||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 16 - ஆயர்களின் மெய்மறந்த செயல்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - முதலாம் திருமொழி - நான்காம் பாசுரம்
உறியை முற்றத்து* உருட்டி நின்றாடுவார்*
நறு நெய் பால் தயிர்* நன்றாகத் தூவுவார்*
செறி மென் கூந்தல்* அவிழத் திளைத்து*
எங்கும் அறிவழிந்தனர்* ஆய்ப்பாடி ஆயரே|
- ஆய்ப்பாடி ஆயர் - ஆய்ப்பாடியில் உள்ள கோபர்கள், இடையர்கள்
- உறியை - பால் தயிர் சேமித்து வைத்த உறிகளை
- முற்றத்து உருட்டி நின்று - முற்றத்தில் உருட்டி விட்டு
- ஆடுவார் - கூத்தாடுபவரானார்கள்
- நறு நெய் - மணமிக்க நெய்
- பால் தயிர் - பால் தயிர் முதலியவற்றை
- நன்றாக - தாராளமாகத்
- தூவுவார் - தானம் அளிப்பவரானார்கள்
- செறிமென் - நெருங்கி மெத்தென்று படிந்திருக்கிற
- கூந்தல் - தலைமுடி
- அவிழத் - அவிழ்ந்து கலையும் படியாக
- திளைத்து - நாட்டியமாடி
- எங்கும் - ஆயர்பாடி முழுதும்
- அறிவு அழிந்தனர் - தங்களூடைய விவேகம் ஒழியப் பெற்றனர்
ஆயர்ப்பாடியிலுள்ள ஆயர்கள் அனைவரும், நந்தகோபருடைய மாளிகைக்குச் சென்று குழந்தை கண்ணன் கோகுலத்தில் பிறந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கித் தங்கள் நிதானத்தையும் தாம் என்ன செய்கின்றோம் என்ற அறிவையும் இழந்து பேரின்பம் கொண்ட நிலையைப் மிக ஆச்சர்யமாக சித்திரிக்கிறார் பெரியாழ்வார். ஆயர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் வைத்திருந்த, அவர்களின் வாழ்வுக்கு ஆதாரமான பாலின் பயன்களான தயிர், மோர், வெண்ணெய் ஆகியவற்றைக் கொண்ட பானைகளை உறியிலிருந்து வீட்டு முற்றத்தில் உருட்டி விட்டு விளையாடி மகிழ்ந்தனர்; சிறந்த, நல்ல மணமான நெய்யினையும், பால், தயிர் முதலியவற்றை எதிர்ப்படுவோர் அனைவரின் மீதும் உற்சாகம் பொங்கத் தூவிக் குதூகலித்தனர்; நிறைய தானமாக எல்லோருக்கும் கொடுத்து விடுவார்களாம். நன்கு கட்டப்பெற்ற, அடர்த்தியான கூந்தல் அவிழ்வதைக் கூட அறியாது மகிழ்ச்சி பெருங்கடலில் மூழ்கி, தங்களின் நிதானம் தவறியவர்களாக மாறியிருந்தனர், அறிவையும் சுயநினைவையும் இழந்தது போல் திரிந்தார்களாம் ஆயர்ப்பாடியில் உள்ள ஆயர்கள் அனைவரும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment