||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
001. திருவரங்கம்
ஸ்ரீரங்கம் - திருச்சி
முதலாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 249 - 9
தொண்டரடிப்பொடி ஆழ்வார்
148. திவ்ய பிரபந்தம் - 931 – அவனது திருமார்பு தான் என்னை ஆட்கொண்டது
அமலனாதிபிரான் - ஐந்தாம் பாசுரம்
பாரம் ஆய* பழ வினை பற்று அறுத்து*
என்னைத் தன் வாரம் ஆக்கி வைத்தான்* வைத்தது அன்றி என் உள் புகுந்தான்*
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான்*
திரு ஆர மார்பு அது அன்றோ* அடியேனை ஆட்கொண்டதே|
149. திவ்ய ப்ரபந்தம் - 932 – அவனது திருக்கழுத்து என்னை உய்வித்தது
அமலனாதிபிரான் - ஆறாம் பாசுரம்
துண்ட வெண் பிறையன்* துயர் தீர்த்தவன்*
அம் சிறைய வண்டு வாழ் பொழில் சூழ்* அரங்க நகர் மேய அப்பன்*
அண்டர் அண்ட பகிர் அண்டத்து* ஒரு மாநிலம் எழு மால் வரை*
முற்றும் உண்ட கண்டம் கண்டீர்* அடியேனை உய்யக் கொண்டதே|
150. திவ்ய ப்ரபந்தம் - 933 – அவன் பவளச் செவ்வாய் என்னைக் கவர்ந்தது
அமலனாதிபிரான் - ஏழாம் பாசுரம்
கையின் ஆர்* சுரி சங்கு அனல் ஆழியர்*
நீள் வரை போல் மெய்யனார்* துளப விரையார் கமழ் நீள் முடி எம் ஐயனார்*
அணி அரங்கனார்* அரவின் அணை மிசை மேய மாயனார்*
செய்ய வாய் ஐயோ!* என்னைச் சிந்தை கவர்ந்ததுவே|
151. திவ்ய ப்ரபந்தம் - 934 – அவன் கண்கள் என்னை மயக்கி விட்டன
அமலனாதிபிரான் - எட்டாம் பாசுரம்
பரியன் ஆகி வந்த* அவுணன் உடல் கீண்ட*
அமரர்க்கு அரிய ஆதி பிரான்* அரங்கத்து அமலன் முகத்து*
கரிய ஆகிப் புடை பரந்து* மிளிர்ந்து செம் வரி ஓடி*
நீண்ட அப்பெரிய ஆய கண்கள்* என்னைப் பேதமை செய்தனவே|
152. திவ்ய ப்ரபந்தம் - 935 – அவன் நீலமேனி என் மனத்தை நிறைத்தது
அமலனாதிபிரான் - ஒண்பதாம் பாசுரம்
ஆல மா மரத்தின் இலை மேல்* ஒரு பாலகனாய்*
ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்*
கோல மா மணி ஆரமும்* முத்துத் தாமமும் முடிவு இல்லது ஓர் எழில்*
நீல மேனி ஐயோ!* நிறை கொண்டது என் நெஞ்சினையே| (2)
153. திவ்ய ப்ரபந்தம் - 936 – அவனைக் கண்டேன்: மற்றொன்றைக் காணேன்
அமலனாதிபிரான் - பத்தாம் பாசுரம்
கொண்டல் வண்ணனைக்* கோவலனாய்*
வெண்ணெய் உண்ட வாயன்* என் உள்ளம் கவர்ந்தானை*
அண்டர் கோன்* அணி அரங்கன்*
என் அமுதினைக் கண்ட கண்கள்* மற்று ஒன்றினைக் காணாவே| (2)
திருமங்கை ஆழ்வார்
154. திவ்ய பிரபந்தம் - 1019 - யாவரும் வணங்கும் இடம் வேங்கடம்
பெரிய திருமொழி - முதலாம் பத்து - எட்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம்* இரங்க வன் பேய் முலை*
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை* பிரான் அவன் பெருகும் இடம்*
வெள்ளியான் கரியான்* மணி நிற வண்ணன் என்று எண்ணி*
நாள்தொறும் தெள்ளியார் வணங்கும் மலைத்*
திருவேங்கடம் அடை நெஞ்சமே|(2)
155. திவ்ய ப்ரபந்தம் - 1213 - என்னிடம் இரக்கமின்றிச் சென்று விட்டாளே!
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
என் துணை என்று எடுத்தேற்கு* இறையேனும் இரங்கிற்றிலள்*
தன் துணை ஆய என்தன்* தனிமைக்கும் இரங்கிற்றிலள்*
வன் துணை வானவர்க்கு ஆய்* வரம் செற்று அரங்கத்து உறையும்*
இன் துணைவனொடும் போய்* எழில் ஆலி புகுவர்கொலோ| (2)
156. திவ்ய ப்ரபந்தம் - 1378 - பிரமனைப் படைத்தவனது இடம் திருவரங்கம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம்
உந்தி மேல் நான்முகனைப் படைத்தான்* உலகு உண்டவன் எந்தை பெம்மான்*
இமையோர்கள்* தாதைக்கு இடம் என்பரால்*
சந்தினோடு மணியும் கொழிக்கும்* புனல் காவிரி*
அந்தி போலும் நிறத்து ஆர் வயல் சூழ்* தென் அரங்கமே|
157. திவ்ய ப்ரபந்தம் - 1379 - ஆவிலையில் பள்ளி கொண்ட மாயனது இட
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - நான்காம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன்* மணி நீள் முடி*
பை கொள் நாகத்து அணையான்* பயிலும் இடம் என்பரால்*
தையல் நல்லார் குழல் மாலையும்* மற்று அவர் தட முலைச்*
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ்* தென் அரங்கமே|
158. திவ்ய ப்ரபந்தம் - 1380 - உலகளந்தவன் உறையும் இடம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - நான்காம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
பண்டு இவ் வையம் அளப்பான் சென்று* மாவலி கையில் நீர கொண்ட*
ஆழித் தடக் கைக்* குறளன் இடம் என்பரால்*
வண்டு பாடும் மது வார் புனல்* வந்து இழி காவிரி*
அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து* அழகு ஆர் தென் அரங்கமே|
159. திவ்ய ப்ரபந்தம் - 1381 - வில்லால் இலங்கை அழித்த பிரானின் இடம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம்
விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன்* நகர் பாழ்பட*
வளைத்த வல் வில் தடக்கை அவனுக்கு* இடம் என்பரால்*
துளைக் கை யானை மருப்பும் அகிலும்* கொணர்ந்து உந்தி*
முன் திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ்* தென் அரங்கமே|
160. திவ்ய ப்ரபந்தம் - 1382 - இராமபிரான் இருக்கும் இடம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன்* வான் புக*
அம்பு தன்னால் முனிந்த* அழகன் இடம் என்பரால்*
உம்பர் கோனும் உலகு ஏழும்* வந்து ஈண்டி வணங்கும்*
நல செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து* அழகு ஆர் தென் அரங்கமே|
161. திவ்ய ப்ரபந்தம் - 1383 - பேய்ச்சி பாலுண்ட பிரான் தங்கும் இடம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம்
கலை உடுத்த அகல் அல்குல்* வன் பேய் மகள் தாய் என*
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன்* வாழும் இடம் என்பரால்*
குலை எடுத்த கதலிப்* பொழிலூடும் வந்து உந்தி*
முன் அலை எடுக்கும் புனல் காவிரி சூழ்* தென் அரங்கமே|
162. திவ்ய ப்ரபந்தம் - 1384 - கஞ்சனையும் மல்லரையும் அழித்தவன் அமரும் இடம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - நான்காம் திருமொழி - ஏழாம் பாசுரம்
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும்* சகடமும் காலினால்*
துஞ்ச வென்ற சுடர் ஆழியான்* வாழ் இடம் என்பரால்*
மஞ்சு சேர் மாளிகை* நீடு அகில் புகையும் மறையோர்*
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்* தென் அரங்கமே|
163. திவ்ய ப்ரபந்தம் - 1385 - தசாவதாரம் எடுத்தவன் தங்கும் இடம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - நான்காம் திருமொழி - எட்டாம் பாசுரம்
ஏனம் மீன் ஆமையோடு* அரியும் சிறு குறளும் ஆய்*
தானும் ஆய* தரணித் தலைவன் இடம் என்பரால்**
வானும் மண்ணும் நிறையப்* புகுந்து ஈண்டி வணங்கும்*
நல் தேனும் பாலும் கலந்த* அன்னவர் சேர் தென் அரங்கமே|
164. திவ்ய ப்ரபந்தம் - 1386 - யாராலும் அறிய முடியாதவன் அமரும் இடம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - நான்காம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
சேயன் என்றும் மிகப் பெரியன்* நுண் நேர்மையன் ஆய*
இம் மாயையை ஆரும் அறியா* வகையான் இடம் என்பரால்*
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து* ஆர் புனல் காவிரி*
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து* அழகு ஆர் தென் அரங்கமே|
165. திவ்ய ப்ரபந்தம் - 1387 - மண்ணும் விண்ணும் ஆள்வர்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - நான்காம் திருமொழி - பத்தாம் பாசுரம்
அல்லி மாதர் அமரும்* திரு மார்வன் அரங்கத்தை*
கல்லின் மன்னு மதிள்* மங்கையர்-கோன் கலிகன்றி சொல்*
நல் இசை மாலைகள்* நால் இரண்டும் இரண்டும் உடன்*
வல்லவர்-தாம் உலகு ஆண்டு* பின் வான் உலகு ஆள்வரே|
166. திவ்ய ப்ரபந்தம் - 1388 - மணிவண்ணன் என் மகளை மாற்றி விட்டானே!
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஐந்தாம் திருமொழி - முதலாம் பாசுரம்
வெருவாதாள் வாய் வெருவி* வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்*
மருவாளால் என் குடங்கால்* வாள் நெடும் கண் துயில் மறந்தாள்*
வண்டு ஆர் கொண்டல் உருவாளன் வானவர் தம் உயிராளன்*
ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட திருவாளன்*
என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் சிந்திக்கேனே?
167. திவ்ய ப்ரபந்தம் - 1389 - என் மகள் புலம்புமாறு செய்து விட்டானே மாயன்!
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஐந்தாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
கலை ஆளா அகல் அல்குல்* கன வளையும் கை ஆளா என் செய்கேன் நான்?*
விலை ஆளா அடியேனை* வேண்டுதியோ? வேண்டாயோ? என்னும்*
மெய்ய மலையாளன் வானவர் தம் தலையாளன்*
மராமரம் ஏழ் எய்த வென்றிச் சிலையாளன்*
என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் சிந்திக்கேனே?
168. திவ்ய ப்ரபந்தம் - 1390 - என் மகளைப் பித்தனாக்கி விட்டானே கண்ணன்!
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஐந்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
மான் ஆய மென் நோக்கி* வாள் நெடுங் கண் நீர் மல்கும் வளையும் சோரும்*
தேன் ஆய நறுந் துழாய் அலங்கலின்* திறம் பேசி உறங்காள் காண்மின்*
கான் ஆயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக*
நந்தன் பெற்ற ஆன் ஆயன்*
என் மகளைச் செய்தனகள்*அம்மனைமீர் அறிகிலேனே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment