||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 8 - கருடக் கொடியானைப் பாடு
திருப்பல்லாண்டு - எட்டாம் பாசுரம்
நெய்யிடை நல்லதோர் சோறும்*
நியதமும் அத்தாணிச் சேவகமும்*
கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு*
காதுக்குக் குண்டலமும்*
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து*
என்னை வெள்ளுயிராக்கவல்ல*
பையுடை நாகப் பகை கொடியானுக்குப்*
பல்லாண்டு கூறுவனே|
அண்டக்குலம் பாசுரத்தில் சொல்லப்பட்ட ஐச்வர்யார்த்திகளும் பல்லாண்டு பாட இசைந்து வர, அவர்களையும் சேர்த்துக் கொள்கிறார்.
- நெய்யிடை - நெய் நடுவிலிருக்கும்
- நல்லது - போக்யமாய்
- ஓர் - விலக்ஷணமான
- சோறும் - ப்ரஸாதத்தையும்
- நியதமும் - எப்போதும்
- அத்தாணி - பிரியாமல் கூடவேயிருந்து செய்கிற
- சேவகமும் - கைங்கர்யமும்
- கை அடைக்காயும் - திருக்கையால் ப்ரஸாதிக்கும் தாம்பூலத்தையும்
- கழுத்துக்கு பூணோடு - கழுத்தில் தரித்துக் கொள்ள வேண்டிய ஆபரணத்தையும்
- காதுக்கு குண்டலமும் - காதில் இட்டுக் கொள்ள வேண்டிய குண்டலத்தையும்
- மெய் இட - உடம்பில் பூசிக் கொள்ளும் படி
- நல்லதோர் - பரிமளம் நிறைந்த
- சாந்தமும் தந்து - சந்தனமும் கொடுத்து
- என்னை - இப்படி ஸம்ஸாரியாயக் கிடந்த என்னை
- வெள் உயிர் ஆக்கவல்ல - சுத்த ஸ்வபாவமுள்ளவனாக செய்தருளினவனாய்
- பையுடை - படங்களையுடைய
- நாகப் பகை - ஸர்ப்பத்துக்கு விரோதியான கருடனை
- கொடியானுக்கு - கொடியாக உடைய எம்பெருமானுக்கு
- பல்லாண்டு கூறுவனே - மங்களாசாசனம் செய்வோம்
முந்தய ஒரு பாசுரத்தில் ஐஸ்வர்யத்தையே பிரதானமாகக் கருதி பெருமானை வழிபடுபவர்களை கண்டித்திருந்தார். ஆனால் அவர்களுக்கும் ஒரு சமாதானமாய் இப்பாசுரம் அமைந்துள்ளது. வாழ்க்கையை முறையாக நடத்த தேவையான ஐஸ்வர்யத்தை பெருமானிடம் பிரார்த்தித்து பெற்றுக் கொள்வதில் தவறில்லை. நெய்யின் நடுவிலே இருக்கும் தூய்மையான, சுவையான ப்ரஸாதத்தையும், எப்போதும் அந்தரங்க கைங்கர்யமும், எம்பெருமான் திருக்கையாலே இடப்பட்ட வெற்றிலைப் பாக்கையும், கழுத்துக்கு ஆபரணமும், காதுக்கு ஆபரணமான குண்டலத்தையும், உடம்பிலே பூசுவதற்கு ஏற்ற, நல்ல பரிமளம் மிக்க ஒப்பற்ற சந்தனமும் கொடுக்க கூடியவனான, என்னை நல்ல மனம் உள்ளவனாக ஆக்கக்கூடிய, பணங்களை [படங்களை] உடைய பாம்புகளுக்கு விரோதியான கருடனைக் கொடியாக உடைய எம்பெருமானுக்கு பல்லாண்டு கூறுவேன் என்று ஐச்வர்யார்த்தி கூறுகிறான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment