||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
வியாஸ நாரத ஸம்வாதம் - 1
ஸ்கந்தம் 01
ஸூத பௌராணிகர்,
நாராயணம் நமஸ்க்ருத்ய நரம் சைவ நரோத்தமம்
தேவீம் ஸர்ஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயமுதீரயேத்|
என்று நர நாராயணர்களாக அவதரித்த பகவான், வியாஸர் ஸரஸ்வதி தேவி அனைவரையும் துதித்த பின்னர், பாகவதம் உருவான நிகழ்வை விவரிக்கிறார்.
ஸரஸ்வதி நதி தீரத்தில் தனது ஆசிரமத்தில் அமர்ந்திருந்தார் வியாஸர். ஒன்றே கால் லக்ஷம் ஸ்லோகங்கள் கொண்டு விநாயகரின் உதவியோடு மஹாபாரதத்தை முடித்திருந்தார். பெரிய மனத்திருப்தி ஏற்பட்டிருந்தது.
இனி கலியுகம் வரப் போகிறது. அந்த மக்களை நல்வழிப்படுத்தி பகவானிடம் சேர்க்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்ட நிம்மதி. பதினேழு புராணங்கள், அத்தனை விதமான தர்மங்களையும், கடைப்பிடிக்கும் முறைகளையும் உதாரணங்களோடும், கதைகளோடும் விளக்கி மஹாபாரதம் செய்தாயிற்று. அது ஒன்றைப் படித்தாலே போதும். அனைவருக்கும் நன்னெறியில் ஒழுகும் விதம் தெரிந்து விடும். அநாதியான வேதம். எப்படியோ தலையைப் பிய்த்துக் கொண்டு வகைப்படுத்தியாயிற்று.
கர்ம மார்கத்திற்காக நால்வகை வேதங்கள், ஞான மார்கத்திற்காக நூற்றி எட்டு உபநிஷத்துக்கள் எல்லாம் முடித்தாயிற்று. இனி கலியுகத்தில் வரும் மாந்தர்களுக்கு ஒரு கவலையும் இல்லை. என்றெல்லாம் மகிழ்ந்தவருக்கு தான் கொடுத்த கிரந்தங்களை மக்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்க ஆவல் ஏற்பட்டது.
கண்களை மூடி சற்று பவிஷ்யத்தைப் பார்த்தவர் இடிந்து போனார். வேதங்களையும், புராணங்களையும் சீந்துவாரில்லை. எங்கோ ஒரு சிலரைத் தவிர வேறெவரும் அவற்றைச் சட்டை செய்யவில்லை. மிகவும் சுவையான, எக் காலத்திற்கும், அனைத்து மக்களுக்கும் ஏற்றவாறு தர்மங்களை எடுத்துச் சொல்லும் மஹாபாரதமும் வீண் விவாதங்களுக்கும் பட்டி மன்றம் நடத்துவதற்குமே பயன்பட்டது. மக்கள் எப்போதும் எதையோ தேடி அலைந்து கொண்டேயிருந்தனர்.
தலை சுற்றியது வியாசருக்கு. பகவத் ஸ்மரணையின்றி ஒரு பெரும் மக்கள் கூட்டம். எப்படி கரையேறுவார்கள்? தன் உழைப்பு அவ்வளவும் வீணாகி விட்டதாய் உணர்ந்தார்.
தளர்ந்த மன நிலையோடு தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.
மஹான்களின் கவலை எப்போதும் உலகிலுள்ளோரின் நன்மையைப் பற்றியதே. அவர்களுக்கு அவ்வாறு ஏற்படும் கவலை ஒரு பெருத்த நன்மையில் முடியும். ஸாதுக்களுக்கு கவலை ஏற்படுமாயின் அவ்விடத்தில் பகவான் உடனே ஆவிர்பவிப்பான். அல்லது தகுந்த குருவை உடனே அனுப்பி வைப்பான். நாரதரின் கவலையைப் போக்க ஸனத் குமாரர் வந்ததை மாஹாத்மியத்தில் பார்த்தோம்.
வியாஸரின் கவலையைப் போக்க நாரதரே அவ்விடம் வந்தார். அவரே ஸ்ரீமத் பாகவதத்திற்கு மூல காரணமும் ஆவார்.
வியாஸர் நாரதர் வருவதைக் கண்டதும் வரவேற்று, அவரை உரிய மரியாதைகளுடன் பூஜை செய்தார்.
வியாஸரைப் பார்த்து நாரதர் கேட்டார்,
"நீங்கள் நலமோடு இருக்கிறீரா? உடல் நலக் குறைவா? அல்லது மனத்தில் ஏதாவது கவலையிருக்கிறதா? உம்மைப் போன்ற மஹாத்மாக்களின் கவலை லோகோத்தாரணத்திற்கு வழியாயிற்றே"
வியாஸர் சொன்னார்,
"நாரதரே! நீங்கள் சூரியனைப் போல் அனைத்தையும் அறிவீர். காற்றைப் போல் எல்லா இஅங்களிலும் நுழைந்து ஸஞ்சாரம் செய்யக் கூடியவர். தங்களது உபாசனா தெய்வமோ பரம புருஷனேயாவார்.
தங்களைப் போன்ற ஸாதுக்களிடம் எதையாவது மறைக்க முடியுமா? நீங்கள் ஹ்ருதயம் நுழைந்து அனுக்ரஹம் செய்பவராயிற்றே. என் கவலை தங்களுக்குத் தெரியாதா? அது நீங்குவதற்கு உபாயமும் தாங்களே சொல்லுங்கள். நீங்கள் ஒருவரும் சாதிக்க முடியாத பெரிய காரியத்தை சாதித்திருக்கிறீர்கள். வேதத்தைப் பகுப்பதென்ன எளிதா? எவ்வளவு புராணங்கள் செய்திருக்கிறீர்! மஹாபாரதம் போல் உண்டா? ஆனாலும்,"
"என்ன ஆனாலும்?"
"பகவானின் பெருமைகளையும், குணங்களையும் நாமங்களையும் வலியுறுத்துவது போல் ஒரு கிரந்தம் செய்யவில்லை. அதுவே கலியுகத்திற்குப் பயன்படும்."
வியாசருக்கு ஒன்றும் புரியவில்லை.
"என்ன ஸ்வாமி சொல்கிறீர்? வேதமே பகவானின் புகழைத் தானே பாடுகிறது? அத்தனை புராணங்களும் பகவானின் மகிமைகளைத் தானே பறை சாற்றுகின்றன? மஹாபாரதத்தில் பகவானின் லீலைகள் இல்லையா?"
"இருக்கிறது ரிஷியே. ஆனால், ப்ரத்யேகமாக பகவன் நாமத்தையும், குணங்களையும் மட்டும் வலியுறுத்துவதாக இல்லை. வேதத்தில் பகவானுக்கு ஆயிரம் தலைகள், ஆயிரம் கண்கள், ஆயிரம் கைகள் என்றெல்லாம் வர்ணிக்கிறீர். உண்மைதான் என்றாலும், லலிதமாக ஆராதிப்பதாக இல்லை. ஒரு குழந்தை பிறந்தால் அதைக் கண்ணே மணியே என்று கொஞ்சுவார்களா? அது இவ்வளவு எடை, இத்தனை எலும்புகள், என்றெல்லாம் கொஞ்சுவார்களா? லலிதமாக, அத்தனை பேர் வாயிலும் எளிதாக நுழையும் வண்ணம் சித்ர பதங்களைப் போட்டு ஒரு புராணம் செய்யுங்கள். அது பகவன் நாம மகிமையை வலியுறுத்த வேண்டும். அதைப் படித்ததுமே ஹ்ருதயத்தில் பக்தியைத் தூண்ட வேண்டும்."
"முக்கியமாக தப்பும் தவறுமாகப் படித்தாலும், விபரீத பலன்களைத் தராமல், நற்பலன்களையே கொடுக்க வேண்டும். படிக்கத் தெரியா விட்டாலும் கேட்டலே பகவத் சரண சம்மந்தத்தைக் கொடுக்க வேண்டும். அந்த கிரந்தத்தின் ஒரே ஒரு ஸ்லோகத்தின் பாதி அடியை யாராவது எதேச்சையாகக் கேட்டாலும் முக்தி கிட்ட வேண்டும்." நாரதர் நம் மீதுள்ள கருணையினால் அடுக்கிக் கொண்டே போக, வியாஸர் திருதிருவென்று விழித்தார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment