About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 1 February 2024

ஸ்ரீமத் பாகவத புராணம் - 45

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

ப்ரும்மாவின் தவம்

ஸ்கந்தம் 02

ஸூத பௌராணிகர் கூறினார்.

“சௌனகாதி மஹரிஷிகளே! அடியாரும் சான்றோரும் நிரம்பிய அவையில் அரசனான பரீக்ஷித் பகவானின் அமுதத் திருவிளையாடல்கள் பற்றிக் கேட்க விரும்பி, ஸ்ரீ சுகரிடம் வேண்டவே, அவர் மகிழ்ச்சி மிகுந்து வேதத்திற்கு ஒப்பான ஸ்ரீமத் பாகவத புராணத்தைக் கூறினார். அது முன்பு ப்ரும்ம கல்பத்தின் துவக்கத்தில் பகவானே ப்ரும்மாவிற்கு உபதேசித்தது. பாண்டு மகனின் கேள்விகளுக்கு பதில்களை வரிசையாகக் கூற ஆரம்பித்தார் ஸ்ரீ சுகர்.


கனவு காண்பவனுக்கும் கனவில் தோன்றும் விஷயங்களுக்கும் எவ்வாறு தொடர்பில்லையோ, அதே போல், தேகம் முதலியவற்றைக் கடந்த அனுபவ ரூபமான ஆத்மாவிற்கு, மாயயால் தோற்றமளிக்கும் உலகியல் பொருள்களுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை. மாயயினால் ஜீவன், பற்பல உருவங்களாகக் காட்சியளிக்கும் (குழந்தை, சிறுவன், இளைஞன், மனிதன், தேவன் என்று பலவாறாக மாறிக்கொண்டிருக்கும்) உடலுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாக எண்ணுகிறது. முக்குணங்களையும் கலக்கி நிற்கும் காலம், மயக்கம் தரும் மாயை, இவற்றைக் கடந்த ஆனந்தமயமான ஆத்ம ஸ்வரூபத்தில் மூழ்குகையில் ஜீவனின் நான் எனது என்ற பற்று அகன்று முழுமையடைகிறான். ப்ரும்மாவின் உண்மையான தவத்தினால் மகிழ்ந்த இறைவன், அவரெதிரே தோன்றி ஆன்ம தத்துவத்தின் உண்மைப் பொருளை விளக்கினார். அதையே உனக்குச் சொல்கிறேன்.

மூவுலகங்களுக்கும் பிதாவான ப்ரும்ம தேவர் தான் பிறந்த இடமான தாமரையிலிருந்து எவ்வாறு உலகைப் படைக்கலாம் என்று எண்ணினார். ஆனால் அவருக்கு ஒன்றும் புலப்படவில்லை. சரி, தான் எங்கு இருக்கிறோம் என்பதை அறிய, தாமரைத் தண்டைப் பிடித்துக்கொண்டு கீழிறங்கினார். எவ்வளவு தூரம் இறங்கினாலும் அது எங்கிருந்து முளைத்தது என்று தெரியவும் இல்லை. சுற்றிலும் வெற்றிடம். தண்டு கீழே போய்க்கொண்டே இருந்தது. சலித்துப் போன அவர், மீண்டும் ஏறி கமலத்திலேயே அமர்ந்தார். அப்போது அவர் காதுகளின் அருகில், த ப என்ற ஒலி கேட்டது. ஆச்சரியப்பட்ட அவர் ஒலி எங்கிருந்து வருகிறது என்று அறிய முயன்று தோற்றுப் போனார். மீண்டும் அதே ஒலி கேட்டதும், தன்னைப் படைத்தவருக்குத் தான், தான் இங்கிருப்பது தெரியும். அவர் குரலாய்த் தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதைத் தனக்கான கட்டளையாய் ஏற்று தவம் செய்யத் துவங்கினார்.

தவம் இயற்றுபவர்களிலேயே ப்ரும்ம தேவர் மிகவும் உயர்ந்தவர். அவரது ஞானமோ அளவிடற்கரியது. தன் பஞ்ச ப்ராணன்களையும் ஒடுக்கி, மனம், கர்மப் புலன்கள், அறிவுப்புலன்கள் ஆகியவற்றைத் தன்வயப்படுத்தி கடுந்தவம் இயற்றினார். ஆயிரம் தேவ வருஷங்கள் அதாவது 3,60,000 மனித வருஷங்களுக்கு அனைத்துலகும் ஒளி பெறத் தவம் இயற்றினார். அவரது தவத்தைக் கண்ட இறைவன் அவருக்கு ஸ்ரீ வைகுண்ட தரிசனம் அளித்தார். அதற்கிணையான லோகம் ஏதுமில்லை. அங்கு, ஆத்யாத்மிகம் போன்ற துன்பங்களோ மரண பயமோ, உடற்பற்றோ, மயக்கமோ இல்லை. அங்கு ரஜோ குணமோ, தமோ குணமோ, ஸத்வ குணமோ இல்லை. காலன் கால் வைக்காத லோகம். ப்ரக்ருதியான மாயையும் இல்லை. விருப்பு வெறுப்பு இல்லை. விஷ்ணு பார்ஷதர்கள் உள்ளனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment