||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 27 - இரணியனை அழித்த தொடைகள்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
பிறங்கிய பேய்ச்சி*
முலை சுவைத்துண்டிட்டு*
உறங்குவான் போலே*
கிடந்த இப்பிள்ளை*
மறங்கொள் இரணியன்*
மார்வை முன் கீண்டான்*
குறங்குகளை வந்து காணீரே!*
குவி முலையீர்! வந்து காணீரே|
- பிறங்கிய - ப்ரகாசத்தை உடைய
- பேய்ச்சி - பூதனையினுடைய
- முலை - முலையை
- சுவைத்து - பாலோடு அவள் உயிரையே சேர்த்து உறிஞ்சி
- உண்டிட்டு - அமுது செய்து கொன்று விட்டு
- உறங்குவான்போலே - ஒன்றுமே அறியாமல் உறங்குபவனைப் போலே
- கிடந்த - படுத்திருப்பவனான
- இப் பிள்ளை - இந்தக் கண்ணன்
- மறம் கொள் - விரோதம் கொண்ட
- இரணியன் - ஹிரண்யனுடைய
- மார்வை - மார்பை
- முன் - முற்காலத்திலே
- கீண்டான் - பிளந்தான்
- குறங்குகளை வந்து காணீரே - திருத்துடை அழகை வந்து பாருங்கள்
- குவி முலையீர் - குவிந்த அழகை உடைய பெண்களே!
- வந்து காணீரே - வந்து பாருங்கள்
அரக்கியாக இல்லாமல், பிரகாசமாய் அழகிய பெண் உருவமெடுத்து கம்சனால் ஏவப்பட்டவளாய் குழந்தைக் கண்ணனைக் கொல்ல வந்த பூதனை என்னும் அரக்கியிடம் பால் உண்ணுவது போல், பாலோடு அவள் உயிரையே சேர்த்து உறிஞ்சி அவளைக் கொன்றான் கண்ணன். நரசிம்ஹ அவதாரத்தில், த்வேஷத்தினால் மிகுந்த வீராவேசங் கொண்டு போர் புரிந்த ஹிரண்யகசிபு என்ற அரக்கனை தன் தொடை மேலேயே வைத்து அவன் நெஞ்சை இரண்டாகப் பிளந்து கொன்றான். இத்தனை ஸாகசங்களையும் புரிந்து விட்டு, ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தையாய் உறங்குவது போல் பாசாங்கு செய்த இந்த குழந்தை கண்ணனின் தொடை அழகையும் வலிமையையும் வந்து பாருங்கள் என்று அங்கிருக்கும் குவிந்த அழகை உடைய பெண்களை அழைக்கிறாள் யசோதை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment