||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
சால்வனின் வீழ்ச்சி|
சார்ங்கம் என்ற தமது வில்லைக் கிருஷ்ணர் தம் இடத்தோளில் மாட்டிக் கொண்டிருந்தார். அது தோளிலிருந்து விலகித் தரையில் விழுந்தது. இதைக் கண்டு, யுத்தத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள், "ஹா ஹா! என்று ஆரவாரித்தார்கள். பிறகு சால்வன் கிருஷ்ணரைப் பார்த்து இழிவான வார்த்தைகள் பேச ஆரம்பித்தான்.
"ஏ மடையா! நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நீ வெட்கமில்லாமல் ருக்மிணியைத் திருடிக் கொண்டு போனாய். பிறகு ராஜ சூய யாகத்தில் சிசுபாலன் போருக்குக் தயாராக இல்லாத சமயம் பார்த்து அவனைக் கொன்றாய். என் அருமை நண்பனைக் கொன்றதற்காக நான் உன்னைக் கொன்று பழி தீர்த்துக் கொல்லப் போகிறேன்" என்றான்.
கிருஷ்ணருக்கு கோபம் வந்தது. "வீண் பெருமை பேசாதே, சூரவீரர்கள் போரில் தங்கள் பராக்கிரமத்தைக் காண்பிப்பார்களே அன்றி, வீண் வார்த்தைகள் பேச மாட்டார்கள்" என்றார். இப்படிச் சொல்லிக் கொண்டே கிருஷ்ணர் தம் கதையினால் சால்வனின் கழுத்தைத் தாக்கினார். சால்வன் நடுங்கினான், இரத்தம் கக்கினான். உடனே தம் மாய விமானத்தில் எங்கேயோ சென்று மறைந்தான். அவன் எங்கு இருக்கிறான் என்று கண்டுபிடிக்க கிருஷ்ணர் முயன்றார்.
அப்பொழுது யாரோ ஒருவன் வந்து கிருஷ்ணனின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து அழுது கொண்டே, "நான் உங்கள் தாயார் தேவகி அம்மையாரால் அனுப்பப்பட்டவன். உங்களுடைய அருமைத் தகப்பனார் வசுதேவரைச் சால்வன் இறைச்சி விற்பவன் ஆட்டைப் பிடித்துச் செல்வது போலப் பிடித்துச் சென்று விட்டான்" என்று சொன்னான்.
இதைக் கேட்டுக் கிருஷ்ணர் ஒரு கணம் திகைத்தார். "தேவர்களாலும் அசுரர்களாலும் வெல்ல முடியாத பலராமனை இந்தச் சால்வன் எப்படி வென்று என் தகப்பனாரை அழைத்துச் சென்றான்? என்று நினைத்தார். கிருஷ்ணர் இப்படி யோசனை செய்து கொண்டிருக்கையில் சால்வன், வசுதேவரைப் போலத் தோற்றமளித்த ஓர் உருவத்தைக் கிருஷ்ணருக்குக் காட்டினான்.
"நீ யாருக்காக உயிர் வாழ்கிறாயோ, அந்த உன் தகப்பனார் இதோ இருக்கிறார். உன் கண் முன்னால் அவரை நான் கொல்லப் போகிறேன், உன்னால் முடிந்தால் அவரைக் காப்பாற்று, பார்க்கலாம்!" என்றான்.
இப்படிச் சொல்லிக் கொண்டே சால்வன் தன் வாளினால் வசுதேவரின் தலையை துண்டித்தான். கிருஷ்ணர் ஒரு கணம் துக்கத்தில் ஆழ்ந்தார். ஆனால் மறுகணமே, அது சால்வனின் மாய வேலை என்று தெரிந்து கொண்டார். பலராமரின் பாதுகாப்பில் இருக்கும் வசுதேவரைச் சால்வன் கைப்பற்றி இருக்க முடியாது என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டது. அவனை இனித் தாமதமின்றிக் கொல்ல வேண்டும் என்று நினைத்தார். அவர் தம் சக்ராயுதத்தை ஏவ, அது சால்வனை நோக்கிப் பாய்ந்து, அவன் தலையை அவன் உடலிலிருந்து பிரித்தது. இதைக் கண்டு எல்லா யாதவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தன நண்பனின் சாவுக்குப் பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்று, சால்வனின் நெருங்கிய நண்பனான தந்தவக்திரன் கிருஷ்ணரைத் தாக்க முன் வந்தான். ஆனால் அவன் கிருஷ்ணருக்கு முன் எம்மாத்திரம்! கிருஷ்ணர் அவன் மார்பில் முஷ்டியால் குத்த, அவன் இறந்து கீழே விழுந்தான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment