||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 81 - வில்லேந்திய சார்ங்கபாணி
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
பரந்திட்டு நின்ற* படு கடல் தன்னை*
இரந்திட்ட கைம் மேல்* எறிதிரை மோதக்*
கரந்திட்டு நின்ற* கடலைக் கலங்கச்*
சரந் தொட்ட கைகளால் சப்பாணி*
சார்ங்க விற்கையனே! சப்பாணி|
- பரந்திட்டு நின்ற - எல்லை காண முடியாத படி விஸ்தீரணமாய் பரந்து நின்ற
- படு கடல் - ஆழமான ஸமுத்ரமானது
- தன்னை இரந்திட்ட - வழி விடுவதற்காகத் தன்னைக் குறித்து சரணாகதி பண்ணின
- கை மேல் - கைகளின் மீது
- எறி திரை - திவலைகளை வீசுகின்ற அலைகளினால்
- மோத - மோதி அடிக்க
- கரந்திட்டு நின்ற - முகம் காட்டாமல் மறைந்து கிடந்த
- கடலைக் - அக் கடலுக்கு உரிய தேவதையான வருணன்
- கலங்க - கலங்கி விடும்படி
- சரம் - அம்புகளை
- தொட்ட - தொடுத்து விட்ட
- கைகளால் - திருக்கைகளால்
- சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்
- சார்ங்கம் - ஸ்ரீ சார்ங்க மென்னும் தநுஸ்ஸை
- வில் கையனே - கையில் தரித்தவனே!
- சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்
அன்று, ராமாவதாரத்தின் போது, ராமனாக அவதரித்திருந்த நீ, இலங்கை செல்வதற்காக கடலை வழி ஏற்படுத்துமாறு கேட்க, கடலோ அலட்சியமாக, கேட்ட உன் கைகளின் மேல் அலையை மோதச்செய்ய, அதனால் நீ மிகவும் கோபமடைந்தவனாய் அம்புகளை தொடுத்து கடலின் மீது செலுத்திய அத்திருக் கைகளால் சப்பாணி கொட்டவும். சார்ங்கமென்னும் தனுஸ்ஸை ஏந்தியவனே, சப்பாணி கொட்ட வேண்டும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment