About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 13 August 2023

திவ்ய ப்ரபந்தம் - 7 - திருப்பல்லாண்டு 7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 7 - ஆழிவல்லானைப் பாடு
திருப்பல்லாண்டு - ஏழாம் பாசுரம்

தீயிற் பொலிகின் செஞ்சுடராழி* 
திகழ் திருச்சக்கரத்தின்*
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று
குடி குடி ஆட் செய்கின்றோம்*
மாயப் பொருபடை வாணனை* 
ஆயிரந் தோளும் பொழி குருதி பாயச்* 
சுழற்றிய ஆழி வல்லானுக்குப்* 
பல்லாண்டு கூறுதுமே|


ஏடு நிலம் பாசுரத்தில் சொல்லப்பட்ட கைவல்யார்த்திகள் தங்கள் தன்மைகளைச் சொல்லிக் கொண்டு வர, அவர்களையும் சேர்த்துக் கொள்கிறார்.
  • தீயின் - சந்திரன் ஸூர்யன் அக்நி முதலிய சுடர்ப் பொருள்கள் எல்லாவற்றையும் விட 
  • பொலிகின்ற - பிரபலமாகப் பிரகாசிப்பதும் 
  • செம் சுடர் - சிவந்த ஒளியோடு கூடி 
  • ஆழி - வட்டவடிவமான 
  • திகழ் - விளங்குவதுமான
  • திருசக்கரத்தின் - திருவாழியாழ்வான் எழுந்தருளியிருக்கிற 
  • கோயில் - ஸ்தானமாகிய 
  • பொறியாலே - அடையாளத்தினால் 
  • ஒற்றுண்டு நின்று - அடையாளம் செய்யப்பட்டவர்களாய் இருந்து 
  • குடி குடி - தலைமுறை தலைமுறையாக 
  • ஆள் செய்கின்றோம் - எம்பெருமானுக்குக் கைங்கரியம் செய்து வருகின்றோம்: அதுவும் தவிர 
  • மாயப் - வஞ்சனையாக போரிடும்; 
  • பொருபடை - சேனையையுடைய;  
  • வாணனை - பாணாசுரனை; 
  • ஆயிரம் தோளும் - ஆயிரம் தோள்களிலிருந்தும் 
  • பொழி - வெளிக் கிளம்புகிற 
  • குருதி - ரக்தமானது 
  • பாய - வெள்ளமாகப் பாய்ந்தோடும் படி 
  • சுழற்றிய ஆழி - திருக்கையிலே சுழலச் செய்த சக்கராயுதத்தை 
  • வல்லானுக்கு - ஆளவல்ல எம்பெருமானுக்கு
  • பல்லாண்டு கூறுதுமே - மங்களாசாசனம் செய்வோம்
நமது வலது கையில் சக்ரச் சின்னமும் இடது கையில் சங்குச் சின்னமும் ஆசாரியன் மூலமாக முத்திரையாக பதித்துக் கொள்வது ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம். தாமும் தமது சந்ததியரும் இச்சின்னங்களை பதித்துக் கொண்டு தான் காலம் காலமாக பகவானுக்கு தொண்டு புரிவதாக கூறுகிறார் ஆழ்வார். நெருப்பைக் காட்டிலும் மிகவும் ஜ்வலிக்கிற சிவந்த ஒளியை உடைய, வட்டமாக ப்ரகாசிக்கிற சக்கரத்தாழ்வாரின் இருப்பிடத்தின் (திருமேனியின்) சிந்நத்தாலே அடையாளப் படுத்தப்பட்டு இனி மேல் வரும் காலங்களில் தலைமுறை தலை முறையாகக் கைங்கர்யம் செய்வதற்காக வந்தோம். மாய யுத்தம் செய்யும் ஸேனையை உடைய பாணாஸுரனுடைய ஆயிரம் தோள்களில் இருந்தும் ரத்த வெள்ளம் பீறிட்டுப் பாயும்படி சுழற்றப்பட்ட சக்கரத்தாழ்வாரை ஏந்தி நிற்கக் கூடியவனுக்கு, நாங்கள் பல்லாண்டு பாடுகிறோம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment