About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 11 October 2023

லீலை கண்ணன் கதைகள் - 48

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

அக்ருரரின் பார்வையில் கிருஷ்ணன்|

தேர் மிக விரைவாக சென்று யமுனை நதி கரையை அடைந்தது, அங்கு கிருஷ்ணனும் பலராமனும் நீராடி விட்டு, அந்த புனித நீரை குடித்துவிட்டு வந்தனர், அவர்களின் முந்தைய வாழ்க்கையை நினைத்துக்கொண்டு கரையில் நின்றுகொண்டிருந்தனர், சில நேரம் கழித்து தேருக்கு திரும்பி வந்தனர், தேரும் ஒரு பெரிய மர நிழலில் நின்றுக்கொண்டிருந்தது. அக்ருரன் கிருஷ்ணனிடம் அனுமதி பெற்றுக்கொண்டு யமுனையில் நீராட சென்றார்.


அவர் நீருக்குள் மூழ்கும் போது காயத்ரி மந்திரத்தை உச்சரித்து கொண்டே மூழ்கினார். அங்கு வித்தியாசமான காட்சியை காண நேர்ந்தது. பலராமனும் கிருஷ்ணனும் தண்ணீருக்குள் நிற்பதைக் கண்டார். அவர்கள் இருவரும் தேரில் தானே இருந்தார்கள் என்று நினைத்துக்கொண்டே வெளியே வந்து தேரினை பார்த்தார். ஆனால் அவர்கள் இருவரும் அங்கே இருந்த தேரில் அமர்ந்து இருந்தனர். குழப்பத்தில் மறுபடியும் நீரில் இறங்கி பார்த்தார். அங்கு ஒரு அதிசயம் நிகழ்ந்தது. நீருக்கு அடியில் தெய்விக சர்ப்பமான ஆதிசேஷனை, ஆயிரம் தலைகளுடன், நீல நிற ஆடையில் கண்டார். ஆதிசேஷன் மீது நமது தெய்வமான அந்த நாராயணனே மஹா விஷ்ணுவே சயன கோலத்தில் காட்சி அளித்தார். நீல நிறத்தில் இருக்கும் கிருஷ்ணன், மஞ்சள் வண்ண ஆடை பூண்டு, நான்கு கரங்களுடன் தோன்றினர். அவரை சுற்றி பல முனிவர்கள் துதி பாடுவதையும் கண்டார்.

அக்ருரர் மனதில் சந்தோஷம் பெருக்கெடுத்து ஓடியது. வசுதேவரின் மகனான கிருஷ்ணனும் பலராமனும் ஷாட்சாத் அந்த நாராயணனும், ஆதிசேஷனும் தான் என்று நம்பினார். அவரது கைகளை மடக்கி தெய்வத்தை வணங்கினர், கண்களை மூடி வணங்கும் தருவாயில், அக்ருரன் பார்வையில் இருந்து நாராயணன் மறைந்தார். அக்ருரர் உடனே தண்ணிரில் இருந்து வெளியே வந்து தேரினை நோக்கி ஓடினார். அக்ருரர் முகத்தில் உள்ள மாற்றத்தை கிருஷ்ணனால் உணர முடிந்தது. கிருஷ்ணன் அக்ருரரை பார்த்து, "நீங்கள் எதையோ பார்த்து வியப்படைந்தது போல இருக்கிறிர்கள், தண்ணீர் உள்ளே மிகவும் குளிரோ? உங்கள் முடி நேராக நிற்கிறது?"

கிருஷ்ணனிடம் "ஆம் கிருஷ்ணா, இன்று நான் கண்ட காட்சி என் கண்களை திறந்து வைத்தது. இன்று நீங்கள் யார் என்ற உண்மையை புரிந்து கொண்டேன்" என்றார் அக்ருரன். அக்ருரர் தேரில் ஏறி ஓட்ட ஆரம்பித்தார். மாலை நேரம் மதுராவை அடைந்தனர், அதே நேரத்தில் நந்தரும் சில கோபியரும் வந்த வேறு ஒரு தேர் குறுக்கு பாதை வழியாக இவர்களுக்கு முன்னரே வந்தடைந்தது. இவர்கள் மதுராவின் நுழைவு வாயில் அருகில் காத்திருந்தனர். மதுரா வந்ததும் கிருஷ்ணன் தேரினை நிறுத்த சொன்னான், "அக்ருரா, நீங்கள் உங்கள் வீட்டுக்கு செல்லுங்கள், கொஞ்ச நேரம் இங்கயே நாங்கள் ஓய்வெடுத்துவிட்டு பிறகு வருகிறோம். இந்த ஊரினை சுற்றி பார்க்க விரும்புகிறோம். இந்த விஷயத்தை உங்கள் அரசரிடம் கூறுங்கள்."

அக்ருரன், கண்களில் கண்ணீருடன், "நீங்கள் இல்லாமல் என்னால் ஊருக்குள் நுழைய முடியாது, நீங்கள் எல்லோரும் எங்கள் வீட்டுக்கு வந்து எங்கள் விருந்தை ஏற்கவேண்டும்." கிருஷ்ணன் அவர் கண்ணீரை துடைத்து, "நான் கண்டிப்பாக உங்கள் வீட்டுக்கு வருகிறேன், என்மீது பக்தி உள்ளவர்களை நான் எப்போதும் புறகணிக்க மாட்டேன், உங்கள் வார்த்தையை மீற மாட்டேன், ஆனால் அதற்கு முன்பு நான் கம்சனை அழிக்க வேண்டும், இதை முடித்து விட்டு உங்கள் வீட்டுக்கு நான் வருகிறேன்" என்றார்.

பிறகு அக்ருரர் மனவருத்தத்துடன் தனியாகவே ஊருக்குள் சென்று, கம்சனை பார்த்துவிட்டு, கிருஷ்ணன் வந்துவிட்டதாக தெரியபடுத்தி விட்டு விடைபெற்றார்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment