About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 16 August 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - இருபத்தி எட்டாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

028 அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே|

திருதராஷ்டிரனும் சஞ்சயனும் ஒரே குரு குலத்தில் பயின்றவர்கள். சஞ்சயன், மன்னன் திருதராஷ்டிரனின் தேரோட்டியும், ஆலோசகனும் ஆவார். அவனது அறிவு, பேச்சாற்றல் எல்லாம் அவனை திருதராஷ்டிரரின் அந்தரங்கச் செயலாளராக உயர்த்திவிட்டது. சஞ்சயனின் குரு, வேத வியாசர் ஆவார்.  


அப்படிப்பட்ட சஞ்சயன், இரண்டு அந்தரங்கமான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். குருக்ஷேத்திரத்தில் நடக்கும் யுத்தக் காட்சிகளை ஹஸ்தினாபுரத்தில் அரண்மனையில் இருந்தே காணும் படியான ஆற்றலை வேத வியாசர் அருளினார்.  பகவத் கீதையும் இவர் மூலமே மொழியப் படுகிறது. கண் இல்லாத திருதராஷ்டிரர், தன் நண்பன் சஞ்சயனுக்கு அந்த வரத்தைக் கொடுத்து யுத்த களக் காட்சியை நேரடியாகத் தெரிந்து கொண்டார். சஞ்சயன் போரில் நடந்தவைகளை, உள்ளதை உள்ள படியே விவரித்தார். கௌரவர்கள் தோற்கடிக்கப் படுவார்கள் என்ற தனது அன்றைய நாளின் மதிப்புரையைத் தயங்காது கூறினார். 

மன்னன் ஒரு நாள் சஞ்சயனிடம், போர் நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்று வினவ, அதற்குச் சஞ்சயன், சிறிதும் தயங்காமல்: “எங்கு யோகேஸ்வரனான கிருஷ்ணன் இருக்கிறானோ, எங்கு வில்லேந்திய அர்ஜுனன் இருக்கிறானோ அங்கெல்லாம் மகாலக்ஷ்மியின் கடாட்சத்தோடு வெற்றியும், அழியாத செல்வமும், நீதியும் நிச்சயமாக இருக்கும்.” என்றார். 


பாண்டவர்களின் வனவாசம் முடிந்து, அமைதிக்கான தூது படலம் நடந்து கொண்டிருந்த நேரம், இந்திரப்ரஸ்தம் மட்டுமாவது பாண்டவர்களுக்கு வழங்குமாறு தர்மன் கேட்க, பேராசை கொண்ட மன்னன் திருதராஷ்டிரன், தன் மகன் துரியோதனன் மீதுள்ள பாசத்தால், அதை மறுத்து விடுகிறார். இச்செய்தியை பாண்டவர்களிடமும், கிருஷ்ணனிடமும் பக்குவமாக எடுத்துக் கூற சஞ்சயனை அனுப்பி வைத்தார் மன்னன் திருதராஷ்டிரன்.

போர் நிச்சயம் என்பதையும், மன்னன் திருதராஷ்டிரனின் புதல்வர்கள் மடிவார்கள் என்பதையும் நன்கு அறிந்த சஞ்சயன், மன்னன் மீதுள்ள மரியாதை, தன் கடமை மீது கொண்டுள்ள பக்தி மற்றும் கிருஷ்ணன் மீது கொண்டுள்ள பக்தி காரணமாக அச்செய்தியைப் பாண்டவர்களிடமும் கிருஷ்ணனிடமும் கொண்டு சேர்த்தார்.

சஞ்சயன் அரண்மனை வந்த நேரம், கிருஷ்ணன், தனது படுக்கையறையில், சத்யபாமா மடியில் தலை வைத்து, தன் இரு பாதங்களை அர்ஜுனனின் மடி மீது நீட்டி, அவரது படுக்கையில் படுத்திருக்க, திரௌபதி அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தாள். சஞ்சயன் வந்திருந்த செய்தி கேட்டதும், கிருஷ்ணன் “சஞ்சயனா! உள்ளே அனுமதியுங்கள்! நமது உறவின் நெருக்கத்தைக் கண்டு விட்டு துரியோதனனிடம் சென்று கூறட்டும். அப்பொழுதாவது துரியோதனன் யோசிப்பானா என்று பார்ப்போம்! மன்னனும் மற்றவர்களுமாவது உணர்ந்து கொள்வர்.”, என்றார்.


உண்மையில், அந்தரங்க அறைக்குள் அந்நியர்கள் நுழையக் கூடாது என்றாலும், அர்ஜுனனும் திரௌபதியும் அங்கிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து சஞ்சயனுக்கும் அப்பாக்கியம் கிட்டியது என்றால் அர்ஜுனனுக்கு நிகராக சஞ்சயனை கிருஷ்ணர் மதித்தார் என்றல்லவா பொருள்! சஞ்சயனின் பணிவு, நம்பகத்தன்மை, கடமையில் கொண்டுள்ள பக்தி, உண்மையை எடுத்துக் கூறுவதில் உள்ள தைரியம், தன் மன்னன் தவறான பாதையில் சென்றாலும் அதைத் தைரியமாக எடுத்துக் கூறியும், தன் கடமை மறவாது அம்மன்னனுக்கே உண்மையாகக் கடமையாற்றுவதும் என அவரது குணங்கள் கிருஷ்ணனை ஈர்த்ததால் சஞ்சயனுக்கு இக்காட்சியைக் காண அருளினார்.

சஞ்சயன், இறைவனை அந்தப்புரத்தில் கண்டதும் மெய் மறந்து திகைத்து விட்டான். உள்ளத்திலே இறைவனை உறைய வைத்த சஞ்சயன் இறைவனின் அந்தரங்கம் வரை செல்லும் வாய்ப்பை பெற்றான். அந்தக் கிடைத்தற்கரிய காட்சியை இறைவன் சஞ்சயனுக்குக் கொடுத்தார்.

சஞ்சயன் மிக நல்லவன், அதனாலே தன் அந்தரங்க இடத்திலும் வரவேற்றார் கிருஷ்ணர். சஞ்சயன் இல்லை என்றால் கிருஷ்ணன் குருக்ஷேத்திரப் போரில் காட்டிய விஸ்வரூப தரிசனம் திருதராஷ்டிரனுக்கு கிடைத்திருக்காது.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அந்த எம்பெருமானின் அந்தரங்கக் கோலத்தை பார்க்கும் பாக்கியம் பெற்ற சஞ்சயன் போல நான் இல்லையே." ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment