About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 10 November 2023

திவ்ய ப்ரபந்தம் - பெரியாழ்வார் திருமொழி - 1.4.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 54 - கோவிந்தன் கூத்து
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம்

தன் முகத்துச் சுட்டி* 
தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்* 
பொன் முகக் கிண்கிணி ஆர்ப்பப்* 
புழுதி அளைகின்றான்*
என் மகன் கோவிந்தன்* 
கூத்தினை இள மா மதீ!* 
நின் முகம் கண் உளவாகில்* 
நீ இங்கே நோக்கிப் போ! (2)

  • தன் முகத்து - கண்ணனின் முகத்தில் நெற்றி வரை தொங்குகின்ற 
  • சுட்டி - சுட்டியானது 
  • தூங்க தூங்க - வேகமாய் அழகாக இங்கும் அங்குமாக அசைந்து ஆட
  • தவழ்ந்து போய் - முற்றத்தில் தவழ்ந்து போகும் போது
  • பொன் முகம் - தங்க முகத்தையுடைய 
  • கிண்கிணி - சதங்கைகளானவை 
  • ஆர்ப்ப - கிண்கிண் என்று சப்தம் இடவும் 
  • புழுதி - தெருப்புழுதி மண்ணை 
  • அளைகின்றான் - கிளப்பி உற்சாகத்துடன் விளையாடுகின்ற 
  • என் மகன் - எனக்குப் பிள்ளையான 
  • கோவிந்தன் - கண்ணபிரானுடைய 
  • கூத்தினை - சேஷ்டைகளை
  • இள - இளமை தங்கிய
  • மா மதி - அழகிய சந்திரனே! 
  • நின் முகம் - உன் முகத்தில்
  • கண் உள ஆகில் - கண்கள் இருக்குமேயானால்
  • நீ இங்கே நோக்கி போ - நீ இங்கே பார்த்துப் போ 

குட்டிக் கண்ணனின் முகத்தில் நெற்றி வரை தொங்குகின்ற சுட்டி வேகமாய் அழகாக இங்கும் அங்குமாக அசைந்து ஆட, விரைந்து மணல் முற்றத்திற்குத் தவழ்ந்து செல்கின்றான்; அங்கே அவன் கால் சதங்கையில் தொங்குகின்ற பொன்னாலான கிண்கிணிகள் மிகுவாய் ஒலி எழுப்ப, அங்கும் இங்கும் அலைந்து, தெருப்புழுதி மண்ணை கிளப்பி, அவன் தேகம் முழுவதும் புழுதியாகும் வண்ணம் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடுகின்றான். தன் மகன் தனியே விளையாடுவதைப் பார்த்த யசோதை அன்னை, நிலவினை நோக்கி, ' இளமை தங்கிய அழகிய சந்திரனே! இங்கே என் மகன் கோவிந்தன் புழுதி மணலில் ஆடுகின்ற கூத்தினைப் பார். வட்டமான உன் முகத்தில் எங்கேனும் கண் இருக்குமானால், (அல்லது கண் பெற்றதின் பயனாக) நீ என் மகன் விளையாடுகின்ற காட்சியை பார்த்து விட்டுப் போ', என்று கூறுகிறாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment