||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
018 அந்தரங்கம் சொன்னேனோ த்ரிஜடையைப் போலே|
"அன்பினால் தாயைக் காட்டிலும் இனியவள்" என்கிறார் கம்பர் திரிசடையைப் பற்றிக் கூறுகையில். சீதைக்கு அசோக வனத்தில் கிடைத்த ஒரே ஆறுதல் திரிசடை தான். அவளின் ஆறுதலால் தான் சீதை அசோக வனத்தில் உயிருடன் இருந்தாள் என்றே கூறலாம்.
த்ரிஜடை என்பவள் அசோகவனத்தில் சீதைக்கு பக்கத்தில் எப்பொழுதும் இருப்பவள். ராட்ஷசிகளுக்குள் ஒருத்தி. ஆனால் அவள் நல்லெண்ணம் படைத்தவள், விபீஷணனை போல. த்ரிஜடை அவ்வப்பொழுது சீதையை ஆசுவாசப் படுத்திக் கொண்டே இருப்பாள். ஜனகன் இறந்து விட்டதாக இராவணன் சீதையிடம் காட்டிய போது, இல்லை இது ஒரு மாயை என்று த்ரிஜடை தான் சீதைக்கு உண்மையை சொல்கிறாள். அடுத்து மாய சிரசை எடுத்து வந்து காட்டினான். அப்பொழுதும் இது ராம லக்ஷ்மணர் தலை இல்லை கவலைபடாதே. வெறும் மாயை தான் என்று ஆறுதல் சொன்னாள்.
சீதை சொல்கிறாள். நான் கனவு பார்க்க ஆசைபடுகிறேன். திரும்ப திரும்ப ராட்ஷசர்கள் தான் வருகிறார்களே ஒரு முறை கூட ராமரை நான் சேவிக்க முடியலையே! ராட்ஷசர்களை பார்த்து பார்த்து நல்ல கனவு கூட எனக்கு வரவில்லையே! என்று சோகப் படுகிறாள். அப்பொழுது த்ரிஜடை, என்ன கனவு பார்க்க வேண்டும் என்று கேட்கிறாள். அதற்கு சீதை சொல்கிறாள். ராமரை தேடிக் கொண்டு வா என்று லக்ஷ்மணனை அனுப்பினேன். ஆனால் அதற்குள் நான் சிறைபடுத்த பட்டேன். லக்ஷ்மணன் போய் ராமரை பார்த்தாரா, இருவரும் ஒன்றாக சேர்ந்து விட்டார்களா என்று தெரிந்தால் போதும் என்று சொன்னாள்.
அதற்கு திரிசடை, தான் கனவு ஒன்று கண்டதாகக் கூறி, அவளுக்கு ஆறுதல் சொன்னதுடன் அக்கனவுப் பற்றிக் கூறுகிறாள். எல்லா ராட்ஷசிகளும் அந்த இடத்தில் இருக்கும் போது த்ரிஜடை வந்து கனவை பற்றி சொல்கிறாள். "ராட்ஷசிகளே! இந்த சீதை யாரோ என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள். நேற்று இரவு கனவில் ஒன்று பார்த்தேன். இராவணனுக்கு பத்து தலைகளிலும் மொட்டை அடிக்கப்பட்டு, உடம்பு முழுக்க எண்ணெய் பூசப்பட்டு, கழுதையில் ஏற்றி உட்கார வைக்கப்பட்டு, செம்புள்ளி கரும்புள்ளி குத்தப்பட்டு, தெற்கு திக்கான எமன் திக்கை நோக்கி எம பட்டர்கள் இழுத்து போவதை கண்டேன். அதே சமயம் உயர்ந்த குதிரைகள் பூட்டின பொன் தேரிலே ராமரும் சீதையும் அமர்ந்து கொண்டு வடக்கு திக்கான குபேர பட்டணத்தை நோக்கி போவதாக கண்டேன். பட்டாபிஷேகத்தையும் கண்டேன். இந்த நிலைமை உண்மையாகவே நடந்து விட்டால் நம் நிலைமை என்னவென்று யோசித்து பாருங்கள். இந்த சீதை மனசு வைத்தால் அந்த நிலைமை வந்தால் கூட நம்மை ரட்சித்து விடுவாள்" என்று த்ரிஜடை சொல்கிறாள். த்ரிஜடை சொன்னதை கேட்ட சீதை வெட்கப்பட்டு புன்முறுவல் பூத்து நம் ராமர் ஜெயித்து விட போகிறார் என்று பெருமிதம் கொள்கிறாள். அப்பொழுது சீதை சொல்கிறாள். "உண்மையாகவே இந்த நிலைமை வந்ததென்றால் கவலைபடாதீர்கள், உங்களை நான் ரக்ஷிகிறேன்" என்று அப்பொழுதே உறுதி அளிக்கிறாள். பிறகு அதை போல நிலைமை வந்த போது சொன்ன உறுதியை காப்பற்றி சீதை அவர்களை ரக்ஷிகிறாள். கனவில் ராமரை கண்டதை சீதையிடம் சொல்லி சமாதான படுத்தினாள் த்ரிஜடை. "என் பக்கத்தில் யாரும் இல்ல. ஒரு தாய் இருந்து என்ன ஆறுதல் சொல்லிர்பாளோ அதை போல் நீ தான் இருந்தாய்" என்று சீதை த்ரிஜடையிடம் சொல்கிறாள்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “அந்தரங்கமான அர்த்தங்களை எடுத்துரைத்து சீதை கவலை பட வேண்டாம். கலங்காதே என்று ஆசுவாசப் படுத்தினாளே! அதை போல நான் பெருமாளுக்கோ பிராட்டிக்கோ ஆறுதல் சொல்லி எந்த கைங்கர்யமும் பண்ண வில்லையே! அவர்களுக்கு தேவையானதை எடுத்து சொல்லவும் இல்லையே! மற்ற பேருக்கு வரும் தீயை களைய எனக்கு நல்ல மனம் இல்லாமல் போயிற்றே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment