About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 15 October 2023

ஸ்ரீமத் பாகவத புராணம் - 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

எங்கே கங்கை?

ஸ்கந்தம் 01

ஒரு மரத்தின் பயன் என்பது அதன் இலை, பட்டைகள், பூ, காய்கள், நிழல், என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் பழமே அதன் உண்மையான பலனாகும்.


வேதம் ஒரு கற்பக மரம். அதனால் அநேக ப்ரயோஜனங்கள் உண்டு. ஆனால், அதன் ஸாரமாகப் பழுத்த பழம் தான் ஸ்ரீமத் பாகவதம். அது நன்கு பழுத்து அதன் நறுமணத்தினால் ஈர்க்கப்பட்டு அதை எடுத்துக் கொள்ள ஸ்ரீ சுகாசார்யர் தேடி வந்ததினாலேயே அவர் கிளி முகம் உடையவராக உருவகப்படுத்தப் படுகிறார். மேலும், கிளியானது சொல்லிக் கொடுப்பதை மிகைப்படுத்தாமலும், அதே சமயம் குறைக்காமலும் திருப்பிச் சொல்லும் இயல்புடையது. வியாஸர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே திருப்பிச் சொல்கிறார் என்பதனாலும் அவர் கிளி முகம் கொண்டவராகச் சித்தரிக்கப் படுகிறார்.

ஸ்ரீமத் பாகவதத்தின் மாஹாத்மியத்தில் அதன் பெருமையை விளக்கும் வண்ணம் அநேக கதைகள் சொல்லப்படுகின்றன.

ஆத்ம தேவன் என்ற மஹாத்மாவின் கதை, பக்தி தேவியின் கதை மேலும் பாகவத புராணத்தைப் பூஜை செய்த ஒருவரின் கதை ஆகியவை மிகவும் ப்ரஸித்தம். ஒவ்வொன்றையும் சுருக்கமாகப் பார்க்கலாம்.

தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கங்கா ஸ்நானம் செய்வதற்காக காசிக்கு பாத யாத்திரையாகச் சென்று கொண்டு இருந்தார். அக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் கிடையாது. காசிக்குச் செல்ல பல மாதங்கள் பிடிக்கும். நடந்தோ, அல்லது மாட்டு வண்டியோ கட்டிக் கொண்டு போவார்கள். பாரத தேசத்தில் ஹோட்டல்கள் என்பதே கிடையாது. உணவை விற்பது பாவம் என்று கருதப்படும் தேசம். ஆங்காங்கு சத்திரங்களிலோ வீட்டுத் திண்ணைகளிலோ தங்கி இளைப்பாறிப் கொண்டு பயணத்தைத் தொடர வேண்டும். யாத்ரிகர்கள் தங்குவதற்காகவே வீட்டு வாசலில் திண்ணை வைத்துக் கட்டியிருப்பார்கள். இரவு உறங்கச் செல்லு முன் வாசலில் யாராவது வந்திருக்கிறார்களா என்று பார்த்து உணவிட்டு பின் கதவடைக்கும் காலம் ஒன்று இருந்தது.

தென்னாட்டிலிருந்து கிளம்பிய மனிதர், பல நாட்கள் நடந்து நடந்து காசிக்கு அருகில் சென்று விட்டார். இரவாகி விட்டதால், ஒரு வீட்டுத் திண்ணையில் தங்கினார். காலையில் அந்த வீட்டில் குடியிருந்தவர் வெளியில் வந்ததும், அவரைப் பார்த்துக் கேட்டார். 

"நான் தென்னாட்டில் இருந்து வரேன். காசிக்குப் போய் கங்கைல ஸ்நானம் பண்ணணும்னு ஆசை. கிட்ட வந்துட்டேன்னு தெரியறது. இங்கேர்ந்து கங்கை எவ்வளவு தூரம் இருக்கும்? எவ்வளவு நாள் ப்ரயாணம் நடந்தா காசி வரும்?"

அந்த மனிதர் பார்க்க மிகவும் ஸாதுவாய் இருந்தார். அவர் சொன்ன பதில் இவருக்கு மிகவும் அதிர்ச்சியை அளித்தது.
காசியாவது, கங்கையாவது, அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் எங்கேயும் போனதேயில்லை. பயணிக்குக் கோபம் வந்தது.

நமது ஸநாதன தர்மத்தில் ஜென்மாவில் ஒரு முறையாவது காசியில் போய் கங்கையில் ஸ்நானம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. பாரத தேசத்தின் தென் கோடியில் இருந்து மிகவும் ஆசை ஆசையாக தவித்துக் கொண்டு எத்தனையோ பேர் கங்கா ஸ்நானத்திற்காக வருகிறோம். இவர் காசியின் அருகிலேயே இருந்து கொண்டு தெரியாது என்கிறாரே! காசி தெரியாதா, கங்கை தெரியாதா? உன் வீட்டுத் திண்ணையில் தங்கியதே மஹா பாபம். இப்படி ஆகிவிட்டதே. என்று கத்திக் கொண்டு பலவாறாக அவரைத் திட்டி விட்டுக் கிளம்பினார்.

கோபத்தில் விடுவிடுவென்று நடந்தவர் அன்று மாலையே புண்யமான வாரணாசி நகரத்தை அடைந்து விட்டார். கங்கை எங்கே என்று விசாரித்துக் கொண்டு கங்கைக் கரைக்கு வந்தார். கங்கையில் ஸ்நானம் செய்தால் தான் நேற்றிரவு அவர் வீட்டில் தங்கிய பாபம் போகும் என்று கருவிக் கொண்டு ஸ்நானம் செய்ய ஆயத்தமானார். ஆனால், கங்கைக் கரையில் பலரும் ஈரமாக எதிர்ப்பட்டனர். நிறைய பேர் ஸ்நானம் செய்து விட்டு அனுஷ்டானம் செய்து கொண்டிருந்தனர்.

ஆஹா, இவர்களைப் பார்ப்பதே புண்யம். ஈரத்தோடு எதிர்ப்பட்டவரைக் கேட்டார்.
"ஐயா, நீங்க எங்க குளிச்சிட்டு வரீங்க?" 
அவர்,  இவரை ஏற இறங்கப் பார்த்து விட்டு, "கங்கைல" 
"அப்படியா, ரொம்ப சந்தோஷம். எனக்கும் கங்கா ஸ்நானம் பண்ணணும்னு ஆசை. இதுக்காகவே தென்னாட்டில் இருந்து புறப்பட்டு பல மாசமா நடந்தே வந்தேன். கங்கை எங்கே இருக்கு?"

அவர், இவரை மீண்டும் ஏற இறங்கப் பார்த்தார்.
"என்னாச்சுங்க? கங்கைக் கரையிலேயே நின்னுண்டு கங்கை எங்கேன்னு கேக்கறீங்க? இதோ ப்ரவாஹமா ஓடறதே இதான் கங்கை. பார்த்து காலை வைங்க. தண்ணீர் வேகம் அதிகம்."

"இதோவா, எங்கே எனக்குத் தெரியலயே"
"கண்ணு தெரியாதா? இதோ பாருங்க நீங்க நிக்கற இடத்திலேர்ந்து ஒரு அடி நகர்ந்தா நதி தானே?"
சொரேலென்றது பயணிக்கு!

ப்ரவாஹமாக ஓடும் கங்கா மாதாவின் ஒரு துளி கூட அவர் கண்ணுக்குத் தெரியவில்லை! அதிர்ந்து போனார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment