||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 42 - கண்ணன் திருக்குழல்கள்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - இருபதாம் பாசுரம்
அழகிய பைம் பொன்னின்*
கோலங்கைக் கொண்டு*
கழல்கள் சதங்கை*
கலந்தெங்கும் ஆர்ப்ப*
மழ கன்றினங்கள்*
மறித்துத் திரிவான்*
குழல்கள் இருந்தவா காணீரே*
குவி முலையீர்! வந்து காணீரே|
- அழகிய - அழகியதும்
- பைம் பொன்னின் - பசும் பொன்னால் செய்யப்பட்டதுமான
- கோல் - மாடு மேய்க்குங் கோலை
- அங்கை - அழகிய கையிலே
- கொண்டு - பிடித்துக் கொண்டு
- கழல்கள் - பாதங்களில் உள்ள வீரக்கழல்களும்
- சதங்கை - சதங்கைகளும்
- கலந்து - ஒன்றோடு ஒன்று கலந்து
- எங்கும் ஆர்ப்ப - எல்லா இடங்களிலும் சப்திக்க
- மழ - இளமை பொருந்திய
- கன்று இனங்கன் - கன்றுகளின் கூட்டங்களை
- மறித்து - கை விட்டுத் தனித்து போகாமல் மடக்கி
- திரிவான் - ஓடி ஓடி திரியும் கண்ணபிரானுடைய
- குழல்கள் - சுருண்ட கூந்தல்
- இருந்தவா காணீர்! - அழகாக இருப்பதை வந்து பாருங்கள்
- குவி முலையீர்! - குவிந்த முலைகளை உடைய அழகிய இளம் பெண்களே!
- வந்து காணீர்! - வந்து பாருங்கள்
அழகான பசும் பொன்னால் செய்யப்பட்ட மாடு மேய்க்குங் கோலை தன் அழகிய உள்ளங்கைகளில் பிடித்தவாறே கண்ணன் திரிகையில், அவனுடைய காலணிகளும், சலங்கைகளும், அவன் நடக்கும் போதெல்லாம் ஒலி எழுப்புகின்றன. அவ்வொலி கானகமெங்கும் எதிரொலிக்க, இளம் கன்றுகள் மந்தையை விட்டுத் தனித்து வழி செல்லும் மழலைக் கன்றுக்குட்டிகளை மறித்து மந்தையோடு இணைத்து, ஆநிரைகளின் மேய்ச்சலுக்காகக் கானகமெங்கும் அலைந்து திரிபவனின் சுருண்ட கூந்தலழகை வந்து பாருங்கள். இந்த கோவலக் குமரனின் கூந்தலழகை காணுமாறு அங்கிருந்த அழகிய இளம் பெண்களை அழைக்கிறாள் யசோதை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment