About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 15 October 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - ஐம்பத்தி எட்டாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

058 நில் என்று பெற்றேனோ இடையற்றூர்குடி நம்பியைப் போலே|

இடையாற்றூர் நம்பி, ஸ்ரீ ரங்கம் அருகில் உள்ள இடையாற்றூக்குடி என்னும் ஊரில் வசித்து வந்த தீவிர நம்பெருமாள் பக்தர். ஸ்ரீ ரங்கத்தில் ஆண்டிற்கு நான்கு முறை பிரம்மோற்சவம் நடக்கும். ஆண்டு முழுவதும் ஸ்ரீ ரங்கத்தில் நம்பெருமாளுக்கு புறப்பாடும் உற்சவமும் நடக்கும் என்றாலும், பிரம்மோற்சவத்தின் போது ஸ்ரீ ரங்கமே அழகு கோலம் கொண்டிருக்க, நம்பெருமாள் அழகில் மயங்க அனைவரும் கூடுவர். இடையாற்றூர் நம்பியும் இதற்கு விதிவிலக்கல்ல. பிரம்மோற்சவத்தின் போது, இடையாற்றூர் நம்பி முதல் நாளே ஸ்ரீ ரங்கம் வந்துவிடுவார்.


கொடியேற்றம் முதல் அனைத்து புறப்பாடுகளிலும் கலந்து கொண்டு, ஒன்று விடாமல் சேவிப்பார். பிரம்மோற்சவம் முடிந்த பின், வீடு திரும்பினாலும், அனுதினமும் நம்பெருமாளின் அழகை எண்ணியபடியும், அடுத்த பிரம்மோற்சவம் பற்றிய ஏக்கத்துடனும் நாட்களைக் கடத்துவார். ஒரு பிரம்மோற்சவம் விடாது, ஆண்டுதோறும் நான்கு பிரம்மோற்சவத்தின் போதும் ஸ்ரீ ரங்கம் சென்று நம்பெருமாளை சேவித்து வருவார்.

ஆண்டுகள் சென்றன. முதுமை ஆட்கொண்ட காரணத்தால், ஒரு முறை இடையாற்றூர் நம்பியால் பிரம்மோற்சவத்தின் முதல் நாள் அன்று ஸ்ரீ ரங்கம் செல்ல முடியவில்லை. முதுமையினால் அவதி கொண்டாலும், ஸ்ரீரங்கம் புறப்பட்டு, ஆறாம் நாளே கோவிலினை அடைந்தார். இந்நிலையில், முதல் நாள் முதல் இடையாற்றூர் நம்பியைக் காணாது நம்பெருமாள் தவித்துப் போனார். ஆறாம் நாள், தூணைப் பற்றிக் கொண்டு இடையாற்றூர் நம்பி நிற்பதைக் கண்டு பேரானந்தம் கொண்ட நம்பெருமாள், அவரிடம், “உன் வரவால் மனமகிழ்ந்தேன். முதல்நாளே வரும் நீ ஏன் இம்முறை ஆறாம் நாள் வந்தாய்?"என வினவினார்.


அதற்கு இடையாற்றூர் நம்பி, “நம்பெருமாளே! எம்பெருமானே! உன் தயவினால், இத்தனை ஆண்டுகள் உன் அழகை சேவிக்கும் பாக்கியம் கொண்டேன். முதுமை காரணமாக இவ்வுடல் பயணத்திற்கு ஒத்துழைக்கவில்லை. இதுவே கடைசியோ என்று மனம் பதறுகிறது.”, என்றார், இருகரம் கூப்பி.

நம்பெருமாள், உடனே, “என்றால், இனி, இங்கேயே நில்லும். அனுதினமும் எம்மை சேவித்துக் கொண்டு இரும்.”, என்று கூறி செல்ல, நம்பெருமாள் உற்சவம் முடியும் வேளை, இடையாற்றூர் நம்பியின் உடல் பிரிந்து உயிர் செல்ல, மோக்க்ஷம் அடைந்தார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " இடையாற்றூர் நம்பி போல் அனுதினமும் நம்பெருமாளை எண்ணினேனோ, இல்லை, இடையாற்றூர் நம்பி போல், நம்பெருமாளால், “இங்கேயே எம்முடன் நில்”, என்று அன்புடன் தான் கூறப்பெற்றேனோ? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment