About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 1 February 2024

திவ்ய ப்ரபந்தம் - 80 - பெரியாழ்வார் திருமொழி - 1.6.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 80 - தேவகி சிங்கமே! சப்பாணி கொட்டு
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - ஆறாம் பாசுரம்

தாரித்து நூற்றுவர்* தந்தை சொற் கொள்ளாது* 
போருய்த்து வந்து* புகுந்தவர் மண்ணாளப்* 
பாரித்த மன்னர் படப்* பஞ்சவர்க்கு* 
அன்று தேருய்த்த கைகளால் சப்பாணி* 
தேவகி சிங்கமே! சப்பாணி|

  • தந்தை - எல்லார்க்கும் பிதாவாகிய 
  • சொல் - உனது பேச்சை 
  • தாரித்து கொள்ளாது - மனத்தில் கொண்டு சொன்னபடி கேட்காமல் 
  • போர் உய்த்து வந்து - யுத்தத்தை நடத்துவதாக கர்வத்துடன் வந்து 
  • புகுந்தவர் - போர்க் களத்தில் பிரவேசித்து 
  • மண் - தாங்களே பூமி முழுவதும் 
  • ஆள பாரித்த - ஆளுவதற்கு முயற்சி செய்த 
  • மன்னர் - அரசர்களாகிய 
  • நூற்றுவர் - நூற்றுக் கணக்காய் இருந்த கௌரவர்கள்
  • பட - மாண்டு போகும்படி 
  • பஞ்சவர்க்கு - பாண்டவர்கள் ஐவர்க்கும் வெற்றி உண்டாக
  • அன்று தேர் உய்த்த - அன்று பார்த்த ஸாரதியாய் நின்று தேரை ஓட்டின
  • கைகளால் - திருக்கைகளாலே 
  • சப்பாணி கொட்டாய்! - சப்பாணி கொட்டி அருள வேணும்
  • தேவகி - தேவகியின் வயிற்றில் பிறந்த 
  • சிங்கமே! - சிங்கக்குட்டியே! 
  • சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்

தந்தையாகிய உன் சொல் கேளாமல் ராஜ்யத்தை தாங்களே ஆளும் பேராசையினால் பஞ்ச பாண்டவர்களின் மீது போர் தொடுத்து வந்த நூற்றுக்கணக்கான துர்யோதன மன்னர்களை மாய்த்து, இது விஷயமாக பாரத யுத்தத்தில் பாண்டவர்களுக்காக தேரை ஒட்டிய அத் திருக்கைகளால் சப்பாணி கொட்ட வேண்டும். தேவகியிடமிருந்து தோன்றிய சிங்கக் குட்டியைப் போன்றவனே, நீ சப்பாணி கொட்ட வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment