!" என்று பலவாறு நினைத்துப் பார்த்தாள்.
அதற்குப் பிறகு, "இது கனவல்ல. நான் தான் என் கண்களாலேயே பார்த்துக் கொண்டு இருக்கிறேனே! கர்க்க மகரிஷி சொன்னது போல, என் மகனுக்கு ஏதோ தெய்வீக சக்தி இருக்க வேண்டும்" என்று தீர்மானித்தாள். கடைசியில் அவள் இறைவனைச் சரண் அடைந்தாள். தன் குழந்தையைக் காப்பாற்றும்படி இறைவனை வேண்டிக் கொண்டாள். தீர்வு காண முடியாத பிரச்சனைகள் நம்மைத் தாக்கும் போது, பகவானிடம் சரண் அடைந்து, அவரை வேண்டிக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு என்ன இருக்கிறது? அறிவிற் சிறந்த யசோதை இந்த வழியை தான் பின் பற்றினாள். பகவான் கிருஷ்ணர் மாயை என்னும் வலையை அவள் மீது வீசி விட்டு, தாம் மீண்டும் பழைய குழந்தையைப் போல அவள் முன் தோற்றமளித்தார். கனவு உடனே மறைந்து விடுவது போல நடந்த விஷயங்கள் எல்லாம் யசோதைக்கு மறைந்து விட்டன. தாய்ப்பாசம் மேலிடவே குழந்தையைத் தன் மடியில் கிடத்தி, அதைக் கொஞ்ச ஆரம்பித்தாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment