||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
கிருஷ்ணன் உரலோடு கட்டப்படுதல்|
ஒரு நாள் யசோதை தீவிரமாக தயிர் கடைந்து கொண்டிருந்தாள். அப்போது கிருஷ்ணனின் குறும்புத் தனங்கள் அவளுக்கு ஞாபகம் வந்தன. அவற்றை ஒரு பாட்டாக இட்டுக் கட்டி அவள் அதை பாடத் தொடங்கினாள். கண்ணன் ஓர் அறையில் தூங்கிக் கொண்டிருந்தான்.
தூங்கி விழித்ததும் அவனுக்குப் பசியெடுத்தது. உடனே அவன் சென்று தாயார் தயிர் கடையவொட்டாமல் மத்தைப் பிடித்து இழுத்தான். அவனது அந்தச் செயல் "அம்மா நீ தயிர் கடைந்தது போதும் என்னைப் பார் எனக்குப் பசிக்கிறது," என்று அவன் சொல்வது போல இருந்தது. யசோதை அவனைப் பார்த்து புன்னகை புரிந்து, அவனைத் தன் மடியில் கிடத்தி அவனுக்குப் பால் ஊட்ட ஆரம்பித்தாள். அப்பொழுது அடுப்பில் வைத்திருந்த பால் பொங்கி வழியும் வாசனை வரவே அவள் குழந்தையைத் தரையில் கிடத்தி விட்டுச் சமையலறைக்கு சென்றாள்.
கிருஷ்ணனுக்கு பாதி வயிறு தான் நிரம்பியிருந்தது. அதனால் அவன் எரிச்சல் அடைந்தான். பக்கத்தில் இருந்த அம்மிக் குழவியை எடுத்து கோபத்தோடு தயிர் கடையும் பானையின் மீது வீசினான். பானை உடையவே, தன் சின்னசிறு கைகளால் நிறைய வெண்ணெயை வாரி எடுத்தான். மாய்மாலக் கண்ணீருடன் ஓர் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த உரலின் மீது உட்கார்ந்து கொண்டு வெண்ணையைத் தின்ன ஆரம்பித்தான். சமையலறை சென்ற யசோதை திரும்பி வந்து பார்த்தால், தயிர் பானை உடைந்து கிடந்தது; தயிர் எங்கும் ஓடிக் கொண்டிருந்தது. கிருஷ்ணனோ அங்கு எங்கும் காணோம்! கிருஷ்ணன் தான் பானையை உடைத்திருப்பான் என்பதில் அவளுக்கு சந்தேகம் இல்லை. வெண்ணெய் பட்ட அவனுடைய பாத சுவடுகளை அவள் பின் தொடர்ந்தாள். உருட்டி விடப்பட்ட ஒரு மர உரலின் மீது உட்கார்ந்து கொண்டு, மரங்களிலிருந்து கீழே இறங்கி வந்திருந்த குரங்குகளுக்கு அவன் வெண்ணெய் கொடுத்துக் கொண்டிருந்தான்! அம்மா கோபித்துக் கொள்ளுவாள் என்று அவனுக்கு தெரியுமாதலால், அவள் எப்போது வருவாளோ என்று நாலா பக்கங்களிலும் பார்த்துக் கொண்டிருந்தான்.
கையில் ஒரு கழியுடன் யசோதை மெல்ல அவன் பின்பக்கமாக வந்தாள். அவளைக் கண்டதும் ஏதோ பயந்தவனைப் போலக் கிருஷ்ணன் உரலை விட்டுக் கீழே இறங்கி ஓட ஆரம்பித்தான். யசோதையும் கையில் கழியுடன் அவனை பின் தொடர்ந்தாள். சிறிது நேரம் ஓடிய பிறகு கிருஷ்ணன் வேண்டுமென்றே அன்னையிடம் அகப்பட்டுக் கொண்டான். "உன்னுடைய குறும்புகள் அளவு கடந்து போய் விட்டன. நான் உனக்கு அதிக இடம் கொடுத்து விட்டேன். நீ இனிக் குறும்பு செய்யாதபடி உன்னைக் கட்டி வைக்கப் போகிறேன். நீ உன் நண்பர்களோடு இனி விளையாட முடியாது" என்று சொல்லி ஒரு கயிறு கொண்டு கிருஷ்ணனை உரலோடு கட்டப் போனாள். ஆனால் கயிறு சற்று நீளம் குறைவாக இருந்தது. அதனால் இன்னொரு கயிறு கொண்டு முதல் கயிற்ரோடு முடித்தாள். என்ன ஆச்சரியம்! அப்போதும் கயிறு போதிய நீளமில்லை. அதோடு இன்னொரு கயிறு கட்டினாள். அப்போதும் கயிறு இரண்டு விரற்கடை குறைவாக இருந்தது. ஏமாற்றமடைந்து அவள் ஒவ்வொரு கயிறாகச் சேர்த்துக் கட்டினாள். ஆனால் நீளம் இரண்டு விரற்கடை குறைவாகவே இருந்தது. வீட்டில் உள்ள எல்லாக் கயிறுகளையும் சேர்த்துக் கட்டியாகி விட்டது; ஆனால் கிருஷ்ணனை கட்ட முடியவில்லை. சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கோபிகள் யசோதையின் திண்டாட்டத்தைக் கண்டு சிரித்தார்கள்.
பாவம் யசோதையும் என்ன செய்ய முடியும்? அவளும் அவர்களோடு சேர்ந்து சிரித்தாள். தன் தாயார் களைத்துப் போய் வேர்க்க விறுவிறுக்க இருப்பதைக் கண்டு கிருஷ்ணன் அவள் மீது இறக்கம் கொண்டு, கடைசியில் கட்டுப்படச் சம்மதித்தான். பிறகு யசோதை உரலோடு கட்டபட்ட கிருஷ்ணனை அங்கு விட்டு விட்டு தன் வீட்டு வேலைகளைக் கவனிக்க உள்ளே சென்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment