About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 14 September 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - நாற்பதாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

040 அடி வாங்கினேனோ கொங்கிற் பிராட்டியைப் போலே|

இங்கு, “அடி வாங்கினேனோ” என்னும் சொல், “திருவடி” குறித்து கூறப்பட்டதாகும்!

வைணவத்தில் ஆசார்ய சம்பந்தம் இல்லாது எம்பெருமான் சம்பந்தம் இருந்தும் பயனில்லை. ஆசார்ய சம்பந்தம் இருந்தால் எம்பெருமான் சம்பந்தம் தானே அமைந்து விடும். இதற்கு கொங்கு பிராட்டியின் சரித்திரமே ஒரு உதாரணம்.


கொங்கு தேசத்தில் பன்னிரெண்டு வருடங்களாக மழை பொய்த்தமையால், வேறு வழியின்றி, கணவருடன் திருவரங்கம் வந்து சில நாட்கள் தங்கினார், கொங்கிற்பிராட்டி!! அவரது இயற்பெயர் சுமதி.


திருவரங்கன் சந்நிதியைச் சுற்றியுள்ள வீதிகளில், உடையவர் ஒரு இல்லத்தின் வாயிலில் சென்று, பிக்ஷைக்கு நிற்பார்! ஒரு பசுமாட்டின் மடியை கறக்கும் நேரத்துக்குள், உள்ளேயிருந்து வீட்டுப் பெண்மணி பிக்ஷை அளிக்க வேண்டும்! இல்லையென்றால் அன்று அவருக்கு உணவு இல்லை!! இது அனுதினமும் நடக்கும். இதற்கு மாதுகரம் என்று பெயர். நூற்றுக் கணக்கில் சிஷ்யர்களும், சிம்மாசனாதிபதிகளும் உடன் வர, சுவாமி இராமானுஜர் தனது அடியார்களுடன் மாதுகரம் செல்வது ஒரு திருவிழா போல இருக்கும்!! ஒரு நாள், மாதுகரம் வைபவத்தில் ஸ்ரீராமானுஜரை வீதி என்றும் பாராது, அதிகாரிகள், செல்வந்தர்கள், வயதானோர் எல்லாம் தண்டனிடும் காட்சியைப் பார்த்தாள். 


உடையவரின் தேஜசைக் கண்ட கொங்கிற் பிராட்டியார், தன்னையும் அவரின் அடியாராய் சேர்த்துக் கொள்ளுமாறு கண்ணீர் மல்க மன்றாட, உடையவரும் த்வயம் என்னும் மந்திரத்தை உபதேசித்து, பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்து, ஸ்ரீ வைஷ்ணவப் பெண்ணாக மாற்றினார்!!


காலங்கள் கடந்தன! கொங்கு தேசத்தில் நிலைமை மாற, மீண்டும் கொங்கிற்பிராட்டியார் கொங்குதேசம் கிளம்ப உத்தேசித்தார்!! உடையவரிடம் சென்று, “சுவாமி, அடியேன் கொங்கு தேசம் செல்ல விரும்புகிறேன். தங்களின் சம்மதம் வேண்டி நிற்கிறேன்!”, என்றார். உடையவரும் சம்மதிக்க, “உம் நினைவாய் உமது திருவடியை அடியேனுக்கு தாரும்!!” என்று வேண்டினார் கொங்கிற்பிராட்டியார்.

காலங்கள் கடந்தன. சோழனின் கொடுமையிலிருந்து மீள, காவி தவிர்த்து, வெள்ளை உடுத்தி, தன் அடியார்களுடன் உடையவர் கொங்கு மண்டலம் புகுந்த ஒரு நாளில், ஒரு குடிலின் அருகே ஒதுங்கினார். அது கொங்கிற்பிராட்டியாரின் குடிலாகும்! வந்திருந்தவர்களைக் கண்டதும், பெருமகிழ்ச்சியில் திளைத்த கொங்கிற்பிராட்டியாரும் அவரது கணவரும், அவர்களுக்கு அமுது பரிமாற தங்களுக்கு கருணை புரியுமாறு வேண்டினர்.


இராமாநுஜர் வைணவ சம்பந்தம் இல்லாத இல்லத்தில் உணவு அருந்துவதில்லை!! அந்தப் பெண்ணிடம் அவருடைய சீடர்கள் அவளுக்கு ஸ்ரீவைஷ்ணவ சம்பந்தம் இருக்கிறதா என்று கேட்டனர்!! திருவரங்கத்திலே எம்பெருமானாரிடம் வைணவ சம்பந்தம் பெற்றவள் நான் என்று கூறி, அவரது பாதுகைகளை எடுத்து காட்டினார். மேலும், தான் திருவரங்கத்தில் வசித்ததையும், அவரால் பஞ்ச சம்ஸ்காரம் செய்யப்பட்டதையும் கூறினார். அந்த அம்மையார் சமைத்த உணவை ஒரு சிறு அறைக்குள் எடுத்துச் சென்று விட்டு வருவதை அவரின் சீடர்கள் பார்த்தனர். அறையினுள் சென்று பார்த்த போது, ஸ்ரீராமானுஜர் அவளுக்கு அளித்த பாதுகைகள் வைக்கப்பட்டு, அவற்றிற்கு அவள் நைவேத்தியம் செய்து விட்டு வருவதைப் பார்த்தனர்.


உடையவர், தனது அடியார்களின் சந்தேகத்திற்கு தீர்வு காண, அப்பாதுகைகளை வாங்கி, தன் பாதங்களில் இட்டு அலங்கரித்தார்! இராமாநுஜரின் திருவடிகள் கண்டதும், கண்களில் நீர் ததும்ப அவர் முகத்தைப் பார்த்த கொங்கிற் பிராட்டியார், “வெண்ணிற உடையில் தங்களை அடையாளம் காணாதது அடியேனின் தவறு! அடியேனை மன்னித்தருள வேண்டும்!” என்று வேண்டினார்! காவி உடை தவிர்த்து, வெண்ணிற ஆடையில் இருந்த ராமானுஜரை அவளால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. பின்னர், உடையவரின் சம்மதத்துடன், வந்திருந்தவர் அனைவருக்கும் அமுது படைத்தார், கொங்கிற் பிராட்டியார். 


திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அப்படிப்பட்ட கொங்கு பிராட்டியைப் போல ஆச்சாரியாரின் பாதுகைகளை வேண்டி பெற்றேனோ? இல்லையே!!” ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment