||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 74 - புகழும் இன்பமும் அடைவர்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - பதினொன்றாம் பாசுரம்
அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்*
ஆமையும் ஆனவனே! ஆயர்கள் நாயகனே!*
என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை*
ஏழுலகும் உடையாய்! ஆடுக ஆடுகவென்று*
அன்ன நடை மடவாள் அசோதை உகந்த பரிசு*
ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்*
இன்னிசை மாலைகள் இப் பத்தும் வல்லார்*
உலகில் எண் திசையும் புகழ் மிக்கு
இன்பமது எய்துவரே| (2)
- அன்னமும் - ஹம்ஸ ரூபமாகவும்
- மீன் உருவும் - மத்ஸ்ய ரூபமாகவும்
- ஆள் அரியும் - நர ஸிம்ஹ ரூபமாகவும்
- குறளும் - வாமந ரூபமாகவும்
- ஆமையும் - கூர்ம ரூபமாகவும்
- ஆனவனே - அவதரித்தவனே!
- ஆயர்கள் - இடையர்களுக்கு
- நாயகனே - தலைவனானவனே!
- என் அவலம் - என் துன்பத்தை
- களைவாய் - நீக்கினவனே!
- செங்கீரை ஆடுக - செங்கீரை ஆட வேணும்
- ஏழ் உலகும் - ஸப்த லோகங்களுக்கும்
- உடையாய் - ஸ்வாமியானவனே!
- ஆடுக ஆடுக - பலஎன்று காலும் ஆட வேணும் என்று
- அன்னம் நடை - அன்ன நடை உடையவளான
- மடவாள் - நற்குணம் உடையளான
- அசோதை - யசோதைப் பிராட்டியாலே
- உகந்த - உகந்த சொல்லப் பட்ட
- பரிசு - ப்ரகாரத்தை (விதத்தை)
- ஆன - பொருந்திய
- புகழ் - புகழை உடையரான
- புதுவை பட்டன் - பெரியாழ்வார்
- உரைத்த - அருளிச் செய்த
- இன் இசை - இனிய இசையை உடைய
- தமிழ் மாலைகள் - தமிழ்த் தொடைகளான
- இ பத்து - இப் பத்துப் பாசுரங்களையும்
- வல்லார் - ஓத வல்லவர்கள்
- உலகில் - இந்த லோகத்தில்
- எண் திசையும் - எட்டுத் திசைகளிலும் பரந்த
- புகழ் - கீர்த்தியையும்
- மிகு இன்பமது - மிக்க இன்பத்தையும்
- எய்துவர் - பெறுவார்கள்
ஹம்ஸ, மத்ஸ்ய, ந்ருஸிம்ஹ, வாமன போன்ற அவதாரங்களை எடுத்தவனே, இடையர்களின் தலைவனே, என் துன்பத்தை போக்கினவனே, எழு உலகங்களுக்கும் அதிபதியே, நீ செங்கீரை ஆட வேணும், ஆட வேணும் என்று ஹம்ஸ நடை கொண்ட, களங்கம் அற்றவளான யசோதை பிராட்டி உகந்து சொன்னவற்றை, புகழ் பொருந்திய பெரியாழ்வார் இனிய இசையுடன் தமிழ் மாலைகளாகத் தொகுத்துத் தந்த இப்பத்து பாசுரங்களை ஓத வல்லவர்கள் இந்த உலகில் எட்டு திசைகளிலும் கீர்த்தியையும், பரமானந்தத்தையும் அடைவார்கள்.
அடிவரவு: உய்ய கோளரி நம்முடை* வானவர் மத்து காய* துப்புடை உன்னை பாலொடு* செங்கமலம் அன்னமும் - மாணிக்கம்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment