About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 11 October 2023

திவ்ய ப்ரபந்தம் - 41 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.19

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 41 - பரமன் நெற்றி
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - பத்தொண்பதாம் பாசுரம்

முற்றிலும் தூதையும்* 
முன் கை மேல் பூவையும்* 
சிற்றிலிழைத்துத்* 
திரி தருவோர்களைப்*
ற்றிப் பறித்துக்* 
கொண்டோடும் பரமன் தன்* 
நெற்றி இருந்தவா காணீரே* 
நேரிழையீர்! வந்து காணீரே|

  • முற்றிலும் - மணல் கொழிக்கும் சிறு  முறங்களையும் 
  • தூதையும் - மணல் சோறு ஆக்குகின்ற சிறு பானைகளையும்
  • முன் கை மேல் - முன் கை மேல் வைத்து கொண்டு விளையாடும்
  • பூவையும் - பறவைகளையும் (மைனா) 
  • சிற்றில் -  மணலினால் சிறு வீடுகளை
  • இழைத்து - கட்டி கொண்டும்
  • திரி தருவோர்களை - விளையாடித் திரியும் சிறு பெண்களின்
  • பற்றி -  கையை வலியப் பிடித்துக் கொண்டு அவர்களுடைய அனைத்தையும்
  • பறித்துக் கொண்டு - அபஹரித்துக் கொண்டு
  • ஓடும் - ஓடுகின்ற 
  • பரமன் தன் - குறும்பில் சிறந்தவனான கண்ணபிரானுடைய 
  • நெற்றி இருந்த வா காணீரே - நெற்றியின் அழகை வந்துப் பாருங்கள்
  • நேர் - நேர்த்தியையுடைய
  • இழையீர் - ஆபரணங்களை அணிந்த பெண்களே! 
  • வந்து காணீரே - வந்துப் பாருங்கள்!

சிறு பெண் குழந்தைகள், தெருக்களில் கொட்டியிருக்கும் மண், கல் ஆகியவையோடு முறம், பானைகள் இவைகளையும் வைத்துக் கொண்டு, தங்களுக்குக் கிடைத்திருக்கின்ற சிறு சிறு பொருட்களைக் கொண்டு, மணலில் சிறிய வீடு கட்டி விளையாடுவர். அவ்வாறு இந்த பெண் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது, கண்ணன் அங்கு இரகசியமாய் சென்று, அவர்கள் கைகளைப் பற்றி பலாத்காரமாக அவர்களிடம் இருக்கின்ற எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு வேகமாய் ஓடி விடுவானாம். தன்னைப் பிடித்து விடக்கூடாது என்பதற்காக வேகமாக ஓடுகின்ற அந்த சிறு நெற்றியில் முத்து முத்தாக வியர்த்து கொட்டி, அழகாக இருக்குமாம். தன் வயதொத்த பெண் பிள்ளைகளிடமிருந்து பொருட்களைப் பறித்துக் கொண்டு ஓடுகின்ற இந்த குறும்பு பிள்ளையின் நெற்றியழகை வந்துப் பாருங்கள் என்று ஆபரணங்கள் அணிந்த அழகிய பெண்களை அழைக்கிறாள் யசோதை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment