About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 13 August 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - பதினேழாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

017 அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே|

கருணாமூர்த்தியான எம்பெருமான் எடுத்த அவதாரங்களில், ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டிய அவதாரம் ராம அவதாரம். பல நல்ல நெறிகளை தன் வாழ்வின் மூலம் உபதேசித்தவர். மனிதனாகப் பிறந்த ராமபிரான் இந்த உலகத்தில் உள்ளவர்களுக்குப் பல நல்ல நெறிகளை தன்னுடைய வாழ்க்கையின் மூலமாக உபதேசித்தார். பகவானின் அம்சமாகப் பிறந்த ராமபிரான் நினைத்து இருந்தால், ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றதுமே, ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு இருக்க முடியும். ஆனால், அவர் அப்படிச் செய்யாமல், காடு மேடு எல்லாம் சுற்றி அலைந்து, 'சீதையைக் கண்டீர்களோ, சீதையைக் கண்டீர்களோ?’ என மரம் செடி கொடிகளிடம் புலம்பினார்.


ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையைத் தேடிச் சென்ற ராம லட்சுமணர்கள், வழியில் ஜடாயு, ராவணனால் வீழ்த்தப்பட்டு உயிருக்கு மன்றாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றனர். ராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற வழியை அவர்களுக்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே அதுவரை தன் உயிரைத் தக்க வைத்திருந்த ஜடாயு, அவர்களிடம் விவரம் சொல்லிவிட்டு உயிர் துறக்கிறார். ஜடாயுவுக்குச் செய்யவேண்டிய இறுதிக் கடன்களைச் செய்து முடித்ததும், ராம லட்சுமணர்கள் ஜடாயு காட்டிய வழியில் செல்கின்றனர்.

அதற்கு பின்பு மீண்டும் இவர்கள் சீதையை தேடிக்கொண்டு புறப்படுகையில் கபந்தன் எதிர்ப்பட்டான். இந்த கபந்தனுக்கு தலை இல்லாத உடல். மிகப் பெரிய சரீரம். வயிற்றிலே ஒரு வாய். நெஞ்சிலே ஒரு கண். பனைமரம் போன்ற பருத்த தோள்கள். இரண்டு நீள கைகள். இரண்டு கைகளால் ராமன் லக்ஷ்மணனை பிடித்து கொண்டு ஓட ஆரம்பித்தான். வாயில் போட்டுக்கொள்ள முயல்கிறான் கபந்தன். அதன் பின்னரே இருவரும் அவன் தோள்கள் இரண்டையும் துண்டித்து, அவனைக் கொல்கின்றனர். அந்த அரக்கனின் வேண்டுகோளுக்கு இணங்க அவனைத் தகனம் செய்கின்றனர். அப்போது அந்தச் சிதையில் இருந்து அழகிய உருவம் கொண்ட ஒருவன் வெளியில் வருகிறான். முற்பிறவியில் கந்தர்வனாக இருந்த தான், ஒரு முனிவரின் சாபத்தால் அரக்கனாக மாறியதாகக் கூறுகிறான்.

பின்னர், அவன் ராம லட்சுமணர்களிடம், ''மேற்கு முகமாகச் சென்றால் ரிஷ்யமுகம் என்ற மலையும், அதன் அருகில் பம்பை என்ற நதியும் இருக்கும். அவ்விடத்தில் சூரியனின் அம்சமான சுக்ரீவன் என்ற வானரத் தலைவன், எவராலும் எதிர்க்க இயலாத வாலி என்ற தனது சகோதரனிடம் மனைவி மற்றும் ராஜ்ஜியத்தை இழந்து அநாதை போல் சுற்றிக் கொண்டு இருக்கிறான். அவனை நண்பனாகக் கொண்டால், உன் மனைவியை மீட்கலாம்' என்று வழி காட்டுகிறான்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “கபந்தனை போல வழி சொல்லி அடையாளம் சொல்லவில்லையே! சீதையின் பிரிவை எண்ணி ராமர் கலங்கி இருந்த போது சீதை இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க வழியை சொல்லி ராமருடைய துயரத்தை, கபந்தன் போக்கியது போல் நான் பண்ணவில்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment