About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 10 November 2023

லீலை கண்ணன் கதைகள் - 64

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:||  

ருக்மிணியின் திருமணப் பேச்சு|

விதர்ப்ப நகரின் அரசரின் பெயர் பீஷ்மகர் என்பது. அவர் சிறந்த கடவுள் பக்தி கொண்டவர். எல்லாருக்கும் நன்மை செய்வதிலே கருத்துடையவர். அவருக்கு ஐந்து பிள்ளைகளும், மிகவும் அழகான ஒரு பெண்ணும் இருந்தார்கள். முதல் பிள்ளையின் பெயர் ருக்மி, மற்ற பிள்ளைகள் - ருக்மரதன், ருக்மபாஷீ, ருக்மகேசன், ருக்மமாலி என்பது. பெண்ணின் பெயர் ருக்மிணி.


நாரதர் போன்ற பல ஞானிகள் பீஷ்மகரின் அரண்மனைக்கு வருவதுண்டு. அரசர் இயற்கையிலே பக்திமான் ஆனதால், அவர்கள் வேதாந்த விஷயங்களைப் பற்றிப் பேசும் பேச்சுக்களை மணிக்கணக்காகக் கேட்பதும் வழக்கம். அவருடைய செல்லப் பெண்ணான ருக்மிணி தன் தகப்பானர் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு இவற்றையெல்லாம் கேட்பாள்.

நாரதர் பல தடவைகள் கிருஷ்ணரின் அழகு, அவருடைய சிறந்த குணங்கள், அவருடைய தெய்வீகத் தன்மை, பக்தர்களிடம் அவருக்குள்ள அன்பு ஆகியவைப் பற்றிக் கூறியிருக்கிறார். ருக்மிணி தன் தந்தையின் மடியில் உட்கார்ந்து இவற்றை எல்லாம் கேட்டிருக்கிறாள். வருடங்கள் சென்றன, குழந்தையாக இருந்த ருக்மிணி இப்பொழுது அழகிய யுவதியாக மாறி விட்டாள். அவளுடைய திருமணக் காலம் நெருங்கியது. கிருஷ்ணரைத் தான் மணம் புரிய வேண்டும் என்று ருக்மிணி தன் மனதிற்குள் தீர்மானித்து விட்டாள்.

பீஷ்மகரும் கிருஷ்ணர் தாம் தம் மகளுக்கு மிகப் பொருத்தம் என்று நினைத்தார். ஒரு நாள் அவர்தம் மூத்த மகன் ருக்மியை கூப்பிட்டு ருக்மிணியின் திருமணத்தைப் பற்று பேச ஆரம்பித்தார். "ருக்மிணிக்குத் திருமணம் நடத்த வேண்டிய பருவம் வந்து விட்டது. நானும் ஒரு நல்ல வரனைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்" என்றார்.

ருக்மி தன் தகப்பனாரின் வார்த்தைகளைக் கேட்டு சந்தோஷப்பட்டான். "ஆகா, எனக்கு வரனைத் தேடும் கஷ்டம் வேண்டாம் என்று வைத்து விட்டீர்கள். ஆமாம், யார் அந்த அதிர்ஷ்டசாலி??" என்று கேட்டான். வசுதேவரின் மகன் கிருஷ்ணன் தான் என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் ருக்மி சீற்றம் கொண்டு எழுந்து, "அந்த அயோகியனுக்கு என் தங்கையை கொடுக்க மாட்டேன்" என்று சொன்னான்.

கிருஷ்ணரின் விரோதிகளான ஜராசந்தனும் காலயவனனுக்கும் ருக்மி சிறந்த நண்பன். ஆகவே அவன் தன் தகப்பனாரைப் பார்த்து, "அப்பா, நாம் க்ஷத்திரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். கிருஷ்ணன் இடையன். அவன் அக்கிரமமாகக் கம்சனைக் கொன்றான், என் நண்பர்கள் எல்லோரையும் துன்புறுத்தினான் அவன். பதவியிலும் பொருளிலும் இன்னும் மற்ற எல்லாவற்றிலும் அவன் நம்மை விட எவ்வளவோ தாழ்ந்தவன். அவனை என் தங்கையின் கணவன் என்று நினைத்துக் கூட பார்க்கவே எனக்கு வெறுப்பாக இருக்கிறது. ருக்மிணிக்கு ஏற்றவனாக நான் அழகான ஆண் மகனை மனதில் வைத்து இருக்கிறேன். எல்லா வகையிலும் அவனே ருக்மிணிக்கு மிகவும் பொருத்தமானவன். தமகோஷரின் புத்திரனான சிசுபாலன் தான் நம் அழகிய ருக்மிணிக்கு ஏற்றவன்" என்றான்.

மகன் சொன்னதைக் கேட்ட பீஷ்மகருக்குப் பிடிக்கவே இல்லை. ஆனால் அவனை எதிர்த்து பேசும் தைரியமும் அவருக்கில்லை. ஆகவே ருக்மி சொன்னதைச் சரி என்று ஒப்புக் கொண்டார். தகப்பனார் ஒன்றும் சொல்ல மாட்டார் என்ற தைரியத்தில் ருக்மி தன் தங்கையைத் தன் நெருங்கிய நண்பன் சிசுபாலனுக்குக் கொடுக்க ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment