About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 2 November 2023

லீலை கண்ணன் கதைகள் - 58

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஜராசந்தனின் எண்ணம்l

கம்சனுக்கு அஸ்தி, பிராப்தி என்று இரு மனைவியர் இருந்தனர். கம்சன் கொல்லப்பட்டதும் இவர்கள் தங்கள் தகப்பனாரான ஜராசந்தன் வீட்டை அடைந்தனர். ஜராசந்தன் மிக்க பலசாலி; ஆனால் கொடுங்கோல் மன்னன், விதவையாக்கப்பட்ட தன் பெண்களைக் கண்டதும் அவனுக்கு வருத்தம் மேலிட்டது. ஆதலால் அவன் கிருஷ்ணனை மாத்திரம் அல்ல, யாதவ குலத்தையே அழித்து விடுவது என்று தீர்மானித்தான். ஆயிரக்கணக்கான ரதங்களையும்  காலாட் படைகளையும் குதிரைகளையும்,  யானைகளும் கொண்டு மதுராவைத் தாக்க ஏற்பாடுகள் செய்தான்.


கிருஷ்ணனை எப்படியும் கொல்ல வேண்டும் என்று திட்டமிட்ட ஜராசந்தன் மதுரா மீது படையெடுத்தான். சிறிய நகரமான மதுராவை நோக்கி அவனுடைய படைகள் முன்னேறுவதைக் கண்டதும் மதுராவாசிகள் நடுநடுங்கினர். ஆனால் கிருஷ்ணன் நிம்மதியாக இருந்தான். ஜராசந்தனைத் தாக்கச் சரியான தருணம் எது என்று யோசித்தான்.

"நான் அவதாரம் எடுத்ததே துஷ்டர்களை அழிப்பதற்காகத்தான். அதனால் ஜராசந்தனின் படை முழுவதையும் அழித்து விட வேண்டும். அப்பொழுது தான் அவை திரும்பிச் சென்று தங்கள் படைபலத்தை அதிகரித்துக் கொள்ள முடியாது" என்று இப்படிக் கிருஷ்ணன் யோசனை செய்து கொண்டிருந்தபோது சூரியனைப் போல பிரகாசித்த இரண்டு ரதங்கள் ஆகாயத்திலிருந்து கீழே வந்திறங்கின. ஒவ்வொரு இரதத்திலும் ஒரு தெய்விகச் சாரதி இருந்ததோடு, எல்லா விதமான போர்க் கருவிகளும் இருந்தன.

உடனே கிருஷ்ணன் பலராமனை பார்த்து, "இரண்டு ரதங்களிலும் நிறையப் போர்க்கருவிகள் இருக்கின்றன. மதுராவுக்கு இப்பொழுது ஆபத்து ஏற்பட்டு உள்ளது. ஆகவே நீங்கள் ஒரு ரதத்தில் ஏறி, எல்லாப் போர் வீரர்களையும் கொல்லுங்கள். நான் இன்னொரு ரதத்தில் ஏறி, உங்களை பின் தொடர்கிறேன். நாம் எதற்காக அவதாரம் எடுத்திருக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியும், ஆகவே இந்த முழு படையையும் நாம் அழிப்போம்" என்றான் கிருஷ்ணன்.

கிருஷ்ணன் சொன்னதை பலராமனும் ஏற்றுக் கொண்டான். இருவரும் கவசங்கள் தரித்துச் சிறந்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, ரதத்தில் ஏறி, ஒரு சிறிய படை பின் தொடர, ஊருக்கு வெளியே வந்தனர். கிருஷ்ணனும் பலராமனும் ஜராசந்தனுடன் போர் புரியத் தயாரானார்கள். கிருஷ்ணன் பாஞ்சசன்யம் என்ற தன் சங்கை ஊதினான். சங்கநாதத்தைக் கேட்டதும், எதிரிப் படையில் இருந்த வீரர்கள் நடுங்கினர்.

ஜராசந்தன் கிருஷ்ணனையும் பலராமனையும் பார்த்தான். அது அவனுக்குப் பெருத்த ஏமாற்றத்தை தந்தது, அவன் திடகாத்திரமான இரண்டு வீரர்களை எதிர்ப்பார்த்தன். ஆனால் அவன் பார்த்ததோ கொஞ்சி விளையாடக் கூடிய இரண்டு இளம் சிறுவர்கள். இந்த இளம் சிறுவர்களான கிருஷ்ணன் எப்படித் தன் உறவினர்களை எல்லாம் கொன்றான் என்று ஜராசந்தன் மிகவும் ஆச்சரியப்பட்டான். இதை நினைக்க நினைக்க அவனுக்குக் கோபம் தான் அதிகரித்தது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment