||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
001. திருவரங்கம்
ஸ்ரீரங்கம் - திருச்சி
முதலாவது திவ்ய க்ஷேத்ரம்
ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் பெருமாளுடன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்குள்ள ரங்கநாயகி தாயார் சன்னதியில் தாயார் உற்சவராகவும், அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி, பூமாதேவி என வரிசையாகக் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பில் தாயார்களை தரிசிப்பது அபூர்வம். தாயார் பூஜையில் தீபாராதனை செய்யும்போது மத்தளம், எக்காளம் என்னும் வாத்தியங்கள் இயக்கப்படுகின்றன.
மருத்துவக் கடவுளான தன்வந்திரிக்கு இங்கு சன்னதி இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி, கைகளில் சங்கு, கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார் இவர். தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், இவருக்கு விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். வெள்ளிக் கிழமைகளில் ரங்கநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது. தினமும் சுவாமிக்கு நைவேத்யத்துடன் சுக்கு, வெல்லக் கலவையையும் படைக்கின்றனர். சுவாமிக்கு ஜீரணமாவதற்காக, இந்த கலவையை தன்வந்திரியே கொடுப்பதாக ஐதீகம். பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளில், சுவாமிக்கு சூர்ணத்தால் (மருந்துக்கலவை) அபிஷேகம் செய்யப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் முப்பது முக்கோடி புண்ய தீர்த்தங்களும், காவிரியில் கலக்கிறபடியால் துலாகாவேரி ஸ்நானம் சிறப்பானது.
கம்ப ராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம் செய்த போது, அதில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக் காட்டிய அறிஞர்கள், ராம அவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக் கூடாது என்றனர். கம்பர், "அதை நரசிம்மரே சொல்லட்டும்!' எனச் சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார். அப்போது நரசிம்மர், கர்ஜனையுடன் தூணிலிருந்து வெளிப்பட்டு, "கம்பரின் கூற்று உண்மை!' என ஆமோதித்து தலையாட்டினார். மேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர், தாயார் சன்னதி அருகில் தனி சன்னதியில் இருக்கிறார். கையில் சங்கு மட்டும் இருக்கிறது, கரம் கிடையாது. சன்னதி எதிரில், கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் உள்ளது.
இத்தலத்தில் தங்கி பல காலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர், இங்கேயே மோட்சம் அடைந்தார். அவரது உடலை, சீடர்கள் பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனர். சில காலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு மேல் எழுந்தார். இவர் இங்கு தனிச் சன்னதியில் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது. இத்தலத்தில் அனைத்து மரபுகளும் ஸ்ரீ ராமானுஜரால் ஏற்படுத்தப்பட்டது.
திருப்பாணாழ்வார் மீது அர்ச்சகர் ஒருவர் கல் எறிந்த போது, சுவாமி தன் நெற்றியில் ரத்தம் வழிய நின்று, ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த தலம் இது. டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள், இத்தலத்து நம்பெருமாள் மீது தீராத அன்பு கொண்டிருந்தாள். இதன் அடிப்படையில் நம்பெருமாளுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து, ரொட்டி நைவேத்யம் படைக்கப்படுகிறது.
நம்பெருமாளை ஸ்ரீ ராமானுஜருக்கு முற்பட்ட ஆசாரியர்கள் ராமானுஜர் ஆழ்வான் ஆண்டான், பட்டர், எம்பார், பிள்ளைலோகாச்சாரியார் போன்ற ஆசாரியர்களும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment