||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
1. திருப்பல்லாண்டு - 12 பாசுரங்கள் - பெரியாழ்வார்
திவ்ய ப்ரபந்தம் - 1 - 12
காப்பு
குறள் வெண்செந்துறை
திருப்பல்லாண்டு பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஸ்ரீவில்லிபுத்தூர்ச் சேர்ந்த பெரியாழ்வார் பாடிய நூல் ஆகும். இது 12 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தின் முதல் ஆயிரம் பாக்களில் முதல் 12 பாடல்கள் திருப்பல்லாண்டு பாடல்கள் ஆகும்.
பாண்டிய குல மன்னன் வல்லப தேவனின் அரசவையில் எம்பெருமான் நியமித்த ருளியபடி பெரியாழ்வார் பரதத்வத்தை (உண்மை பொருள்) நிலை நாட்டி பொற் கிழியைப் பெற்றதால் அரசன் மகிழ்ந்து, அவருக்கு 'பட்டர்பிரான்' என்று விருது அளித்து, யானை மீது நகர்வலம் அழைத்து விழா எடுத்தான். அந்த விழாவைக் காண மஹாலக்ஷ்மியுடன் பகவானும் கருடன் மீது ஏறி வந்தான். இந்த இருள் தருமா ஞாலத்தில் தன் மேன்மையைக் கருதாமல் வந்தானே! அவனது பேரழில் பொய்கையான திவ்ய மங்கள திருமேனி அனைத்து மக்கள் கண்களுக்கும் இலக்கானால் திருஷ்டி தோஷம் ஏற்பட்டு விடுமே! என்று ஆழ்வாருக்கு பரிவு பொங்கியது. உடனே யானை கழுத்தில் இருந்த மணிகளை தாளமாகக் கொண்டு 'பல்லாண்டு, பல்லாண்டு' என்று மங்களாசாசனம் பண்ணுகிறார். மேலும் அவனது மேன்மைக்கு தான் மட்டும் பல்லாண்டு பாடினால் போதாது என்று எண்ணி பகவானையே அடைய விரும்பும் பக்தர்களையும், கைவல்யம் என்னும் ஆத்மா அனுபவத்தை விரும்புபவர்களையும், செல்வத்தை விரும்புபவர்களையும் தன்னுடன் பல்லாண்டு பாட வாருங்கள் என்று அழைக்கிறார்.
மக்கள் தன் நல்லதையே விரும்புகிறார்களே! பிறர் நலத்தை எண்ண வேண்டவோ! தம்முடைய நன்மையை மட்டுமே விரும்பி பகவானிடம் போகிறார்கள். வேண்டியவற்றை கேட்டு பெறுகிறார்கள். பகவானுக்கு ஒரு முறை கூட பல்லாண்டு பாடுவதில்லையே! உலகின் தன்மை அறிந்து பெரியாழ்வாரின் திருவுள்ளம் குமுறுகிறது. பல்லாண்டு பாடலாம் வாங்கோள் என்று எல்லோரையும் அழைக்கிறார். பல்லாண்டு பாடுவதே மங்களாசாசனம் செய்வது. அடியார்களின் கடமை, அவர் காட்டிய வழியை பின்பற்றுவோமே!
ஆழ்வார் ஞானநிலையில் பகவானை பர தத்வமாக நிலை நாட்டினார். ஆனால் அவனை எதிரே கண்டதும் பிரேம நிலையில் பகவானை, தாம் அவனுக்கு எவ்வித தீங்கும் நேராமல் காக்க வேண்டும் என்று மங்களாசாசனம் பண்ணுவது இப்பிரபந்தமாகும்.
ஹரி ஓம்||
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment