About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 8 August 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - எட்டாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

008 தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே|

எம்பெருமான் சிருஷ்டிக்க ஆரம்பித்தார். பகவான் பிரம்மாவை படைத்தார். பிரம்மா முதலில் ச்வயம்புவமனுவை படைத்தார். ச்வயம்புவமனுவிற்கு ப்ரியம்ரதன், உத்தானபாதன் என்று இரண்டு குமாரர்கள். அதில் உத்தான பாதனுக்கு சுநிதி, சுருச்சி என்று இரண்டு மனைவிமார்கள். அதில் சுநிதியின் பிள்ளை துருவன். சுருச்சியின் பிள்ளை உத்தமன். உத்தமன் ஒரு நாள் தகப்பனாரின் மடியில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். 


துருவனும் தந்தை மடி வேணும்னு ஆசைப்பட்டு அருகில் போனான். துருவனை மன்னன் தன் மடியில் அமர்த்தி, முத்தமிட்டான். அதை பார்த்த சுருச்சி (சிற்றன்னை) கோபமடைந்து துருவனிடம், "இந்த மடியில் இருக்க உனக்கு யோகியதை இல்லை, என் வயிற்றில் பிறந்திருந்தால் தான் உன் தந்தை மடியில் ஏறலாம், இறங்கு என்று கூறி இறக்கி விட்டவுடன், குழந்தை ரொம்ப அவமானப்பட்டு கோபப்பட்டான். தந்தை மடியில் உட்கார நான் என்ன பண்ண வேண்டும் என்று கேட்டான். "பெருமானை ஆராதனை பண்ணி, என் வயிற்றில் வந்து பிறந்தால் தந்தை மடியில் வந்து உட்காரலாம்" என்றாள். 


கோபத்தோடு அந்தபுரத்திற்கு வந்தான். அவனுடைய தாயார் சுநிதி அவனை பார்த்து "என்ன நடந்தது? ஏன் கோபிக்கிறாய்?" என்று கேட்டாள். நடந்தை சொன்னான் துருவன். அதற்கு அவள் வேடிக்கையாக சிரித்துக் கொண்டு "இரண்டு விஷயங்களில் ஒன்று உண்மை, மற்றொன்று தேவையே இல்லையே. பெருமானை குறித்து தவம் பண்ணு என்று சொன்னது உண்மை. பகவானை குறித்து தவம் பண்ணிட்டு என் வயிற்றில் வந்து பிற என்று சொன்னது தேவை இல்லையே! பெருமானை குறித்து தவம் பண்ணி விட்டால், பரமபுருஷனுடைய அவன் மடியே கிடைத்து விடுமே! அப்புறம் இவர்கள் மடி எதற்கு? இந்த தந்தை மடி தேவை இல்லை போ" என்று சொல்லி காட்டுக்கு அனுப்பி வைத்தாள். 


துருவன் காட்டை நோக்கி வந்தான். வழியில் நாரதர் வந்து தடுத்தார். "குழந்தைகளுக்கு மான அவமானம் எல்லாம் இருக்க கூடாது. ஏன் போகிறாய்?" என்று கேட்டார். தேவரீர் சொல்வதை கேட்கற நிலையில் இப்போ நான் இல்லை, எனக்கு பெருமானை உடனடியாக ப்ரத்யக்ஷம் பண்ணியாகணும். அதற்கு எதாவது வழி இருந்தா சொல்லும்" என்றான். அதற்கு நாரதர், "முதலில் உணவில் நாட்டக் கூடாது. உணவு உண்பதை விட வேண்டும்" என்றார். 

உண்ணுவதை நிறுத்தினான் துருவன். பின்னர், தண்ணீர் அருந்துவதையும் நிறுத்தினான். அவனின் தியானம், உச்ச நிலைக்குச் சென்றது. இறைவன், அவன் ஆத்மாவிற்குள் நுழைந்தார். அதை, துருவன் உணர்ந்து கொண்டாலும், அவனது லட்சியம் விஷ்ணுவை நேரில் பார்க்க வேண்டும் என்பதே.


நாரதர் அதற்கும் ஒரு உபாயம் சொல்கிறார். "பிரணவத்தில் சுவாசத்தை நிலை நிறுத்த வேண்டும்" "திருத்வாதசாக்ஷரி என்ற ஓம் நமோ பகவதே வாசுதேவாய" மந்திரத்தை நாரத பகவான் சொல்லி கொடுக்க, துருவன் அதன்படி செய்ய, எங்கும் "ஓம்" என ஓங்காரம் ஒலிக்கிறது. மகாவிஷ்ணு அவன் முன் தோன்றி, அவனை மடியில் தூக்கி வைத்துக் கொண்டார். ஐந்தே மாதத்தில் பெருமானை ப்ரத்யக்ஷமாக சேவித்து விட்டான் துருவன். பெருமானை சேவித்து துருவ பதவி அடைந்தான். துருவ நக்ஷத்திரம் என்று சொல்வதே இவரை வைத்து தான்.


திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “என் தந்தை எங்கே என்று உலகத்துக்கே சர்வலோகத்திற்கும் தந்தையாக இருக்க கூடிய பகவானை தந்தை என்று நினைத்து கேட்கிறானே!. அந்த தந்தையை தேடி கொண்டு காட்டுக்கு போனானே! அப்படி பகவானே தந்தை என்று நான் நினைத்து போகலையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment