||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
அக்ரூரர் அஸ்தினாபுரம் செல்லுகிறார்|
வசுதேவரும் தேவகியும் தங்கள் உறவினர்களைப் பற்றியெல்லாம் கிருஷ்ணருக்கும் பலராமனுக்கும் சொன்னார்கள். அவர்கள் யார், பெயர்கள் என்னென்ன, எங்கு இருக்கிறார்கள், எப்படிப்பட்டவர்கள் என்றெல்லாம் அறிய இருவரும் மிகவும் ஆவலாக இருந்தார்கள். உறவினர்களைப் பற்றிப் பேசும் போது குந்தி என்னும் தன் சகோதரிகளில் ஒருத்தியைச் சந்திர வம்சத்தைச் சேர்ந்த பாண்டு மன்னனுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டது என்று வசுதேவர் சொன்னார். பாண்டு இளம்வயதிலேயே மரணமடைந்துவிட்டதால், குந்தியின் ஐந்து மக்களாகிய பாண்டவர்களை அவர்களுடைய பெரியப்பா திருதராஷ்டிரனும், அவர்களுடைய பிள்ளைகளையும் சரியாக நடத்தவில்லை என்று சொன்னார். இது குறித்து கிருஷ்ணன் தலையிட்டு அவர்களுக்கு நீதி கிடைக்கும்படி செய்தால் நல்லது என்றும் சொன்னார்.
சந்திர வம்ச அரசர்களின் தலைநகரம் அஸ்தினாபுரமாகும். நிலைமை அங்கே எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள நினைத்து அங்கு யாரையாவது அனுப்ப வேண்டும் என்று கிருஷ்ணன் தீர்மானித்தான். கம்சனின் தூதராக பிருந்தாவனத்திற்கு வந்த அக்ருரரின் ஞாபகம் அவனுக்கு வந்தது. உடனே அவன் பலராமனையும், தம் நண்பரும் பக்தருமான உத்தவரையும் அழைத்துக் கொண்டு அக்ருரர் வீட்டிற்குச் சென்றான்.
இவர்களைக் கண்டதும் அக்ருரர் மகிழ்ச்சியுடன் வாசலுக்கு ஓடிவந்து அவர்களை வரவேற்றார், அவர்களை அவர் திரும்பத் திரும்ப நமஸ்காரம் செய்தார். அவர்களை வசதியான ஆசானங்களில் அமரவைத்து, சந்தானம், மலர்கள், இன்னும் மற்ற பூஜைப் பொருட்கள் இவற்றை கொண்டு பூஜித்தார். தாம் கீழே உட்கார்ந்து, கிருஷ்ணனின் பாதங்களை தம் மடியில் வைத்துக் கொண்டு அவற்றை வருடினார்.
பிறகு அக்ருரர் மிகவும் அடக்கத்துடன் கிருஷ்ணனைப் பார்த்து, “ஏன் அன்புக்குகந்த கிருஷ்ணரே! கம்சனையும் அவனுடைய ஆட்களையும் கொன்று பெருத்த உதவி செய்தீர்கள், யாதவ குலத்தையே அவனிடமிருந்து காப்பாற்றினீர்கள். இன்று தங்கள் வரவால் ஏன் வீடு புனிதமடைந்தது.
உலகிலேயே நான் மிகவும் பெரிய பாக்கியசாலி ஆகிவிட்டேன்” என்று சொன்னார். அக்ருரரின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த கிருஷ்ணன், “தங்கள் ஒரு காரியமாக அஸ்தினாபுரம் செல்ல வேண்டும். பாண்டு அரசனின் மறைவுக்கு பிறகு, அவருடைய பிள்ளைகளான பாண்டவர்களையும், அவர்களுடைய விதைவை தாயார் குந்தியும், திருதராஷ்டிரரின் ஆக்கத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். திருதராஷ்டிரர் தாம் அவர்களுக்கு இரட்சகர். என்றாலும், கண்பார்வை இல்லாத அவர் தம் பொறுப்பிலும் குருடராகவே இருக்கிறார் என்று கேள்விபட்டேன். தம் துஷ்ட மகன் துரியோதனன் மீது உள்ள பாசத்தினால் அவர் பாண்டவர்களைச் சரியானபடி நடத்தவில்லை என்று தெரிகிறது.
“ஆகவே தயவுசெய்து தாங்கள் அஸ்தினாபுரம் சென்று திருதராஷ்டிரர் பாண்டவர்களை சரியாக நடத்துகிறாரா இல்லையா என்று தெரிந்து கொண்டு வாருங்கள். அதற்குப் பின் பாண்டவர்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்று நான் தீர்மானிக்கிறேன்” என்று சொன்னான். இப்படிச் சொல்லி விட்டுக் கிருஷ்ணன் பலராமனுடனும் உத்தவருடனும் தன் வீடு திரும்பினான். அடுத்த நாள், அக்ருரர் அஸ்தினாபுரம் புறப்பட்டார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment