||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
கிருஷ்ணன் ஜராசந்தனிடம் வேண்டுதல்|
ஜராசந்தனை அழிப்பதற்கு, உத்தவர் சொன்னபடி கிருஷ்ணர் ஒரு திட்டம் வகுத்தார். அதன்படி, பீமன், கிருஷ்ணர், அர்ஜுனன் ஆகிய மூவரும் அந்தணரைப் போல வேஷம் தரித்து, ஜராசந்தனிடம் சென்றனர். அப்பொழுது நடுப்பகல், அப்பொழுது தான் அவன் சிவ பூஜையை முடித்து விட்டு, முன் அறையில் காத்திருப்பவர்களுக்கு அவர்கள் என்ன கேட்டாலும் கொடுப்பது வழக்கம். மூன்று பெரும் ஜராசந்தனைப் பார்த்து, "ஐயா, நாங்கள் வெகு தூரத்திலிருந்து வருகிறோம். நாங்கள் கேட்பதைத் தாங்கள் கொடுக்க வேண்டும்" என்றார்கள்.
அவர்களைப் பார்க்க ஜராசந்தன் சற்று ஆச்சரியப்பட்டான். அவர்களுடைய குரல், அவர்கள் நடந்து கொண்ட விதம், உள்ளங் கைகளில் காணப்பட்ட நாணின் வடுக்கள் இவற்றைக் கொண்டு, அவர்கள் க்ஷத்திரியர்கள் என்றும், அவர்களைத் தாம் முன்பே எங்கேயோ பார்த்திருக்க வேண்டும் என்றும் நினைத்தான். "இவர்கள் உண்மையில் அந்தண வேடத்தில் உள்ள க்ஷத்திரியர்கள் தாம்." இருந்தாலும், இவர்கள் என்ன கேட்டாலும் சரி, அது ஏன் உயிரே ஆனாலும் சரி, நான் கொடுப்பேன்!" என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
இப்படி மனதில் நினைத்துக் கொண்டு, அவன் அவர்களைப் பார்த்து, "ஓ அந்தணர்களே! உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள். என் தலையைக் கேட்டாலும் நான் தருவேன்" என்று கூறினான்.
கிருஷ்ணர், "அரசே! அப்படியானால் தாங்கள் எங்களுடன் வந்து யுத்தம் செய்ய இசையுங்கள். நாங்கள் அந்தணர்கள் அல்ல, க்ஷத்திரியர்கள். சண்டை போட வந்தவர்கள், சாப்பாடு கேட்டு வந்தவர்கள் அல்ல. இவன் குந்தியின் மகன் பீமசேனன். அவன் அவனுடைய தம்பி அர்ஜுனன். நான் உன் பழைய எதிரி கிருஷ்ணன்" என்று கூறினார்.
இதைக் கேட்டு, ஜராசந்தன் உரக்கச் சிரித்தான். "அட மடையா! நீ கேட்டபடியே நான் சண்டை போடுவேன். ஆனால் உன்னோடு அல்ல. ஏனெனில் நீ ஒரு கோழை. நீ மதுரா நகரை விட்டுக் கடலிலுள்ள ஒரு தீவில் நகரை நிர்மாணித்துக் கொண்டு, எப்பொழுதும் என் பயத்திலயே வாழ்கிறாய். இந்த அர்ஜுனனோ என்னை விட வயதில் இளையவன். அவன் உடலும் ஒல்லியானது, வலுவற்றது. அவன் எனக்கு நிகராக மாட்டான். பீமன் பரவாயில்லை; என்னோடு சண்டை போடத் தகுதி உள்ளவன் என்று நினைக்கிறேன்" என்றான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment