||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஜராசந்தனின் வீழ்ச்சிl
ஜராசந்தன் அவர்களுக்குப் பக்கத்தில் அவன் சென்று, "ஓ கிருஷ்ணா, அயோக்கியனே! என் உறவினர்களைக் கொன்றவனே, சிறுவனாகிய உன்னோடு சண்டை போடுவது எனக்கே அவமானம். திருட்டுத்தனமாக வளர்க்கப் பட்ட உன்னோடு நான் சண்டை போட விரும்பவில்லை. ஓ பலராமா, நீ சண்டை போட இஷ்டப்பட்டால் அதற்குள்ள தைரியம் உனக்கு இருந்தால் என்னோடு சண்டைக்கு வா. ஆனால் சாகத் தயாராக இரு" என்று சொன்னான்.
ஆனால், கிருஷ்ணன் அவனை இடைமறித்து, "ஓ ஜராசந்தா, வீரர்கள் தங்களை பற்றி பெருமையடித்துக் கொள்ளுவதில்லை. அவர்கள் தங்கள் பலத்தைச் செய்கையில்தான் காட்டுவார்கள். உன் வார்த்தைகளைச் சாகச் போகிறவன் உளறுவதாகவே நான் கொள்கிறேன்" என்றான். போர் ஆரம்பித்தது, கிருஷ்ணனைக் கொல்லுவதற்காக, அவனை சுற்றி நாலாபுறமும் ஜராசந்தன் தன் படைகளை நிறுத்தி வைத்தான்.
சண்டைப் பார்ப்பதற்காக மதுராபுரிப் பெண்கள் மொட்டை மாடிகளிலும் மாளிகைகளின் உப்பரிகைகளிலும் நின்றனர். ஆனால் கிருஷ்ணனை சுற்றி எத்தனையோ படைவீரர்கள் பல ஆயுதங்களுடன் நிற்பதை கண்டதும் அவர்கள் பயந்தனர். சிலர் மயக்கமுற்று விழுந்தனர். ஜராசந்தனின் படைபலத்தைக் கண்டு கிருஷ்ணனே ஒரு கணம் திகைத்தான். கிருஷ்ணனின் சிறிய படையை அதிக பலமும் அதிக எண்ணிக்கையும் கொண்ட ஜராசந்தனின் படைகள் வதைத்துக் கொண்டிருந்தன.
உடனேயே கிருஷ்ணன் சார்ங்கம் என்னும் தன் வில்லை எடுத்து, அதில் அம்புகளை ஒன்றன்பின் ஒன்றாகத் தொடுத்து, எதிர்ப்படையின் மீது விட்டான். அவன் மிகவும் குறிபார்த்து அம்புகளை எய்ததனால் யானைகள் குதிரைகள் போர்வீரர்கள் எல்லோரும் சரசரவென்று கீழே விழுந்து செத்தார்கள். அவன் விடாமல் தொடர்ந்து எய்திய ஒரு சூறாவளி நெருப்பு ஜராசந்தனின் படையை அப்படியே அழித்தது போன்று தோன்றியது.
கடைசியில் ஜராசந்தன் ஒருவன் தான் எஞ்சினான். அவன் மிகவும் மனச்சோர்வு அடைந்தான். பலராமன் ஜராசந்தனை இறுகப் பற்றிகொண்டான். அவனைக் கட்ட வேண்டுமென்று நினைத்தான். ஆனால் கிருஷ்ணன் அவனுக்கு எதிர் காலத்தில் வேறு திட்டம் ஏற்பாடு செய்திருந்தான். அதனால் அவனைக் கைது செய்ய வேண்டாமென்று பலராமனிடம் சொன்னான். இந்த அவமானமே ஜராசந்தனுக்குப் போதும் என்று ஆகிவிட்டது. அவன் மிகவும் வெட்கி, காட்டுக்குச் சென்று தவத்தில் ஈடுபடத் தீர்மானித்தான்.
ஆனால் அவனுடைய நண்பர்கள் அவனைத் தடுத்தார்கள். "அரசே! நீங்கள் மிகவும் நன்றாகப் போராடினீர்கள். துரத்ரிஷ்டவசமாக நீங்கள் தோற்று விட்டீர்கள். நீங்கள் மீண்டும் உங்கள் படைபலத்தை திரட்டி, அவர்களோடு போர்ப் புரிய வேண்டும்" என்று சொன்னார்கள். அவர்களால் ஆறுதல் அளிக்கப்பட்ட ஜராசந்தன் தன் நகரம் திரும்பினான்.
ஆனால் இங்கு மதுராவிலோ, மக்கள் குதூகலித்தனர். கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் பெருத்த வரவேற்பு அளித்தார்கள். ஊர் அலங்கரிக்கப்பட்டு விழா கோலத்துடன் விளங்கியது. ஆனால் ஜராசந்தன் அவர்களை நிம்மதியாக விட்டு வைக்கவில்லை. பதினேழு தடவைகள் அவன் மதுரா நகர் மீது படையெடுத்தான். பதினேழு தடவைகளும் அவன் படைகள் அடியோடு அழிகப்பட்டன. அவன் மட்டும் கொல்லப்படாமல் தப்பித்தான். இது அவனுக்குப் பெரிய அவமானமாக இருந்தது. வேறு யாராவது பலமுள்ள அரசனோடு சேர்ந்துக் கொண்டு அவர்களை அழிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். பதினெட்டாவது தடவையாக மதுர நகரைத் தாக்க வேண்டும் என்று ஜராசந்தன் திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது இன்னொரு நிகழ்ச்சி நடந்தது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment