||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
013. திருவிண்ணகரம்
மார்க்கண்டேய க்ஷேத்ரம் – கும்பகோணம்
பதிமூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்
ஸ்ரீ ஒப்பிலியப்பன் பெருமாள் திருக்கோயில்
ஸ்ரீ பூமிதேவி தாயார் ஸமேத ஸ்ரீ ஒப்பிலியப்பன் பெருமாள்
திருவடிகளே சரணம்||
- பெருமாள் மூலவர்: ஒப்பிலியப்பன், உப்பிலியப்பன்
- பெருமாள் உற்சவர்: திருவிண்ணகரப்பன், பொன்னப்பன்
- தாயார் மூலவர்: பூமி தேவி
- திருமுக மண்டலம் திசை: கிழக்கு
- திருக்கோலம்: நின்ற
- புஷ்கரிணி/தீர்த்தம்: அஹோராத்ர
- விமானம்: விஷ்ணு, சுத்தானந்த
- ப்ரத்யக்ஷம்: மார்கண்டேயர், கருடன், காவேரி, தர்ம தேவதை
- ஆகமம்: வைகாநஸம்
- ஸம்ப்ரதாயம்: வட கலை
- மங்களாஸாஸநம்: 3 ஆழ்வார்கள்
- பாசுரங்கள்: 47
--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி
ஸ்தல புராணம்
திருமால், மார்க்கண்டேயரிடம் ஒரு பங்குனி மாத திருவோண நக்ஷத்ரம் அன்று பெண் கேட்டு வந்தார். திருமணம் ஐப்பசி மாத திருவோணத்தன்று நடந்தது. இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தில், திருமால் சன்னதியில் சாம்பிராணி தூபம் காட்டப்பட்டு, அகண்ட தீபமும், வால் தீபமும் ஏற்றப் படுகிறது. இந்த விளக்கில் மகாலட்சுமி எழுந்தருளி இருப்பதாக ஐதீகம். இந்த தீப தரிசனம் பார்த்தால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆவணி திருவோணத்தன்று காலையில் பெருமாள் கருட வாகனத்தில் "உதய கருட சேவை' அருள்கிறார். பின், "தெட்சிண கங்கை' என்னும் நாட்டாறு தீர்த்தத்தில் நீராடுகிறார். அதன் பின்பு சிறப்பு பூஜை நடக்கிறது. இங்கு ஸ்வாமிக்கு காட்டிய தீபத்தின் முன்னால், அருள் வாக்கு சொல்லும் வழக்கமும் இருக்கிறது.
இத்தலத்தில் ஸ்வாமி பாதம் நோக்கி காட்டிய வலது கையில் கீதை உபதேசமான, "மாம் ஏகம் சரணம் விரஜ' என்று எழுதப்பட்டுள்ளது. இதற்கு "என்னை சரணடைபவர்களை காப்பேன்' என்று பொருள். நம்மாழ்வார் இவரை "யாருக்கும் ஒப்பில்லாமல் உயர்ந்திருப்பவர்' என்ற பொருளில் மங்களா ஸாஸநம் செய்துள்ளார். அவருக்கு திருவிண்ணகரப்பன் (மூலவர்), பொன்னப்பன் (உற்சவர்), மணியப்பன், என்னப்பன் (பிரகார சன்னதி), முத்தப்பன் என ஐந்து கோலங்களில் திருமால் காட்சி தந்தருளினார். இவர்களில் முத்தப்பன் சன்னதி தற்போது இல்லை. மணியப்பன் சன்னதியில் ஸ்வாமியுடன் சங்கு, சக்கரம் அருகிலேயே இருப்பது விசேஷமான தரிசனம். இக்கோயிலில் நைவேத்யங்கள் உப்பில்லாமலேயே தயாரிக்கப் படுகிறது. உப்புள்ள பண்டங்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்வது பாவத்தை தரும் என்றும் நம்பப்படுகிறது. மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் என்பதால், இங்கு ஆயுள் விருத்தி, மிருத்யுஞ்ச ஹோமம் நடக்கிறது. இத்தலத்திலுள்ள அஹோத்ர புஷ்கரணி மிகவும் விசேஷமானது. இதற்கு "பகலிராப் பொய்கை' என்றும் பெயருண்டு. இந்த குளத்தில் இரவு, பகல் எந்த நேரமும் நீராடலாம் என்பது சிறப்பம்சம்.
பொதுவாக பூமாதேவி பெருமாளுக்கு இடது புறத்தில் இருப்பாள். ஆனால், அவர் அவளை இங்கு மணம் முடித்த தலம் என்பதால், ஸ்வாமிக்கு வலது புறம் இருக்கிறாள். பூமாதேவியை, திருமாலுக்கு, மார்க்கண்டேயர் மணம் முடித்து தந்த போது ஒரு போதும் தன் மகளை விட்டு பிரியக் கூடாது என்று நிபந்தனை விதித்தார். எனவே, பெருமாள் இங்கு தாயாருடன் இணைந்தே பவனி வருவார்.
மகாவிஷ்ணுவின் மனைவியும், லட்சுமியின் ஒரு அம்சமுமான பூமாதேவி, விஷ்ணுவிடம், "எப்போதும் மகாலட்சுமியை மட்டும் மார்பில் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அந்த பாக்கியத்தை தாருங்கள்,'' என்று கேட்டாள். மகாவிஷ்ணு அவளிடம், "நீ பூலோகத்தில் ஒரு ரிஷியின் மகளாக, திருத்துழாய் (துளசி) என்ற பெயரில் பிறந்து இந்த பேற்றைப் பெறுவாய்,'' என்றார். இச்சமயத்தில், என்றும் பதினாறு வயதுடைய மார்க்கண்டேய மகரிஷி, மகாலட்சுமியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டி தவமிருந்தார். லட்சுமியின் அம்சமான பூமாதேவி, குழந்தை வடிவில் ஒரு துளசிச் செடிக்கு கீழே கிடப்பதைக் கண்டார். தன் ஞான திருஷ்டியால் அவள் லட்சுமியின் அம்சம் என்பதை அறிந்து, துளசி என பெயர் சூட்டி வளர்த்து வந்தார். திருமண வயது வந்த போது, திருமால், ஒரு முதியவர் வேடத்தில் சென்று அவரிடம் பெண் கேட்டார். மார்க்கண்டேயர் சம்மதிக்கவில்லை. மேலும், "சிறியவளான என் மகளுக்கு சாப்பாட்டில் சரியாக உப்பு போட்டுக்கூட சமைக்கத் தெரியாது. அத்தகையவளை நீங்கள் மணம் முடிப்பது சரி வராது,'' என்று ஒதுங்கிக் கொண்டார். திருமாலோ விடுவதாக இல்லை. உப்பில்லாத சமையலாக இருந்தாலும் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று வற்புறுத்தினார். தன் தவ வலிமையால் வந்திருப்பது திருமால் என்பதை உணர்ந்த மார்க்கண்டேயர், தன் மகளை மணம் முடித்து கொடுத்தார். உப்பில்லாத சாப்பாடு சாப்பிட ஒப்புக் கொண்டதால் உப்பிலியப்பன் என்றும், ஒப்பில்லாத பெருமை உடையவர் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் திருநாமம் பெற்று அத்தலத்தில் மனைவியுடன் எழுந்தருளினார். துளசிதேவி அவர் மார்பில் துளசி மாலையாக மாறி நிரந்தரமாக தங்கினாள். இதனால் தான், எல்லாப் பெருமாள் கோயில்களிலும் துளசி மாலை பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment