||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
004. திருவெள்ளறை
ஸ்வேதகிரி – திருச்சி
நான்காவது திவ்ய க்ஷேத்ரம்
ஸ்ரீ புண்டரீகாஷன் பெருமாள் திருக்கோயில்
ஸ்ரீ பங்கயச்செல்வி தாயார் ஸமேத ஸ்ரீ புண்டரீகாஷன் பெருமாள்
திருவடிகளே சரணம்||
- பெருமாள் மூலவர்: புண்டரீகாஷன், செந்தாமரைக் கண்ணன்
- பெருமாள் உற்சவர்: பங்கயச் செல்வன்
- தாயார் மூலவர்: ஷெண்பகவல்லி
- தாயார் உற்சவர்: பங்கயச் செல்வி
- திருமுக மண்டலம் திசை: கிழக்கு
- திருக்கோலம்: நின்ற
- புஷ்கரிணி/தீர்த்தம்: திவ்ய கந்த, கஷீர, குச, சக்கர, புஷ்கல, பத்ம, வராக, மணி கர்ணிகா
- விமானம்: விமலாக்ருதி
- ஸ்தல விருக்ஷம்: வில்வம்
- ப்ரத்யக்ஷம்: கருடன் (பெரிய திருவடி), சிபி, பூதேவி, மார்கண்டேயன், லக்ஷ்மீ, ப்ருஹ்ம ருத்ராதிகள்
- ஸம்ப்ரதாயம்: தென் கலை
- மங்களாஸாஸநம்: 2 ஆழ்வார்கள்
- பாசுரங்கள்: 24
---------------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி
ஸ்தல புராணம்
உய்யக்கொண்டார், எங்களாழ்வான் அவதார ஸ்தலம். கோயில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய ப்ரகாரத்தில் தென் பகுதியில் கல் அறைகள் உள்ளது. இங்கிருந்து ஒலி எழுப்பினால் எதிரொலி தெளிவாக கேட்கும்.
கோயில் சுமார் 50 அடி உயரத்தில் வெண்மையான பாறையால் ஆன ஒரு குன்றின் மீது இத்தலம் அமைந்துள்ளதால் "வெள்ளறை' என்ற பெயர் பெற்று மரியாதை நிமித்தமாக "திருவெள்ளறை' ஆனது. முன் கோபுரம் பூர்த்தியாகாத நிலையில் உள்ளது. புண்டரீகன் என்ற யோகி திருவெள்ளறையில் ஒரு நந்தவனம் அமைத்து அதில் வளர்ந்த துளசியால் பெருமாளையும் தாயாரையும் பூஜித்து வந்தார். இதில் மகிழ்ந்த பெருமாள் இவருக்கு தரிசனம் கொடுத்தார். இதனாலேயே இங்குள்ள பெருமாள் புண்டரீகாட்சப் பெருமாள்' ஆனார். கருவறையில் பெருமாளின் மேல் புறம் வலது பக்கம் சூரியனும், இடது பக்கம் சந்திரனும் சாமரம் வீசுகின்றனர். பெருமாளின் இரு பக்கமும் கருடனும் ஆதிசேஷனும் மனித வடிவில் நின்ற படி இருக்கின்றனர். ஏழு மூலவர்களைக் கொண்ட கோவில். ஸ்வஸ்திக் வடிவில் அமைந்த தீர்த்தம்.
இங்குள்ள பெருமளை தரிசிக்க 18 படிகளை கடக்க வேண்டும். இவை கீதையின் 18 அத்தியாயங்களை குறிக்கிறது. அடுத்த கோபுர வாயிலில் 4 படிகள் உள்ளது. இவை நான்கு வேதங்களை குறிக்கிறது. அதன் பின் பலி பீடத்தை வணங்கி ஐந்து படிகளை கடக்க வேண்டும். இவை பஞ்ச பூதங்களை குறிக்கிறது. பிறகு ஸ்வாமியை தரிசிக்க இரண்டு வழிகள் உள்ளது. முதல் வழி "தட்சிணாயணம்' ஆடி முதல் மார்கழி வரை திறந்திருக்கும். இரண்டாவது வழி "உத்தராயணம்' தை முதல் ஆனி வரை திறந்திருக்கும். இங்கு பலிபீடமே மிகவும் சிறப்பு. பலி பீடத்தின் முன் தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டிக் கொண்டு, நிறைவேறிய பின் "பலி பீட திருமஞ்சனம்' செய்து பொங்கல் படையல் செய்து பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, பெருமாளுக்கு அமுது செய்த பொங்கலை சாப்பிட்டால் "புத்ர பாக்கியம்' நிச்சயம் என்பது ஐதீகம். இத்தல பெருமாள் கிழக்கு பார்த்த நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இவருக்கு மேல் உள்ள விமானம் விமலாக்ருத விமானம் எனப்படும். இவரை கருடன், சிபி, மார்க்கண்டேயர், பிரம்மா, சிவன் ஆகியோர் தரிசனம் செய்துள்னர்.
ஒரு முறை திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பெருமாள், "லட்சுமி உனது கருணையால் இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதனால் எனக்கு பரம திருப்தி ஏற்படுகிறது. எனவே உனக்கு வேண்டிய வரத்தை என்னிடமிருந்து கேட்டு பெறலாம்'' என்கிறார். அதற்கு லட்சுமி, "தங்களின் திருமார்பில் நித்ய வாசம் செய்யும் எனக்கு வேறு வரம் எதற்கு'' என்கிறாள். இருந்தாலும், எனது பிறந்த இடமான இந்த பாற்கடல். இங்கு தேவர்களை காட்டிலும் எனக்கு தான் அதிக உரிமை வேண்டும் என்கிறாள். அதற்கு பெருமாள், ‘உனது கோரிக்கையை இங்கு நிறைவேற்ற முடியாது. இங்கு நான் தான் அனைத்துமாக இருக்கிறேன். இருந்தாலும் பூமியில் சிபி சக்கரவர்த்திக்கு நான் தரிசனம் தரும் போது உனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன்'' என்கிறார். ஒரு முறை இந்தியாவின் தென் பகுதியில் ராட்சஷர்கள் மிகுந்த தொல்லை கொடுத்து வந்தார்கள். அவர்களை அடக்க சிபி சக்கரவர்த்தி தன் படைகளுடன் அழிக்க செல்லும் போது ஒரு வெள்ளை பன்றி அவர்கள் முன் தோன்றி இவர்களுக்கு பெரும் தொந்தரவு கொடுத்தது. படை வீரர்களால் அந்த பன்றியை பிடிக்க முடியாமல் போக, சக்ரவர்த்தியே அதை பிடிக்க சென்றார். பன்றியும் இவரிடம் பிடிபடாமல் இங்கு மலை மீதுள்ள புற்றில் மறைந்து கொண்டது. அரசனும் இதை பிடிக்க மலையை சுற்றி வரும் போது, ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவர் கடுமையாக தவம் செய்து கொண்டிருப்பதை கண்டு அவரிடம் விஷயத்தை கூறினான்.
அதற்கு முனிவர், நீ மிகவும் கொடுத்து வைத்தவன். நாராயணனின் தரிசனத்திற்கு தான் நான் தவம் செய்து கொண்டு இருக்கிறேன். ஆனால் அவர் உனக்கு வராக (பன்றி) உருவத்தில் உனக்கு காட்சி கொடுத்திருக்கிறார். நீ இந்த புற்றில் பாலால் அபிஷேகம் செய்'' என்கிறார். அரசனும் அப்படியே செய்ய நாராயணன் தோன்றி அனைவருக்கும் காட்சி கொடுக்கிறார். இந்த தரிசனத்திற்கு வந்த மகாலட்சுமியிடம், "நீ விரும்பியபடி இத்தலத்தில் உனக்கு சகல அதிகாரத்தையும் தந்து விட்டு, அர்சா ரூபமாக இருந்து கொண்டு நான் அனைவருக்கும் அருள்பாலிக்கிறேன்'' என்கிறார் பெருமாள்.இதன் பின் அரசன் அனைவரிடமும் விடை பெற்று ராவண ராட்சஷர்களை அழிக்க சென்றான். ஆனால் மார்க்கண்டேயர், இவர்களை அழிக்க பெருமாள் ராம அவதாரம் எடுக்க உள்ளார். எனவே நீ திரும்ப நாட்டை ஆள செல் என்கிறார். ஆனால் மன்னனுக்கு மனம் திருப்தி அடையவே இல்லை. அதற்கு மார்க்கண்டேயர், "உனக்கு தரிசனம் கொடுத்த பெருமாளுக்கு நீ கோயில் கட்டி திருப்தி பெறுக'' என்கிறார். அரசனும் கோயில் கட்டி, சேவை செய்வதற்காக 3700 குடும்பங்களை அழைத்து வந்தான். வரும் வழியில் ஒருவர் இறந்து விட்டார். அதற்கு பெருமாள், அரசனிடம் நீ கவலைப் பட வேண்டாம். நானே இறந்தவருக்கு பதிலாக 3700 பேரில் ஒருவராக இருந்து, நீ நினைத்த மூவாயிரத்து எழுநூறு குடும்பக் கணக்கு குறைவு படாமல் பார்த்து கொள்கிறேன் என்கிறார். பெருமாள் அளித்த வரத்தின் படி தாயார் செங்கமலவல்லி மூல ஸ்தானத்திலேயே இருந்து கொண்டு, திருவிழா காலங்களில் பெருமாளுக்கு முன்பாக பல்லக்கில் எழுந்தருளுகிறார். இந்தக் கோயிலில் தாயாருக்கே முதல் மரியாதை. மூலவருக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும் பங்கஜவல்லி தாயாருக்கும் உண்டு. பங்குனி மாதம் அவிட்ட நட்சத்திரம் அன்று செங்கமலவல்லி தாயார், பெருமாள், பங்கஜவல்லி தாயார் மூவரும் ஒரே சிம்மாசனத்தில் எழுந்தருளுவார்கள். பல்லவர் காலத்தில் வெட்டப்பட்ட முற்றுப் பெறாத குடவரை. இது மார்க்கண்டேயர் தவம் செய்த குகை எனவும் கூறப்படுகிறது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment