About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 2 November 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - அறுபத்தி ஐந்தாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

065 ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வவாரி ஆண்டானைப் போலே|

இங்கு ஆரியன் என்பது உயர்ந்தவர் என்ற பொருளில் ஆளவந்தாரைக் கூறியது. 

‘‘அந்தபுரம் புகுதும் இன்றே’’ என்று அரையர் சேவையில் பாடியதைக் கேட்ட ஆளவந்தார், தம் மடத்தின் பொறுப்புகள் அனைத்தையும் தெய்வவாரி ஆண்டான் என்ற சீடரிடம் விட்டுவிட்டு, அடுத்த நாளே திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார்.


குரு பக்தி அதிகம் கொண்ட தெய்வவாரி ஆண்டானால் குருவை பிரிந்து இருக்கவும் மனமில்லை, குருவின் வார்த்தைகளை பின்பற்றாமலும் இருக்க முடியவில்லை. குருவின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, மடத்தின் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டாலும், குருவை பிரிந்து இருப்பது அவரை வாட்டியது. அதன் விளைவாக, சில நாட்களில், உடல் நலம் குன்றி படுக்கையில் வீழ்ந்தார். தெய்வவாரி ஆண்டானை பரிசோதித்த மருத்துவர், குருவின் பிரிவு தாங்க முடியாமல் மனதளவில் வருந்திக் கொண்டதால், உடல் நிலை சுகமில்லாமல் போனது என்றும், ஆச்சார்யரைக் காணாவிடில், இன்னும் மோசமடையும் என்றும் கூறினார்.

மருந்துகளால் தெய்வவாரி ஆண்டானை காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்த பிற சீடர்கள், அவரை திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் செல்ல தீர்மானித்தனர். அவரை பல்லக்கில் ஏற்றினர். ஆசானைக் காணப் போகிறோம் என்கிற எண்ணமே தெய்வவாரி ஆண்டானின் உடல் நிலையில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்தது. திருவனந்தபுரத்தை நெருங்கி பயணித்துக் கொண்டு இருந்த பொழுது, ஆளவந்தார் எதிரே வந்து கொண்டு இருந்ததைக் கண்டனர். திருவனந்தபுரத்தில் அநந்த பத்மநாபனை தரிசித்து அவருக்கு சேவை புரிந்து விட்டு, ஆளவந்தார் ஸ்ரீ ரங்கம் திரும்பிக் கொண்டிருந்தார்.


எதிர் நின்ற பல்லக்கைக் கண்ட ஆளவந்தார், ஸ்ரீ ரங்கத்தில் மடத்தை பொறுப்பாக கவனிக்காமல் வாரியாண்டார் வந்ததைக் கண்டு, "வாரியாண்டாரே! பரதன், இராமபெருமான் கட்டளைக்கு இணங்கி நந்திக் கிராமத்தை விட்டு அகலாமல் இருந்தார். ஆனால் நீயோ என் கட்டளைக்கு கீழ் படியாது வந்து விட்டீரே!" என்று கடிந்து கொண்டார்.

ஆசார்யாரை வணங்க பல்லக்கில் இருந்து ஆனந்தமாய் இறங்கிய தெய்வவாரி ஆண்டார், ஆளவந்தாரின் கோபச் சொற்களைத் தாங்க முடியாமல் மூர்ச்சித்து விழுந்து விட்டார். உடன் சென்றவர்கள், ‘‘தங்கள் பிரிவு தாங்காது வாரியாண்டார் உடல் மெலிந்து போனார்! அவரைக் காப்பாற்றவே நாங்கள் இங்கு அழைத்து வந்தோம்.’’ என்று விளக்கினர். தன் பிரிவு தான் வாரியாண்டானின் நிலைக்குக் காரணம் என அறிந்த, ஆளவந்தார், வாரியாண்டானின் ஆச்சார்ய பக்தி கண்டு மனமகிழ்ந்தார்.

வாரியாண்டாரை எழுப்பி, அவருக்கு ஆறுதல் கூறிய ஆளவந்தார், வாரியாண்டானை பத்மநாபனை தரிசித்து வரச் சொன்னார். ஆனால் வாரியாண்டாரோ, "ஆரியப் பெருமானே! (‘ஆரியன்’ என்றால் ‘உயர்ந்தவர்’) எனக்கு அரங்கனும் நீங்களே, அந்தபத்மநாபனும் நீங்களே! மீண்டும் உங்களைப் பிரிய இயலாது" என்றார். மனமகிழ்ந்த ஆளவந்தார், வாரியாண்டாருடனும், தனது சீடர்களுடனும் ஸ்ரீரங்கம் திரும்பினார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "தெய்வவாரி ஆண்டார் போல் ஆச்சார்யரிடத்தில் பக்தி கொண்டேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment