About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 2 February 2024

ஸ்ரீமத் பாகவத புராணம் - 46

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பகவான்

ஸ்கந்தம் 02

ப்ரும்மாவின் கடும் தவத்தில் மகிழ்ந்த இறைவன் அவருக்கு வைகுண்ட தரிசனத்தை அளித்தார். அங்கு விஷ்ணு பார்ஷதர்கள் ஸ்ரீ விஷ்ணுவைப் போலவே தோற்றமளித்தனர். திருமகள் அனைத்துச் செல்வங்களையும் கொண்டு பற்பல விதங்களில் இறைவனுக்கு பூஜை செய்கிறாள். தன் அன்புக் கணவனின் திருவிளையாடல்களை இனிமையான குரலில் பாடுகிறாள். வண்டுகள் அவளின் அழகில் மயங்கி அவளது குணங்களைப் பாடுகின்றன. ஒப்பற்ற தலைவனும், அழகே உருவானவனுமான இறைவன் ப்ரகாசமாக விளங்குகிறார். சுநந்தன், நந்தன், ப்ரபலன், அர்ஹணன் முதலிய பார்ஷதர்கள் பகவானுக்குப் பணிவிடை செய்கின்றனர். அவரது திருமுகம் தாமரையை ஒத்தது. மயக்கும் இனிய புன்முறுவல் தவழ்கின்றது. பெரிய அகன்ற திருக்கண்களில் செவ்வரி ஓடுகிறது. தலையில் திருமுடி, காதுகளில் குண்டலங்கள், அரையில் மஞ்சள் பட்டாடை, திருமார்பில் தங்கத்தாலான ரேகை போல்,   மின்னல் கொடி போல் திருமகள். நாற்கரங்கள். ஆஹா! என்ன அழகு! விலை மதிக்க வொண்ணா பீடத்தில் பகவான் எழுந்தருளி இருக்கிறார். செல்வம், தர்மம், புகழ், செழிப்பு, ஞானம், வைராக்யம் இந்த ஆறு குணங்களும் சேர்ந்திருப்பதே 'பக' எனப்படும். பக என்னும் தன்மை கொண்டவர் பகவான் ஆகிறார். இவை அனைத்தும் நிலைத்து நிற்கும் இடமாக இறைவன் இருக்கிறார். தனது நித்ய ஆனந்தத்தில் எப்போதும் நிலைத்திருக்கிறார்.


இவ்வாறு இறைவனைத் தரிசித்த ப்ரும்மா ஆனந்தக் கடலில் மூழ்கினார். ஆனந்தக் கண்ணீர் சொரிய, பகவானின் திருவடித் தாமரைகளை சிரம் தாழ்த்தி வணங்கினார். அன்பே வடிவான பகவான், தன்னைக் கண்ட ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டு, படைப்பிற்கான கட்டளையை எதிர் நோக்கி இருக்கும் ப்ரும்மாவின் கரங்களைத் தன் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு புன்னகை பூத்தவாறு கூறலானார்.

“ப்ரும்ம தேவரே! எல்லா வேதங்களையும் உமக்குள் கொண்டு இருக்கிறீர். வெகுகாலம் தவம் செய்து என்னை மகிழச் செய்தீர். நானோ அடியார் விரும்பிய அனைத்தையும் அளிப்பவன். என்னை தரிசிக்கும் வரை தான் ஒருவனைச் சிரமம் தீண்ட முடியும். நீங்கள் என்னைக் காணாமலேயே, என் குரலைக் கேட்டு அதன்படிச் செய்தீர். இந்த வைகுண்ட தரிசனத்தை நானே உமக்கு விரும்பி அளித்தேன். படைப்பை எப்படிச் செய்வது என்று நீங்கள் மயங்கியதால் தவம் செய்யக் கட்டளை இட்டேன். தவம் எனது ஹ்ருதயம். நானோ தவத்தின் ஜீவன். தவத்தைக் கொண்டே இந்தப் ப்ரபஞ்சத்தைப் படைக்கிறேன். தவத்தாலேயே காக்கிறேன். தவத்தினாலேயே என்னுள் இழுத்துக் கொள்கிறேன். என் திறன் அனைத்தும் தவமே. ஆனால் அதைச் செய்வது மிகவும் கடினம்.”

ப்ரும்மா இறைவனிடம் சொன்னார். “இறைவா, அனைத்து உயிர்களின் சாட்சி தாங்களே. தாங்கள் தங்களது தடங்கல் அற்ற ஞானத்தால் என் உளத்தை அறிந்தீர். தாங்களே மாயையின் தலைவர். சிலந்தி தன் வாயிலிருந்து கசியும் திரவத்தால் வலை பின்னி, அதில் சுற்றிச் சுற்றி விளையாடித் தனக்குள் இழுத்துக் கொள்கிறது. அவ்வாறு செய்வதால் அதன் உடல் பருமனாகவோ, இளைத்தோ மாறுபாடு அடைவதில்லை. அது போல், தாங்களும் தங்களுடைய பற்பல சக்திகளால் ப்ரபஞ்சத்தைப் படைத்து, காத்து, தன்னுள் இழுத்துக் கொள்கிறீர். நீங்களும் செய்யும் லீலைகளால் எந்த மாறுபாடுகளும் இல்லாமல் இருக்கிறீர். இவ்வாறு எப்படிச் செயல்படுகிறீர்கள்? மேலும், தாங்கள் கட்டளை இட்டால், சோம்பலின்றி படைப்புத் தொழிலைத் துவங்குகிறேன். தங்கள் திருவருளால் 'நான் தான் படைக்கிறேன்' என்ற அகந்தையோ, அவற்றின் மீது பற்றுதலோ எனக்கு ஏற்படாமல் இருக்கட்டும். (இவ்விடத்தில் மிகவும் ஆச்சரியமாக தற்கால வழக்கத்தை ஸ்ரீமத் பாகவதம் மேற்கோள் காட்டுகிறது.) இறைவா! தோழமை பூண்ட ஒருவன் மற்றொருவரின் கைகளைப் பிடித்துக் குலுக்குவது போல் என் கைகளைத் தங்கள் திருக்கரங்களால் பிடித்தீர். என் படைப்புத் தொழில் தங்கள் சேவை என்பதை எப்போதும் நான் மறவாதிருக்க வேண்டும்” என்றார்.

பகவான் மிகவும் மகிழ்ந்து ப்ரும்மாவிற்கு சதுஸ்லோகீ பாகவதம் என்னும் பாகவத ஸாரத்தை உரைத்தார். பகவான் சொன்னதால் இது பாகவதம் எனப்படுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment