About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 10 February 2024

ஸ்ரீமத் பாகவத புராணம் - 54

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

யாதவ குலத்தின் அழிவு

ஸ்கந்தம் 03

உத்தவர் தொடர்ந்தார். 

“சரத் கால இரவில் ப்ருந்தாவன ம் எங்கும் பௌர்ணமி நிலவு பரவியிருக்கும் வேளையில் கண்ணன் இனிய முளரி கானம் செய்துகொண்டு ராஸலீலை செய்தார். தாய் தந்தையரைக் காக்க வடமதுரை வந்து மாமன் கம்சனைக் கீழே தள்ளிக் கொன்று, அவன் உடலை தரதர என்று தரையில் இழுத்தார். சாந்தீபனி முனிவரின் குரு குலம் சென்று வேதங்களையும் அதன் ஆறு அங்கங்களையும் ஒரே முறை கேட்டு அத்யயனம் முடித்தார். அவரது இறந்த மகனை மீட்க பஞ்சஜனன் என்ற அரக்கனின் வயிற்றைக் கிழித்தார். பின்னர் யம லோகம் வரை சென்று அவனை மீட்டு வரும் வழியிலேயே குரு தனக்குச் சொன்ன அத்தனை வித்தைகளையும் அவனுக்கு போதித்து முழுமையாக்கி குருவிடமே ஒப்படைத்தார்.


பீஷ்மக மஹாராஜனின் மகளான ருக்மிணியின் அழைப்பை ஏற்று காந்தர்வ முறைப்படி விவாஹம் செய்ய எண்ணி, கருடன் அமுத கலசத்தை கவர்ந்து செல்வது போல் அவளை அழைத்து வந்தார். நக்னஜித் என்பவரின் மகளான ஸத்யாவை அவளது திருமணத்திற்குப் பணயமாக வைக்கப்பட்டிருந்த ஏழு காளைகளை அடக்கி திருமணம் செய்து கொண்டார். ஸத்யபாமா பாரிஜாத மலருக்கு ஆசைப்பட்டாள். அப்போது சாதாரண உலகியலைப் பின்பற்றி மனைவிக்குக் கட்டுப்பட்ட கணவன் போல் ஸ்வர்கத்திலிருந்து பாரிஜாத மரத்தையே எடுத்து வந்து அவளது ஆசையைப் பூர்த்தி செய்தார். 

இந்திரனின் வேண்டுதலுக்கிணங்க நரகாசுரனைக் கொன்றார். அவன் பிற அரசர்களிடமிருந்து கவர்ந்த செல்வம் போக மீதியையும், அரசாட்சியையும் அவனது பிள்ளையான பகதத்தனுக்குக் கொடுத்தார். நரகாசுரனின் அந்தப்புரத்தில் நுழைந்தார். அப்போது நரகாசுரனால் கடத்தி வந்து சிறை வைக்கப்பட்டிருந்த 16000 ராஜகுமாரிகள் கண்ணனைக் கண்ட நொடியில் காதல் கொண்டு மணக்க விரும்பினர். பகவான் தன் மாயையால், அவரவர்களுக்கு ஏற்ப தனித்தனி வடிவம் கொண்டு அவர்கள் அனைவரையும் மணந்தார்.


தன் அளவிடற்கரிய லீலைகளை வெளிப்படுத்த எண்ணிய பகவான் அவர்கள் ஒவ்வொருவரிடம் தனக்கு ஒப்பான பத்து பிள்ளைகளைத் தோற்றுவித்தார். காலயவனன், ஜராஸந்தன், சால்வன் முதலியோர் மதுரையை முற்றுகையிட்ட போது அவர்களை முசுகுந்தன், பீமன் முதலியோரைக் கொண்டு வதைத்தார். சம்பரன், த்விவிதன், பாணன், முரன், பல்வலன், தந்தவக்த்ரன் முதலிய அசுரர்களில் சிலரைத் தானே கொன்றார். சிலரை பீமனை விட்டுக் கொல்லச் செய்தார். 

விதுரரே! துரியோதனாதியர், பாண்டவர்கள் இன்னும் பல அரசர்களின் படையால் பூமியே நடுங்கிற்றே. அவர்களை உண்மையில் கொன்றவர் கண்ணனன்றோ. கர்ணன், துச்சாதனன், சகுனி போன்றவர்கள் பீமனால் முறிக்கப்பட்டு வீழ்ந்த போதும் பூபாரம் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை என்று எண்ணினார். பதினெட்டு அக்ஷௌஹிணி படைகள் அழிந்தன. ஆனால் எனது அம்ச பூதமாகத் தோன்றிய யாதவப் படை மிகப் பெரிதாக வளர்ந்து நிற்கிறதே. அவர்கள் தாமாகவே அழிந்தால் தான் உண்டு. வேறெவரும் அழிக்க இயலாது என்று எண்ணினார். தர்மபுத்ரரை அரச பீடத்தில் அமர்த்தினார். உத்தரையின் வயிற்றிலிருந்த பூரு வம்சத்தின் விதையான பரிக்ஷித்தைக் காப்பாற்றினார். தர்மபுத்ரருக்கு மூன்று அஸ்வமேத யாகங்களை நடத்திக் கொடுத்து அவர் நிலவுலகை மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்ள அறிவுறுத்தினார்.

உள்ளும் புறமும் எங்கும் வியாபித்திருக்கும் பகவான் எதிலும் ஒட்டாமல் உலகியல் நெறிகளை மேற்கொண்டு அனைத்து சுக போகங்களையும் அனுபவித்துக் கொண்டு துவாரகையில் வசித்து வந்தார். ஒரு சமயம் விளையாடிக் கொண்டிருந்த யாதவ குமாரர்களும், போஜ குமாரர்களும் சில முனிவர்களை சினம் கொள்ளச் செய்தனர். யாதவ குலத்தின் அழிவே பகவானின் திருவுளம் என்றறிந்த முனிவர்கள் அவர்களுக்குச் சாபமிட்டனர். சில மாதங்கள் கழித்து வ்ருஷ்ணி, போஜ, அந்தக வம்சத்து யாதவர்கள் ப்ரபாஸ தீர்த்தத்திற்கு வந்தனர். அங்கு நீராடி ரிஷிகள், பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்து அந்தணர்களுக்குச் சிறந்த தானங்களை அளித்தனர். அங்கு தங்கியிருந்த சமயத்தில் உணவு ஏற்று, பின்னர் மதுவருந்தினர். அதனால் மதிகெட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டு அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். மூங்கில்கள் ஒன்றோடொன்று உராய்ந்து தீ ஏற்பட்டு காட்டை அழிப்பது போல் தங்களுக்குள் அடித்துக் கொண்டு மாய்ந்து போனார்கள். 

பகவான் தன் மாயையின் திறனைக் கண்டு பின் ஸரஸ்வதி நதி தீரத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். தன் குலம் அழிவதைக் காண என் மனம் தாங்காது எனவும், என்னை பதரிகாச்ரமம் செல்லும் படியும் கட்டளையிட்டார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment