||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 23 - பாதக் கமலங்கள்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்
சீதக் கடலுள்* அமுதன்ன தேவகி*
கோதைக் குழலாள்* அசோதைக்குப் போத்தந்த*
பேதைக் குழவி* பிடித்துச் சுவைத்துண்ணும்*
பாதக் கமலங்கள் காணீரே*
பவள வாயீர்! வந்து காணீரே| (2)
- சீதம் - குளிர்ந்த
- கடல் உள் - திருப்பாற்கடலில்
- அமுது அன்ன - அமுதாகப் பிறந்த லக்ஷ்மியைப் போன்ற
- தேவகி - தேவகி பிராட்டியால்
- கோதைக் - பூமாலையால் அலங்கரிக்கப்பட்ட்
- குழலாள் - கேச பாசத்தை உடைய
- அசோதைக்குப் - யசோதைப் பிராட்டிக்கு
- போத்தந்த - தத்து கொடுக்கப்பட்ட
- பேதைக் - ஒன்றுமறியாத
- குழவி - சிசுவான கண்ணபிரான்
- பிடித்து - தன் கைகளால் பிடித்து
- சுவைத்து உண்ணும் - ருசித்து உண்ணும்
- பாதக் கமலங்கள் - திருவடித் தாமரைகளை
- காணீரே - வந்து பாருங்கள்
- பவள வாயீர்! - பவளம் போன்ற அதரத்தை உடையவர்களே!
- வந்து காணீரே - வந்து பாருங்கள்
கண்ணனின், திருமேனி அழகைப் பாதம் முதல் கேசம் வரை (அடி முதல் முடி வரை) கூறியுள்ளார். பெரியாழ்வார். திருப்பாற்கடலில் தோன்றிய தேவர்களுக்கு உணவான சாவாமருந்து என்று சொல்லப்படும் அமிழ்தத்தை ஒத்த தேவகிப் பிராட்டியானவர், திருப்பாற்கடலில் தோன்றிய அமிழ்தத்தினைப் போன்றவர். தன் திருவயிற்றில் உதித்த கண்ணபிரானை, கம்சனிடமிருந்து குழந்தையைக் காப்பதற்காக நறுமணமிகுந்த, செறிவாகத் தொடுக்கப்பட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கூந்தலை உடையவளான யசோதை பிராட்டியிடம் அனுப்பி வைக்கிறாள். ஏதும் அறியாப் பச்சிளங் குழந்தை கண்ணனோ தன் காலின் விரல்களை எடுத்து வாயில் வைத்து விரும்பிச் சுவைக்கின்ற அந்த அழகிய பாதமலர்களை, வந்து பாருங்கள்! தாமரை இதழ் போன்று மென்மையாகவும் இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கின்ற அழகினைப் பாருங்கள் என்று இந்த அழகை வெகுவாக ரசித்த யசோதை, அங்குள்ள பவளம் போன்று சிவந்த வாயினை உடைய பெண்களை அழைத்து இந்த திவ்ய காட்சியை அவர்களும் அனுபவிக்குமாறு செய்கிறாள். எம்பெருமானுடைய திருவடியில் தேன், வெள்ளம் போல் இருக்கிறதாக வேதங்கள் கூறுகிறது என்றும் அவனுடைய திருவயிற்றில் கிடக்கும் உலகங்கள் எல்லாம் உஜ்ஜீவநமாக்கவே இவ்வாறு செய்கிறான் எனபதும் பெரியவர்களின் கருத்து.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment