||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
இரட்டை மருத மரங்கள்|
கிருஷ்ணன் சிறிது நேரம் அங்கு உட்கார்ந்திருந்தான். உரலோடு கட்டப்பட்டு இருந்ததால், அவனால் அங்கும் நகர முடியவில்லை. அது அவனுக்குச் சலிப்பை அளித்தது. பிறகு அவன் மெல்லத் தவழப் பார்த்த போது, உரலும் தன் பின்னால் உருண்டு வருவதைக் கண்டான். அவன் சப்தம் போடாமல் கதவருகில் வந்தான். பிறகு மெல்ல வீட்டை விட்டு வெளியே வந்தான். அங்கு சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டான். உரலோடு கட்டப்பட்ட தன்னைக் கண்டு அவர்கள் சிரிப்பார்கள் என்று நினைத்தான். பிறகு மெல்லக் கட்டாந்தரைக்கு வந்தான். அங்கிருந்த காட்டுக்கு ஒரு பாதை சென்றது. திடீரென்று கிருஷ்ணனுக்கு ஒரு யோசனை தோன்றியது. உரலை வெகு தூரம் இழுத்துச் சென்று விட்டால், பாவம்! அம்மா அதைக் கஷ்டப்பட்டுத் திரும்பக் கொண்டு வர வேண்டும். உரல் மிகவும் பளுவாக இருந்ததனால் அதை மீண்டும் இழுத்துக் கொண்டு வர யசோதை மிகவும் கஷ்டப்படுவாள். அதனால் மிகவும் களைத்துப் போனவன் போன்று, அவன் உரலின் மீது சற்று நேரம் உட்கார்ந்தான்.
தூரத்தில் இரட்டை மருத மரங்கள் தெரிந்தன. அவற்றின் பெயர் யமலன், அர்ஜுனன் என்பது. இரண்டு மரங்களுக்கும் இடையில் சிறிது இடைவெளி தான் இருந்தது. உரலில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள கிருஷ்ணன் ஒரு வழி கண்டு பிடித்தான். "நான் இந்த இரண்டு மரங்களுக்கு இடையில் செல்வேனாகில் உரல் பெரிதாகையால் அந்த இடைவெளி வழியாக வெளியே வராது. நான் என் எல்லா பலத்தையும் கொண்டு இழுத்தால், கயிறு அறுந்து விடும், நானும் விடுதலை ஆவேன்" என்று நினைத்தான். தன் முழுப் பலமும் கொண்டு, மிக்க உறுதியுடன், கிருஷ்ணன் மரங்களுக்கு இடையில் குறுக்காக இருந்த உரலை இழுத்தான். ஆனால் அவன் எதிர்பாத்தபடி கயிறு அறவில்லை. திரும்பவும் மூச்சைப் பிடித்துக் கொண்டு இழுத்தான். ஆனால் கயிறு அறுவதற்குப் பதிலாகப் பேரிரைச்சலுடன் இரண்டு மரங்களும் கீழே சாய்ந்தன.
என்ன ஆச்சரியம்! இரண்டு தேவ புருஷர்கள் அந்த மரங்களில் இருந்து வெளி வந்தனர்! அவர்கள் கிருஷ்ணனைத் தலை வணங்கி நமஸ்கரித்து, தாங்கள் குபேரனின் குமாரர்கள் என்று சொன்னார்கள். அவர்களுடைய தீய செயல்களுக்காக அவர்கள் மரங்கள் ஆக வேண்டும் என்று நாரதர் ஒரு சமயம் அவர்களை சபித்து விட்டார். கிருஷ்ணனுடைய பாதம் பட்டால் அவர்களுக்கு சாப விமோசனம் ஏற்படும் என்றும் சொல்லி இருந்தார். அவர்கக் கிருஷ்ணனைத் தலை வணங்கித் துதித்து விட்டுத் தங்கள் இருப்பிடத்திற்கு சென்றனர்.
கிருஷ்ணனுடைய இந்தச் சாகசத்தைத் தூரத்திலிருந்து சில சிறுவர்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். மரங்கள் முறிந்த சப்தம் கேட்டு யசோதையும் மற்றவர்களும் அந்த இடத்திற்கு விரைந்தோடி வந்தார்கள். தன் குழந்தை அந்தப் பெரிய உரலை அத்தனை தூரம் இழுத்துச் சென்று விட்டதைப் பார்த்து அவள் ஆச்சரியப் பட்டாள். அந்த இரண்டு பெரிய மரங்கள் அவனை நசுக்காததையும் அவள் கண்டாள். இது கிருஷ்ணனுடைய வேலை என்று அவளால் நம்பவே முடியவில்லை. கயிற்றை அவிழ்த்து அவனைத் தன் மடியில் கிடைத்து முன்பை விட அதிக அன்புடன் அவனைச் சீராட்டத் தொடங்கினாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment